Share knowledge

Support Wikipedia

திங்கள், 11 செப்டம்பர், 2017

நெல்சன் மண்டேலாவும் ஏழு சட்டைகளும்


அரசியல் தலைவர்கள், பெருந்திரளான மக்களை கிளர்ச்சியடையச் செய்து கவர்ந்திழுப்பதில் தேர்ந்த பேரழகிகள் (mass seductress)  என்கிறார்,   ஜான்   கார்லின் (Invictus - John Corlin).  இந்த வரி,  மறைந்த என் தாய்வழி  ஆச்சி குருவத்தாய், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில், கூட்டத்தில் ஒருத்தியாக நின்று,  அவரின் வயதுடைய, எம்.ஜி.ராமசந்திரனின் கடிகாரம் அணிந்த  கைகளை மட்டும் நேரில் பார்த்ததை பிரமிப்புடன் விவரித்த  ஒவ்வொரு சொற்களையும் மீண்டும்  நினைவூட்டியது.  அணியும் உடை வழியாக மக்கள் கூட்டத்திற்கு அழுத்தமான பாதிப்பை செலுத்தாத  அரசியல் தலைவர்கள் மிகக் குறைவு.  வரலாற்றின் பக்கங்களில் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கும்,   இந்த அதிமானுடர்களை முதன் முதலில் கண்டதை விவரிக்கும் நினைவுக் குறிப்புகளில், அவர்களை வியப்பில் ஆழ்த்திய உடை விவரிப்பு  கண்டிப்பாக இருக்கும்.  சார்லி சாப்லின், காந்தியை முதன் முதலில் சந்திக்கும்போது,  கொடும் குளிர் நாட்டின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத, இந்திய பாரம்பரிய கதர் துணியை  ஒழுங்கற்று  சுற்றி அணிந்து, பிரிட்டன் பத்திரிக்கைகளின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் என்கிறார்.

நெல்சன் மண்டேலாவை முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சியை விவரிக்கும், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தோழர்கள்,  அரசியல் எதிர் கருத்தினை உடையவர்கள், பத்திரிக்கையாளர்கள், சாமனியர்கள் என அனைவரும் தவறாமல் அவரின் பிறிதொன்றில்லாத உடைத் தேர்வினைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பள்ளி மாணவனாக, சுரங்க தொழிலாளியாக,  இளம்  வழக்கறிஞராக, பகுதி நேர  குத்து சண்டை வீரராக,  ஆப்பிரிக்க தேசியவாதியாக, ஒரு அரசியல் கட்சியின் தொண்டனாக, பின்னர்  அதே கட்சியின் தலைவனாக,, “தேசத்தின் ஈட்டி’  (Umkonta we Sizwe) என்கிற ஆயுத இயக்கத்தின் தலைவனாக,  சிறைக் கைதியாக, ஒரு குடிமகன் ஒரு ஓட்டு என்று அனைத்து இன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, நெல்சன் மண்டேலா அணிந்த உடைகள் அழுத்தமானவைகள். அவற்றில் முதன்மையானவைகள் எனக் நான்  கருதும் உடைகளையும் அவற்றை அவர் அணிந்த சூழலையும் பற்றி காண்போம்.

மெதடிச  பள்ளியில் மாணவனான மண்டேலா படித்த பள்ளி விழாவிற்கு ஆப்பிரிக்கர்களின் வரலாற்றை பாடலாக பாடும் பாணரும்,  பௌராணிகரும், புலவருமான க்ருனோ மிக்யாயி (Krune Mqhayi ), வருகை தருகிறார்.  சிறுத்தை தோலினாலான ஆடையும்,  அஸ்ஸகை (Assagai)  ஈட்டியை இரு கைகளிலும் ஏந்தியபடி,  வரலாற்று பாடல் பாடி,  சன்னதம் கொண்டு ஆடும் காட்சி,  அதுவரை அவரின் அய்யாவழி மரபான  டோசா  (Xhosa) இனத்தின் ஒற்றைப்படையான வரலாற்றை மட்டும் அறிந்துவைத்திருந்த மண்டேலாவிற்கு, டோசா இனத்துடனான,  மற்ற ஆதிகுடிகளின் தொடர்பையும் , ஆங்கிலேயர்கள், டச்சு வெள்ளையர்களின் வருகையினால்  ஆப்பிரிக்க மண்ணில் பண்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றியுமான அடிப்படை புரிதலை தருகிறது. அந்த நிகழ்வு,  மேற்கிலிருந்து வந்த மின்சாரம், ஆப்பிரிக்க மண்ணின்  அஸ்ஸகை (Assagai) ஆயுதத்தில் தொட்ட கணத்தில் ஒளிர்ந்த மின்னல் தோன்றிய காட்சி போல அவருக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.  பின்னர் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்து ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டபட்டு,  மரண தண்டனை விதிக்கப்படலாம் என்கிற நிலையில் Rivonia Trail வழக்கில் அவர் எதிர்வாதம் செய்யும் போது,  அதே  பாரம்பரிய உடையை தானும் அணிந்திருந்தார்.  தன்னை ஆப்ரிக்க  ஆதிகுடிகளின் பிரதிநிதியாக முன்னிருத்தி  ‘நான் இறப்பதற்கு   தயாராக இருக்கிறேன்’ என்று உணர்வுடன் உரையாற்றினார்.  


தென் ஆப்ரிக்க  டச்சு  வெள்ளை ஆப்ரிக்கேர் (Afrikaner) சிறுபான்மை அரசில்,  ஒரு ஆப்பிரிக்கர் (African),   உள்நாட்டில் பயணம் செய்ய,  அவர் ஆதிகுடி கடவு சீட்டினை(Native Passes)  வைத்திருக்க வேண்டும். காவலாளி கோரினால்,  காட்ட வேண்டும். இல்லையென்றார்,  உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த சூழலில் மண்டேலாவிற்கு, திருமண ஏற்பாடு நடக்கிறது,  உடன்பாடில்லை, பேசி நிறுத்தப் பார்க்கிறார்,  பலனில்லை என்பதால்,  கடவுச் சீட்டு இல்லாமல் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்ற ஆபத்துடன் பயணம் செய்து, ஜோகான்ஸ்பெர்க் வருகிறார்.  தூரத்து உறவான அலுவலரிடம் மன்றாடி போலி சீட்டு பெறுகிறார்.  ‘ஆப்ரிக்கர்கள் அதிகம் உள்ள பகுதி, கவனமாக செல்லவும்’ போன்ற அறிவிப்பு பலகைகள் கண்டு வருத்தமடைகிறார்.  போரிட்டு ஓய்த இடத்தை நினைவுபடுத்தும் வறண்ட சுரங்கத்தில் வேலை தேடுகிறார். நாட்டுபுறத்தான்கள்தான்  கேள்வி கேட்காமல் வேலை செய்வார்கள் என்பதால், விசாரணை அதிகம் இன்றி, இரவுநேர கண்காணிப்பாளராக வேலைக்கு சேர்கிறார். ஆப்ரிக்க  வேலையாட்களிடம் அதீத வறுமையும், கீழான வாழ்நிலையும், ஆப்ரிக்க அலுவலர்களிடம் எந்த குற்ற உணர்வு இல்லாமல் நிரம்பி வழியும் ஊழலையும்  கசப்புடன் காண்கிறார்.ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகளின் வறிய உடையை தானும் அணிந்திருந்த இந்நாட்களில்தான் தன் வாழ்நாளை ஆப்ரிக்க தேசிய விடுதலைப்  போராட்டத்திற்கு அர்பணிக்க முடிவு செய்கிறார்.  பின்னர் விடுதலைப் போராட்டத்தின்போது,அடிமைப்படுத்துதலின் அடையாளமான இந்த ஆதிகுடி கடவுச் சீட்டினை, இணை ஊடகங்களை திரட்டி முதல் ஆப்பிரிக்கராக தானே எரிக்கிறார்.


பயிலும்  இளநிலை வழக்கறிஞராக, ஜோகன்ஸ்பெர்கில், வசதிபடைத்த ஆப்ரிக்கர்களின் சொத்து தொடர்பான சட்ட சிக்கல்களை மேலாண்மை செய்யும் அறிவுத்திறன்மிக்க, நடைமுறை ஞானமுள்ள,  வால்டர் சிசிலு (Walter Sisulu) அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். பின்னாட்களில் மண்டேலாவின் அரசியல் போராட்டத்தில் உற்ற தோழரானவர்  வால்டர் சிசிலு.   நிறப்பாகுபாடு துளியளவும் காட்டாமல், அவருடன் இயல்பாக பழகும் ஆப்ரிக்கேர் நாட் பிரெக்மேன் (Nat Bregmen) மூலம்  தென்னாப்ரிக்கா பொதுவுடமை கட்சியின் SACP ( South African Communist Party) தொடர்பு ஏற்படுகிறது. தொடர்ந்து ஆப்ரிக்கர் தேசியவாதம்(African Nationalism), பொதுவுடமை பற்றி அறிந்து கொள்ள நூல்களை கற்கிறார்,  வர்க்க வேறுபாடு களைதல்தான், பொதுவுடமையின் நோக்கம், அது தொழிற்புரட்சியில் முன்னேறிய ஐரோப்பாவிற்கு பொருத்தமாக இருக்கலாம், ஆனால் நிற ஏற்றதாழ்வே தென்னாப்ரிக்காவில் முதலில் ஒழிக்க வேண்டிய நோய்  என்ற உறுதியான எண்ணம் அவருக்கு வருகிறது. எதிர் கருத்துடைய டச்சு வெள்ளை ஆப்ரிக்கேர்களுடன் தன் கருத்துக்களோடு  உரையாடி, சக தோழனாக, ஒத்த கருத்துடையவர்களாக்க முயல்கிறார்.  அதற்கு, ஆப்ரிக்கேர்களின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆழமான புரிதல் தனக்கு வேண்டும் என்கிற எண்ணத்துடன் டச்சு ஆப்பிரிக்கேர் மொழியிலும் பண்பாட்டிலும், உடைகளிலும் ஆர்வம் எழுகிறது. தன் வாழ்நாளில் பெரும்பகுதி போராட்டம், சிறைவாசம், விடுவிப்பு, என்று சென்றாலும், ஆப்பிரிக்கேர்  மொழியை  விடாமல் தொடர்ந்து கற்கிறார். சந்திக்க நேரும்,  சிறைப் பாதுகாவலர், மனித உரிமை தன்னார்வ குழுவினர், அரசியல் எதிர் கருத்துடைய ஆப்ரிக்கேர்களிடம்,  நாசூக்கான ஆப்ரிக்கேர் மொழியில் உரையாடி  கவரும் வாய்ப்பினை எந்த நிலையிலும் தவிர்க்கவேயில்லை அவர்.  போயர் போர்களில், வெள்ளையர்களுக்கு எதிராக,  சிறப்பாக பங்களித்த டச்சு ஆப்பிர்க்கேர் தளபதிகளின் பெயர்களை ஒருவர் விடமால் கூறி வியக்க வைத்திருக்கிறார்.   இந்நாட்களில் வைர வணிக  ஆப்பிரிக்கேர்களுக்காக ஆடை வடிவமைக்கும் சிறந்த தையல்காரர்களிடம், தனக்கென வடிவமைக்கப்பட்ட,  கனவான் உடைகளை தானும் அணிந்து கொள்கிறார். தென்ஆப்ரிக்க மக்கள் அதிபரான பிறகு, சுற்று பயணங்களிலும் , பிறிதொன்றில்லாமல் வடிவமைக்கப்பட்ட,  பட்டு ‘மடிபா சட்டை’ களை அணிகிறார்.


1940களில்  உலகெங்கும்  தேசியம்(Nationalism)  என்கிற கருத்து கற்ற இளைஞர்களிடம் பரவலாக அறிமுகமாகி பாதிப்பை செலுத்திய சூழலில் ஆப்ரிக்க தேசியத்தை  உணர்வுடன் ஏற்றுகொண்ட இளைஞர்களின் புகலிடமாக இருந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில்(ANC - African National Congress)  மண்டேலா,  வால்டர் சிசிலுவுடன் தன்னை இணைத்து கொள்கிறார். உணர்வூட்டும் பேச்சாளரும், தேனீ போல செயல்படும், ஆண்டன் லாம்பேடே (Anton Lambede) வின் ஆளுமையினால் ஈர்க்கப்படுகிறார்.  ஆங்கிலேயர் ஆட்சியை தொடர்ந்த ஆப்ரிக்கேர் ஆட்சியில் போடப்பட்ட ஆப்ரிக்கர் விரோத சட்டங்கள்,  நுண் வேலைகளிலிருந்தும் (Skilled Labour), வணிகத்திலிருந்தும் ஆப்ரிக்கர்களை விலக்கியது. இதன் விளைவாக  நகர ஆப்ரிக்கர்கள் வாழ்வு சேரிகளுக்குள் முடங்கி ,  சேரிகள் சுரங்கங்களுக்கு  மலிவான கூலி உழைப்பாளிகளைத்  தரும் இடமாக மாற்றியது. இதை எதிர்த்த   தீவிரமான ஆப்ரிக்க இளைஞர்கள்  தீவிர தேசிய கருத்து உடைய பான் ஆப்ரிக்கன் தேசிய கட்சியில் (PAN) இணைந்தார்கள்.  இந்தியர்கள், இடதுசாரிகள், கலவை இனத்தவரிடம் இணக்க போக்கு கொண்ட,, நிறவெறி சட்டங்களை வன்முறையற்ற முறையில் எதிர்க்கும் ஒத்துழையாமை போராட்டத்தில் நம்பிக்கையுடைய ANC ,  விடுதலை உணர்வுடன் தாராள(Liberal) சிந்தனை கொண்ட ஆப்ரிக்கர்களை ,ஒருங்கிணைப்பதில், ஒரே முகமாக  இருந்திருக்கிறது.  1946ல் நடந்த ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள் வேலை நிறுத்த  உள்ளிருப்பு போராட்டம், தென் ஆப்ரிக்காவின் ஏற்றுமதி வணிகத்தையே நிலைகுலைத்தது.  இதனால் ஆத்திமடைந்த  அரசியந்திரம்  ஆப்ரிக்க அரசியல் கட்சிகள் அனைத்தையும் தடை செய்து, அதன்  தலைவர்களை கருணையின்றி   வேட்டையாடியது. வழக்கு, சிறையடைப்பு, பின்தொடர்தல், துப்பாக்கி சூடு என அடக்கி ஒழிக்க துவங்கியது.

இந்த சூழலில், மறைவாக நடந்த ANC கூட்டத்தில், ‘காட்டு மிருகங்கள் தாக்க வரும்போது வெறும் கைகள் கொண்டு தற்காக்க முடியாது’ என்கிற ஆப்பிரிக்க பழமொழியை சுருக்கமாக மொழிந்து, ‘தேசத்தின் ஈட்டி’  (Umkonta we Sizwe) ஆயுத இயக்கத்தினை ANCயின் துணை இயக்கமாக ஆரம்பிக்கிறார்.   ஒளிப்போர் (guerrilla warfare) நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட  இந்த ஆயுத இயக்கத்தின் தலைமறைவுத் தலைவராக காட்டு செடியின் பச்சை நிறத்தில் போராளி உடை அணிந்திருக்கிறார். 1990களில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, பெரும்பான்மை ஆப்பிரிக்கர்களிடம்  ஆட்சி அதிகாரம் வருகிறது.  முந்தைய ஆறாக் காயங்களுக்கு பதிலாக பழிவாங்கல் நிகழலாம் என சிறுபான்மை ஆப்ரிக்கேர் எண்ணிய குழப்பமான சூழலில்,  மேலும் அழுத்தமான பச்சை நிற உடையை  அணிந்தார். 1995 ரக்பி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் Springboks தென்னாப்ரிக்க டச்சு  வெள்ளையின அணிக்கு ஆதவராக, அந்த அணியின் புகழ்மிக்க விளையாட்டு ஆடையை தானும் அணிந்து கொண்டு போட்டியை கண்டார். வரலாற்றுப் பகையால் டச்சு ஆப்ரிக்க அணியின் மீது வெறுப்புகொண்டு, அந்த நாள் வரை வெளிநாட்டு எதிர் அணியினருக்கு ஆதரவை அளித்த  கருப்பு ஆப்ரிக்கர் மக்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக springboks அணிக்கு திருப்பி, டச்சு ஆப்ரிக்கேர்களின் மனதினை  வெல்கிறார்.  வெற்றிக் கோப்பையை அணித்தலைவர் François Pienaar,  க்கு அளிக்கும் போது,  இனி வரும்காலங்களில் நமது பயணம் நல்லிணக்கத்துடன் இணைந்தே  தொடரும் என பச்சை ஆடைக் குறியீடு மூலம் அழுத்தமாக உணர்த்துகிறார்.
தென்னாப்ரிக்க அரசியல் கைதிகளுக்கு  சிறையில்  கூட நிறவெறியிலிருந்து விலக்கில்லை.  ஆப்ரிக்க கைதிகளுக்கு அரைக்கால் சட்டை. ஆப்ரிக்கேர், இந்தியர், கலவை இன மக்களுக்கு முழுகால் சட்டை.  உணவிலும் பாகுபாடு.   ஆப்ரிக்கர்களுக்கு  ஊட்டமில்லா உணவினை வழங்கிவிட்டு,  உடலில்  எஞ்சியிருக்கும் கடைசித் துளி வியர்வையையும் உறிஞ்சி எடுக்கும்,  சுண்ணாம்புக் கல் உடைத்தல், ஜப்பானுக்கு உரமாக  ஏற்றுமதி  செய்யப்படும் கடலில் ஒதுங்கும் களைகளை சேகரிக்கும் வேலை என கடுமையாக வதைக்கப்பட்டார்.   எதிர்த்து போராடும் போது ,பரிவுணர்ச்சி எள்ளளவும் இல்லாத சிறைக் காவலர்களால், தனிமை சிறையிலடைக்கப்படுகிறார். பத்தாண்டுகளுக்கு  மேலாக தொடர்ந்து போராடி,  உலக  மனித உரிமை அமைப்புகள்,செஞ்சிலுவை சங்கங்களுடனான தொடர்பு மற்றும் நீடித்த உரையாடலினால்,  நிலை முன்னேறியது. செய்தித்தாள்கள் புத்தகங்கள் வழங்கப்பட்டன, ஆப்ரிக்கேர் மொழி கற்க  அனுமதி பெற்றார். தோட்டங்கள் பராமரிப்பது, பகுதி நேரத்தில் டென்னிஸ் ஆடுவது, கூட்டு உரையாடல் நிகழ்த்துவது என அடுத்தடுத்து சலுகைகள் பெற்றார். அரசினால்  நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்ட,  ANC தோழர்களின், கவன ஈர்ப்பு தொடர் போராட்டத்தினால், மண்டேலா தரம் உயர்ந்த சிறைகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக  மாற்றப்படுகிறார்.   

1980களில் உலக  நாடுகளின் பொருளாதார தடை,  விளையாட்டுப்  போட்டிகளில் பங்குபெறத் தடை என அடுத்தடுத்து அழுத்தங்கள் ஒருபுறம். கருப்பு ஆப்ரிக்க மக்கள் கிளர்ச்சியால், உள்நாட்டு போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்  என்கிற சூழலில். அடக்குமுறையின் தோல்வியினை உணர்ந்த,   தேசிய கட்சியின்(National  Party) பிரதமரான  முதலை போத்தா (B W  Botha ), நீதித்துறை , சிறைத்துறையின் தலைமை அமைச்சரான  கோபி கோட்சீவை (kobie coetsee) நெல்சன் மண்டேலாவுடனான முதல் கட்ட பேச்சு வார்த்தைக்காக அனுப்புகிறார்.  ஆப்ரிக்கர்ளுடனான அதிகார பகிர்விற்கு அரசியல் சீர்திருத்தத்திற்கு,   ANCயின்  பிரதிநிதியான நெல்சன் மண்டேலாவை நோக்கிய,    முதல் ஆக்கபூர்வமான செய்கை.  அன்று புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்து,  மருத்துவமனையில் வெள்ளை அங்கியில் இருந்தார் நெல்சன் மண்டேலா. Nelson என்கிற ஆங்கில சொல்லிற்கு, மல்யுத்தத்தில், தன் இரு கைகளைக் கொண்டு,  எதிராளியின் பின்னங்கழுத்தினை, கக்கங்கள் வழியாக ,  நகரவிடாமல் பிடிப்பது என்று பொருள். உடல் சோர்ந்த  நிலையில் இருந்த, நெல்சன் மண்டேலா தான் இதுநாள் வரை  போராடி  கற்ற சமரசத்திறன்,  ஆப்பிர்கேர் மொழித்திறன், சமத்கார அணுகுமுறையினை மொத்தமாக வெளிப்படுத்தி, அந்தப் புள்ளியிலிருந்து, எதிர் கருத்துடைய  டச்சு ஆப்ரிக்கேர்  அரசினை அழுத்தமாக வழுவாமல் பற்றி,  அரசியல் சாசன மாற்றத்திற்கு படிப்படியாக பணிய வைக்கிறார். ஆம். இரத்தம்தோய்ந்த கைகளுடன் தன்னை நோக்கி வந்த முதல் சமாதான சமிக்ஞைக்கு, கருப்பு தேவனாக உங்கள் தவறுகளை நான் மன்னிக்கிறேன், இனி, நாம் நண்பர்கள் என அவர் கைகுலுக்கியபோது, அணைத்தபோது, அவர் அணிந்திருந்த அந்த வெள்ளை அங்கிதான் , அவர் தன் வாழ்நாளில் அணிந்த மாமேன்மையான உடை.


<முற்றும்>

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சாளரக் கண்கள்


                                    

அந்த பெரிய சாளரத்தின் முன்,  தன்னிலை மறந்து, தான்  காணும்  காட்சிகளில் லயித்து,  நேரம் போதாமல், நின்றிருப்பது, அவன் வழக்கம். குறு மென்பொருள் அலுவலகங்கள், இளநீர் அடுக்கு போல அடுத்தடுத்து நிரம்பியிருக்கும் கண்ணாடி மாளிகையின், ஒன்பதாவது மாடியின், கடைசி தளத்தில் உள்ளது அவன் பணி புரியும் இடம்.  அந்த அலுவலக உணவக அறையின் ஒரு பக்க சுவருக்கு பதிலீடாக, பத்தடிக்கு உயரத்திற்கு,   அறுபதடி அகலத்தில்,   அவன் தன் வாழ்நாளில் கண்டதிலேயே மிகப்பெரிய அந்த கண்ணாடி சாளரம் அமைந்திருக்கிறது.  வலது மோதிர விரலினை கோப்பையின் கைபிடியில் விட்டு,   ஆட்காடி விரல்,  கட்டை விரல்களால்,  அணைத்தபடி ,  மிதமான சூட்டில் பருகப்படும் காபிக்கு,  காண்பவைகளை,  நுண்ணோக்கி காட்டும் திறன் இருக்கிறது என அவன் கண்டுகொண்டது அதன் முன்தான். புத்தக வரிசையிலிருக்கும்,  ஒவ்வொரு புத்தகமாக எடுத்து,  அதன் விளிம்பினை மார்பில் ஏந்தி, உள்ளங்கைகளில் வைத்து,  ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து எடுத்து, பொறுமையாக வாசிக்கும் வாசகன் போல அவன் அந்த சாளர காட்சிகளை, நாள் தவறாது,  தொடர்ந்து கண்டு வருகிறான்.

ஒரு சிறிய வீதி, பெரிய முதன்மை வீதியில் சந்திக்கும் முச்சந்தி மாடி மீது,  அவன் ஆதி நினைவு தெரிந்த முதல் வட்ட வடிவ சாளரம் அமைந்திருந்தது. அவனது குழந்தை நாட்களின், ஒரு பொன்மை காலையில், கால்களால்  எம்பி,  அந்த சாளர கம்பிகளை பிடித்து,  நெற்றியையும் கன்னங்களையும் குளிர்க்க பதித்து, கண்களை நுழைத்தபோது,  தன் கையிலிருந்த யானை பொம்மை பெரியதாகி அதில் உயிருடன் நடந்து வந்ததை வியந்து கண்டான். மனம் பொங்கிய அந்த தருணத்தில்தான் சாளரத்தின் மீதான என்றும்  குன்றாத அவனது காதல் துவங்கியது. அதன்பின் அவன் கடந்த ஒவ்வொரு சாளரமும்,  தட்டு முழுவதும் படைக்கப்பட்டிருக்கும் காப்பரிசியை, கண்டு குதூகலித்து, விரைந்து தவழ்ந்து வந்து,  கண் அகல விரித்து,  சிந்தியபடி உண்ணும் பசித்த குழந்தை போல அவனை உணர செய்யும்.
Man-Looking-Out-Window_860x440.jpgமுதல் பார்வைக்கு ஓரிடம் விடாமல் ஒளியூட்டப்பட்டு என்றும் நிலைத்திருப்பவைகள் போல தோன்றும் அந்த பெரிய சாளரத்தின் காட்சிகள்.  அவன் காணும் ஒட்டுமொத்தம் ஓவியம்  என்றால், அந்த ஓவியத்தின் முதன்மை வண்ணம்  புற்பச்சை. அடர்த்தியான கருவேல மரங்களாலான அந்த புற்பச்சை குறுங்கானகம் நகரின் மையமாக உள்ள இடத்தின் பெரும்பகுதியில் வியாபித்திருக்கிறது. முதலில் அசைவின்றியிருப்பது போல தோன்றும் அந்த கானகத்தின் மரங்கள்,  நுணுக்கமாக பார்த்தால்,  காற்றில் ஓயாமல் அலை அலையாக நெளிந்து, குறுகி, சாய்ந்து ஆடியபடி இருக்கும். அதன்  இடையிடையே பழுப்பு சாம்பல் நிற தீற்றல்கள். ஒரு தனி வெள்ளைப் புள்  தன் இறகு செல்லும் போக்கில், கானகத்தின் குறுக்காக,  பறந்து செல்லும்.  அதுவரை அந்த பறவை சென்ற பாதைப் புள்ளிகளை நினைவு படுத்தி, கற்பனை நூலால் கோடிட்டு இணைத்து,  அதன் நெருக்கமான வடிவம் என்னவாக இருக்கும் என அவன் சிந்தித்திருக்கும் கண நேரத்தில், புற்பச்சைக்கு நடுவில் சென்று, தடத்தை விட்டு செல்லாமல் மறையும். கானகத்தில் கண்டவைகளில், கைப்பானவைகள் என எதுவுமில்லை.
அந்த குறுங்கானகத்தில், ஒரு நாள், குழைத்த செந்தூர  நிறத்தில் மேய்ந்து கொண்டிருந்த  கால்நடைகளை கவனித்தான். பசுக்கள் போல பெரிய உருவமும், நீண்ட வாலும் அவைகளுக்கு இல்லை. நாய்கள் போல விரைந்து இயங்குவது போலவும் தெரியவில்லை.  இவற்றின் குருளைகளும் போலவும் தோன்றவில்லை. பிறகு அவைகள் என்னவாக இருக்கும்,  என  சேமித்த நினைவுகளில் துழாவியபடி சிந்தித்த போது, ஒரு நானோ நொடியில், மூளை அது மான் என்றது.  கவனத்தை குவித்து, பார்வையை கூர்மையாக்கி மீண்டும் பார்த்தான், ஆம் அவை மான்கள்தான், உறுதியாக.  மூன்று மான்கள்.   மாநகரின் நடுவே   குறுங்கானகம் இருக்கிறது என்பதும், அதில்  மான்கள் உலவுகின்றன என்பதும்,  அவனால் நம்ப முடியாத கனவுலத்தில் இருப்பது போல தோன்றியது.  

அந்த முழு கானகத்தையும் கண்களால் அளந்து புற்பச்சையை விலக்கிய பின்தான்,  சிதறி பரவியிருக்கும் குளங்கள் பார்வைக்கு தெரியும்.   கீழ் எல்லையாக ஒரு ஒழுங்கற்ற நீள்வட்ட வடிவ பெரிய முதன்மை குளம். அதன் தொடர்ச்சியாக, காட்டில் குறுக்காக  வளைந்து மறித்தபடி, வெட்டுப்பட்ட  சில துணை குளங்கள்.  நீர் நிலைகளுக்கான வண்ணம் நீலம் என்று யார் வகுத்தது?   வேனில் வாட்டும் போது, பூஞ்சல் வண்ணத்தில், மாரி காலத்தில் முத்துசாம்பல் வண்ணத்தில், வசந்தத்தில்  மங்கல்பச்சை வண்ணத்தினாலான நீரினால் அந்த குளம் நிரம்பியிருக்கும்.  கோடை நெருங்க நெருங்க, அந்த முதன்மை குளத்தில் ஒரு பச்சை புள்ளி போல தோன்றும் மேடு, நாளாக நாளாக பச்சை பாம்பின் உருண்ட தலை போல உருமாற துவங்கும்.  அதன் முழுவடிவத்தில் வளைந்து நீண்டு, பச்சைப் பாலம் போல  அந்த நீர்நிலையை இரண்டாக வெட்டி விடும். அதன் வலது புற குளம் நடுவே புல்லால் மூடப்பட்ட  இன்னொரு கூம்பு மேடு அதன் எச்சம் போல உருவாகும். அந்த குளத்தில் குவியும் பறவைகள்  பச்சை பாலத்திற்கும் , சிறிய கூம்பு  புல்மேட்டிற்கும்  பறந்து, நின்று பின் பறந்து நின்று, நாள் முழுவதும் விளையாடும்.  அவையிடும் நீர் கோடுகள் சில நொடிகள் நிலைத்து, பின் மறையும்.இடது புற ஓர எல்லையாக, பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டது போல தோற்றமளிக்கும்,  ஒரு பதினோரு மாடி கண்ணாடி கட்டிடம் , அதன் பின்பகுதியை  முழுக்க காட்டியபடி நின்றிருந்தது.  வெளிர்சிவப்பு சிற சுவர் மற்றும் ஆழ்சிவப்பு நிற கண்ணாடி என, இருவண்ணங்கள் செங்குத்து வாக்கில் அடுத்தடுத்து பொருத்தப்பட்ட, உரு பெருகிய, ரூபிக் கன சதுரம் போல இருக்கும் அந்த கட்டிடம். அதனுடன் சேர்த்து ஒட்டியது போல,  முன்பு உலோக நிறத்தில் இருந்திருக்கலாம் என தோன்றும், புகையை என்றுமே விடாத, ஒரு எண்ணெய் கருமை புகைபோக்கி செயலின்றி நின்றிருந்தது.  பூநாரை பறவை ஒன்று, தன் மகரம், கருமை கலந்த சிறகினை அசைத்தபடி,  நாடார் கடையில் காகித பொட்டலத்தை மடிக்கும் நூலினைப் போல, கட்டிடத்தை ஒட்டி தாழ்ந்து அலாவியபடி,  அதன் இரு வேறுபட்ட வண்ணங்கள் வழியாக, பறந்து  மறைந்து பின் பறந்து மறையும். அந்த கட்டிடத்தின் கீழ் பாதியையும்,     அந்த மகர நிற பறவையையும் முன்னுள்ள குளம்  ஒரு சேர அலை அலையாக பிம்பப்படுத்தும்.

அண்மையில் அங்கு கடந்த புயலினால்,,  அந்த கட்டிடத்தின், வலதுபுற சரி நடு முனையில், கண்ணாடிகள் சீரற்று உடைந்து, ஒரு  விரிசல் உண்டாகியது. நாளாக நாளாக அந்த வடிவமற்ற தோற்றம் இருள்  குகையின் வாய் போல  உருமாறியது.  பாலத்தின் மீதமைந்த இரு மின்சார இரயில் நிலையங்களை இணைக்கும், மென்சாம்பல் வர்ணம் பூசப்பட்டு உதிர்ந்து போல தோன்றும் பாலம்,  மிகச்சரியாக அந்த குகை வாயில் ஆரம்பித்தது.   கவிழ்ந்த ‘ப’ வடிவ தூண்களால்  சீரான இடைவெளியில் தாங்கப்பட்டு,  கண் எட்டும் வலதுபற இறுதி வரை நீண்டு சென்று மறைந்தது. ஒவ்வொரு தூண் இரட்டைக்கும் சொந்தமாக மூன்றடுக்கு இரும்பு கம்பிகளாலான ஒரு உப்பரிகை.  அந்தக் கண்ணாடி கட்டிடம்,  சாய்வாக சாத்தப்படிருக்கும் குன்றளவு சுத்தியலின், கனமிக்க அலங்கரிக்கப்பட்ட இருவண்ண தலை, என்றும், அதன் மெல்லிய கைபிடி, அந்த நீண்ட மென்சாம்பல் இரயில் பாலம் எனவும் அவன் கற்பனையில் தோன்றும். புரட்சி வரும் வரை அந்த மாபெரும்  சுத்தியல் அவ்வாறு சாய்ந்தே இருக்கட்டும் என நினைத்துக் கொண்டான்.

இருவண்ண கட்டிட காட்சியில் அவன் மூழ்கியிருக்கும் நேரம், ஒரு சட்டென்ற மணித்துளியில், அந்த திமிர சுரங்க வாயிலிருந்து,  ரப்பர் எழுத்து பதிப்பான் போன்ற இரண்டு இணை இடி தடுப்பான்களின் பொட்டு போன்ற வடிவம் முதலில் தெரிய வரும். அதை தொடர்ந்த ஓட்டுனருக்கான அந்த முதல் எந்திர பெட்டி முழுமையடையும். பின் மின்சார இரயிலின் பெட்டிகள் ஒவ்வொன்றாக தோன்றி,  சீரான வேகத்தில் நகர்ந்து வலது புற சற்றே கீழ் கோணத்தில் செல்லும். அந்த முழு இரயிலும்  முழுமையாக தோன்றி , கடந்து சென்று,  வலது எல்லையில் மறையும். வேறு நேரத்தில், அதற்கு நேர் எதிர் திசையில் தோன்றும் நகல் இரயில், அதே வேகத்தில் இடது புறம் நோக்கி சென்று மறையும்.  அரிதான நேரத்தில் அந்த பாலத்தில் ஓரே சமயத்தில் இரண்டு இரயில்கள் எதிரெதிர் திசையில் மூர்க்கமாக மோதி விடுவது போல வரும். ஆனால் இணை பாதையில் ஓன்றையொன்று விலக்கி எந்த உராய்வும் இல்லாமல் பயணிக்கும்.

தன் பெருங்குழுவிலிருந்து பிரிந்த பறவை குறுங்குழு ஒன்று, அந்த மின்சார இரயிலுடன் பந்தயத்தில் பறப்பது போல உடன் பறக்கும். அவைகளின் பாதை சீரற்று இருந்தாலும், இரயிலுடனான போட்டியில் அந்த குறுங்குழுவின் பறவைகள் முதலில் சென்று இலக்கை அடைந்து என்றும் வெல்லும்.  அந்த இரயில்களின் ஓட்டமும், பறவைக் குழுவின் பந்தயமும்,  ஒவ்வொரு முறையும் கவனத்தை வேறெங்கும் விலக்க விடாமல் முழுக்க கோரும். அந்த பாலத்தில் செல்லும் மின்சார இரயிலுக்கு மேல் ஒரு முறை, மின் கசிந்து தங்க மின்னல் தோன்றியது. அவை  பொன்னிறத் துகள்களாக ஒளிர்ந்து கொட்டி மறைந்ததை,  இமையொட்டாமல் கண்ட பின்புதான்,   மறைந்திருந்த மின்சார கம்பிகள், அவன் பார்வைக்கு தெரிய வந்தது.  நெருங்கி மனதால் தொட்டு தொட்டு பார்க்க பார்க்க, அந்த சாளர காட்சிகள் முடிவில்லாதவைகளால் நிரம்பி விரிந்து கொண்டும், கணந்தோறும்  மாறிக் கொண்டும் இருக்கும்  விந்தையை வியந்து  ரசித்தான்.

அந்த முழுக் காட்சிகளை உயிருள்ள உடலின் இயக்கம் என்றால், அதன் குருதியோட்டம், அவனின் ஆரம்ப கால பார்வைக்கு எளிதில் புலப்படாமல், ஆனால்  அங்கு முழுதாக நிறைந்தபடி ஓயாமல் இயங்கியபடி இருக்கும் பறவைகளின் ஓட்டம்தான்.  முதல் வெட்டு காயம் பட்ட போதுதான்,  தன்னுள் மறைந்து ஓடிக்கொண்டிருக்கும்  குருதியை, சிவப்பு முத்துத் துளிகளாக மனிதன் முதன் முதலாக பார்ப்பான்.  துயரத்தால் மனம் வெட்டுண்ட  ஒரு நாளில் தான், அவன் அந்த சாளரம் வழியாக பறவைகளின் இயக்கத்தினை தனித்து வேறுபடுத்தி உன்னிப்பாக கவனிக்க துவங்கினான். காம கனவுகளை முடிவிலாமல் தூண்டும், குருதியின் வீச்சம், ஒரு முறை ரசித்தபின், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவது போல, அன்றுமுதல்  அவனை  என்றும் மாறாமல் கிளரந்தெளச் செய்யும்,  பறவைகளின் இயக்கத்தினை மட்டுமே கவனித்தான். அந்த சாளரத்தின் மேல், கீழ், வலது, இடது என எந்த நான்கு விளிம்புகளிலிருந்தும்,  பறவைகள்  தோன்றி,  கணக்கில்லா கோணங்களில்,  மிதந்து மறையும். கொம்புள்ள பறவையை பார்த்திருக்கிறான். தேவ பறவை என்று நினைத்தீர்களா? இல்லை.  தன் கூடு கட்ட, வளைந்த மர குச்சியை வாயில் கவ்வி பறக்கும் காகம்தான் அது.  

அவ்வப்போது வெப்ப மிகுதியால் திரையிட்டு மூடப்படும் அந்த சாளரம்.  எந்த திரையென்றாலும், அது இரும்பினால் ஆனதென்றாலும் கூட, அதை  ஊடுருவிப் பார்க்க,  ஒரு துளை அல்லது திறப்பு கண்டிப்பாக இருக்கும். அதன் அருகில் சென்று, அவ்வாறே, அதிலிருந்த  திறப்பு வழியே பார்த்தான். அப்போது அவன் பார்வை மேலும் குவிந்து கூர்மையாகியது. குளக்கரையின் சதுப்பில்,   தீட்டி வைத்த பென்சிலின் முனை போன்ற அலகு கொண்ட, உறைபால் வண்ண கருமூக்கு கொக்கு, ஈர்க்குச்சி நெடுங்கால்களால் தூழாவி தூழாவி எதையோ தேடிக்கொண்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி, சருகிலை நிற  நொள்ளை மடயான் கூட்டம், பிட்டம் மேலாக தண்ணீரில் கவிழ்ந்து, பின் சுழன்றபடி களிப்புடன் விளையாடிக்கொண்டிருந்தது. வெண்மையான உடலும், புள்ளி வைத்த பழுப்பு சிறகும் கொண்ட விராலடிப்பான் பறவை, ஒரு மீனை உயிருடன் கொத்தி பிடித்து சென்ற காட்சியை கண்டு நீண்ட நேரம் விழி அகலாமல் பார்த்திருந்தான்.  வலசையில் வந்த கதிர்குருவி ஒன்று தன் உள்ளத்தை குவித்து உள்ளிருந்து கூவிய காட்சியை கண்டான். அந்த ஒலி கேட்கவில்லை எனினும் அதன் திண்மை உணர முடிந்தது.
Tawny eagle.jpg

சாதாரண நாளில்தான்  , நினைக்காத தருணத்தில்தான், பேரலையின் ஆற்றல் கொண்டு முட்டி மோதி, வாழ்வின் திசையை என்றும் மீள முடியாமல், தடம் மாற்றும்,  மனம் பிறழ்ந்தால் கூட மறக்க இயலாத, தரிசனங்கள் நிகழும். ஓரு நாள்  மூடப்பட்ட, அந்த திரையின் மறுபக்க வெம்மையை தாங்கி, திரையை விலக்கிய போது,  அவன் பாதத்தின், அருகில்,  இரண்டு அடி எடுத்து வைத்தால் தொட்டு விடும் தூரத்தில், கண்ணாடிக்கு அங்கு, ஒரு  பறவை நின்று கொண்டிருந்ததை கண்டான். அது ஆளிப்பருந்து.  வெற்றிக்கு பரிசாக வழங்கப்படும், கோப்பையை நினைவுபடுத்தும் வடிவம் கொண்டிருந்தது. மண்டியிட்டு அதன் கண்களை நேராக பார்த்தான். அளந்த தொலைவின் வீச்சு தெரிந்தது.  அந்த அழுத்தம் தாளமுடியவில்லை. கண்களை தவிர்த்தான்.  நீரூற்றி கழுவிய நிலக்கடலை ஓட்டின் நிறத்தில், தன் கால்களே பீடமாக நின்றிருந்தது. ஓட்டை திறந்து எடுத்த, இளம் பருப்பின் மெல்லிய தோலின் நிறத்தில் இறகுகள்.  அவை  போர்வை போன்று போர்த்தியபடி, காற்றில் இறகின் பிசிறுகள், தானியங்கும் விசை இசை பலகையின் பொத்தான்கள் போல இறகிறகாக ஆடியபடி இருந்தது. தோலினை உரித்த பின்னான பருப்பின் நிறத்தில் வளைந்த அலகினை கொண்டிருந்தது.  முகத்தை ஒட்டிய ஓளிர்மஞ்சள் அலகு , மேல் துளையும், அதன் நுனி, பென்சில் கிராபைட் வளவளப்பில் வளைந்து கூரியதாகவும் இருந்தது.

ஊரெங்கும் அலைந்து,  தேடிக் காண்பவைகளை உள்வாங்கி ஆழத்தில் சேமித்து,  இல்லம் திரும்பி, அவனுக்கான இருக்கையில் அமர்ந்து எழுதும், விண்ணளவு ஆற்றல் கொண்ட, எழுத்தாளனின்    தீர்க்கம் கொண்டிருந்தது. அரையடி எடுத்து நெருங்கினான். ஜீவனைத் திரட்டி, யுகங்களை நகர்த்தியது போல இருந்தது.  அந்தப் பறவையும் ஒரடி எடுத்து நெருங்கியது. இழையளவு இடைவெளிதான்.  ஆளிப்பருந்து அவனை நோக்கி, கண்களால் புன்னகித்தது.  திடீரென்று உடலை உலுக்கி,  சாளரக் கதவுகளை திறப்பது போல சிறகுகளை விரித்து ஆன்மாவிருந்து கூவியது. அந்த ஒலி கண்ணாடியை உடைத்து, அவன் காதுகளை கிழித்தது.  அவன்  இதுவரை உணர்ந்து அறியாத  மென்நரம்புகளை உராய்ந்து கீறியது. ஆழத்தின் இருப்புகளை இடம் மாற்றியது.   இன்னும் இன்னும்  வேண்டும் வேண்டும் எனக் கேட்டான். அடுத்த வினாடி,  முகத்தை திருப்பி, வளைந்து,  எம்பித் தாவிப், பறந்தது,  எப்போது  எவ்வாறு எனத் தெரியாமல், கண்கள் எட்டிப் பிடிக்காத, தொலைவில்,  பறந்து சென்று மறைந்தது. ஆளிப்பருந்து  அருளிய ஆறாத காயத்தை, மனதால் தொட்டு பார்த்தபடி, அதன் ஆளுமை அவனுள் விட்டுச் சென்ற தடயத்தை எண்ணியபடி நாளை மறுபடியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் அவன் விடைபெற்று திரும்பினான்.


<முற்றும்>

வெள்ளி, 5 மே, 2017

கருப்பையா நாடார் - ஒரு நினைவுக்குறிப்பு

என் அய்யப்பா (அ) தாத்தா கருப்பையா நாடார், விருதுநகர் மாவ‍ட்டம், கல்குறிச்சி செல்லும் சாலையில், மல்லாங்கிணறு  நாடார் மேல்நிலை பள்ளிக்கு பின்னால், சில கிமீ தூரத்தில், பருத்தியும்  வேர்கடலையும் விளையும் கரிசல் மண் ஊரான திம்மன்பட்டியில்,  1929ல் பிறந்தார்.  அவரின் பத்தாம் வயதில் 5ம் வகுப்பு படிக்கும் தருவாயில், அவரது தந்தை  P சுப்பையா நாடார் என்கிற  பதினெட்டாம்படி சுப்பையா நாடார், பங்காளிகள் நால்வர் வீட்டின் கடன் காரணமாக, சொத்துகளை விற்க நேர்ந்ததாலும். கடுமையான பஞ்சத்தினாலும், ஊரை விட்டு வெளியேறினார்கள்.  1940களில் குடும்பத்துடன்  மதுரை சிம்மக்கல் அருகே பழைய ஸ்ரீதேவி தியேட்டர் பின்புறம், பூந்தோட்டம் பகுதியில் ரூ 3 க்கு வாடகைக்கு வந்து குடியேறினார்கள்.  அன்று முதல், அவர் இறக்கும் வரை, காஜா எடுக்கும் வேலை, உணவு விடுதியில் டோக்கன் விற்கும் வேலை, மில் தோழிலாளி,  கடலைப் பொறி கடை,  மிட்டாய் கடை, விறகுக் கடை வியாபாரி, மாணவர்களுக்கு சீட்டு குலுக்கி பரிசு கொடுக்கும் கடை, மாடுகள் வளர்த்து வைகை கரையில் பேச்சியம்மன் படித்துறை அருகில் உள்ள வெங்கடசாமி நாயுடு அக்ரகாரத்தில் பால் விற்பது,  சந்தையில் பழைய பொருட்களை ஏலத்தில் எடுத்து விற்பது என பல  வேலைகள் மாறி மாறி செய்து,  முடிந்தவரை மகன்கள், பேரன்கள் தயவில்லாமல் வாழ்ந்து 28 ஏப்ரல் 2017ல் மறைந்தார்.  


மதுரை வந்தவுடன், ராஜா மில்லில் சுப்பையா நாடார் வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்தார். மில்லில் வேலை செய்ய வயது போதாததால், முதலில் டெய்லரிங் கடையில் காஜா போடும் வேலைக்கு சேர்ந்தார் கருப்பையா.  பின் பதினைந்தாம் வயதில் ராஜா மில்லில் தானும் வேலைக்கு சேர்ந்தார். தாய் பாக்கிய லெட்சுமியிடம் அனாவசிய செலவு செய்யாமல், அப்படியே மாத சம்பளத்தை ஒப்படைக்கும் வழக்கம் கொண்டிருந்தவர்.  பின்னர் மகன்களிடமும் அதையே வழக்கப்படுத்தியிருந்தார். ஒன்பது வருடங்கள் உழைத்து, வாடகைக்கு இருந்த வீட்டையே தரையடி கிரையம் இல்லாமல் ரூ 50க்கு  வாங்கி  மராமத்து பார்த்து தங்கினார்.  மதுரை  கைலாசபுரத்தில், மூக்கம்மா பெரியம்மாவின் கணவர் மூலம் தேனி மேல்கிழார்பட்டி கிராமத்தில் ராமசாமி  நாடார் அவர்களின் 15 வயது மகள் அய்யம்மாளுடன்  மணமுடிக்க  சம்பந்தம் வந்தது.   அன்றைய போடி பாசஞ்சர்  இரயிலில் சென்று பெண்பார்த்து 1953ல் திருமணம் நடந்தது.   அவர் பெயரும் அய்யம்மாள், என்னுடைய அய்யாவின் அம்மாவாதலால் அவர் எனக்கு அய்யம்மா. அவரை உறவின் வழியாக பெயர்கூறி அழைக்கும் உரிமையை மகன் வழி பேரன், பேத்திகள் அனைவரும் பெற்றோம். திருமணமான மறுவருடம் 1954ல் பிறந்த ஆண் குழந்தையான எனது  தந்தைக்கு பாலச்சந்திரன் எனப் பெயரிட்டார். பின் தங்கராஜ், செல்வராஜ், சுந்தர்ராஜ் என்று அடுத்தடுத்து மகன்களும்,  ஷீலா, மாலா என மகள்களும் பிறந்தார்கள்.


கணவனை இழந்து, குழந்தையில்லாமல் தனித்திருந்த, கருப்பையாவின் தாய் பாக்கிய லெட்சுமியின் தங்கையான  அழகிய மாரியம்மாளுக்கு, ஊர்பெரியவர்களால் பாலியல் தொந்தரவு இருந்தது.  அவர் அன்னை  1958ல் இறந்தவுடன்,  சித்தியை அழைத்து,   2001ல் இறக்கும் வரை உடன் வைத்து கவனித்திருக்கிறார். கூட்டுக்குடும்பத்தில்  இருந்தவரை பேரன்கள் அனைவரும்  சம்பள அளவில் ஏற்றதாழ்வு இருந்தாலும், ( தங்கராஜின் அரசாங்க கணக்கர் சம்பளம், பாலச்சந்திரனின் மதுரை கோட்ஸ் மில் சம்பளம், சுந்தர் மற்றும் செல்வத்தின் வொர்க்சாப் ரோட்டில் லேத் வேலைக்கான  சம்பளம்) என  பாட்டி மாரியாம்மாளிடம் அவர்களின் சம்பளத்தை அப்படியே கொடுத்துப் பின் தங்கள்  செலவுக்கு ஓரே மாதிரியான பணத்தை வாங்கியிருக்கிறார்கள்.  மாரியம்மாளே குடும்பத்தின் மொத்த வரவு செலவினை பார்த்திருக்கிறார். சில சொத்து வாங்கும் முடிவினையும் சித்தியை கேட்டே செய்திருக்கிறார் கருப்பையா.  இந்த அல்லோலம், எதிலும் பங்குபெறாத, நாடாரில்  செவத்த மகன்களை பெற்ற பெருமை மட்டும் பேச தெரிந்த,  அய்யம்மாளை, ஆதிக்கம் செலுத்தும் மிரட்டி உருட்டும் நேரடி மாமியாராகவே இருந்திருந்தார் மாரியம்மாள்.  


கருப்பையா,  ராஜா மில்லில் வேலை  பார்த்துக்  கொண்டே, துணை தோழிலாக, அங்கு பணிபுரியும் தோழர்களுக்கு,   கமிஷனை பெற்றுக் கொண்டு காண்டீன் டோக்கன் விற்பார். இதனால் மேலதிகாரிகளின் கோபத்தை பெற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். புத்தகம் வாசிப்பது,  அரசியல்  பேசியது என நான் பார்த்ததில்லை. ஆனால்  கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு மட்டும் செல்வார். காரணம் 1948ல்,  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் ராமமூர்த்தியை பற்றி விசாரிக்க வந்த போலீஸிடம், எகத்தாளம் பேசிய அவரது தந்தை  P சுப்பையாவை குண்டு கட்டாக தூக்கி சென்றதை இளைஞனான அவர்  வெறும் பார்க்க மட்டுமே  செய்ததால் இருக்கலாம். அன்றிலிருந்து கடைசி வரை கம்யூனிஸ்ட் கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிகளுக்கே தேர்தலில் வாக்களித்திருக்கிறார். ஆனால் முதலில் காங்கிரஸ் பின்பு இரட்டை இலைக்கு வோட்டு போட்ட அவர் மனைவி அய்யம்மாளுக்கு  இதை வலியுருத்தவில்லை. பாவலர் வரதராஜன் பாடும் கூட்டங்களுக்கு பாலச்சந்திரனையும், தங்கராஜையும் அழைத்துச் சென்று விடியும் வரை மூவரும் பார்த்திருக்கிறார்கள். 1967ல் காங்கிரஸை வென்று திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வந்த்தை கொண்டாடியிருக்கிறார்.


கடன் வாங்குவதை விரும்பாதாவர், ஆனால் மகன்களின் படிப்பிற்காக, கடன் வாங்கி , அது திரும்ப செலுத்த முடியாததால், கடையிலிருக்கும் தராசு படிக்கல் பிடுங்கப்பட்ட  அவமானமடைந்தார்.  அய்யம்மாள் வீட்டு சீதனமான வெண்கல அண்டாக்கள் விற்கப்பட்டு கடன் அடைந்தது.   விறகுக் கடையில் உதவிக்காக வேலைக்கு அமர்த்தியிருந்த,  சொந்த கார சிறுவன் பையில் கல்லாவிலிருந்து அவன் திருடியிருந்த பணத்தை  பறிமுதல் செய்த நாள் முதல், மகன்களை விட்டு அல்லது அவர் மட்டுமே கடை பொறுப்பை பார்த்தார்கள். தொலைக்காட்சி,  சினிமா  பார்க்கும் பழக்கம் இல்லை.  ஒருமுறை அவரது இரண்டாவது மகனான, தங்கராஜ் நண்பர்களுடன்  இரவு ஆட்ட சினிமாவிற்கு சென்ற போது, எதேச்சையாக அங்கு  வருவது போல, தன் மகன் பாதுகாப்பாக போய் வருகின்றானா பின்தொடர்ந்து கண்காணித்திருக்கின்றார்.  ஜாதி பிரக்ஞை மிக்கவர், துணி ,  மளிகை வாங்கும்போது நாடார் கடைக்குதான் முதலுரிமை கொடுப்பார். ஆனால் நாயக்கர், கள்ளர், பிள்ளை நண்பர்கள் பல உண்டு. ‘உங்க தேவம்மார்லே  ஒருத்தர்   நம்ம ஏரியால்லே அச்சாபீஸ் வச்சிருக்கார்’ .  ‘இப்போல்லாம் அய்யர்ல்லாம்  ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்து வீடு கட்டி விக்கிரதுலே இரங்கிட்டீங்க!’   என சகஜமாக நெருங்கி உரையாடி  பார்த்திருக்கிறேன்.


பண்டிகை நாளில் கூட நன்றாக வெளுத்த துணி  அணிந்தவரில்லை. பின்னாளில் ஒருமுறை பேரன்கள் அழுக்காக இருக்கீங்க தாத்தா என்றவுடன்,  மூன்று முறை குளித்து விட்ட பின் கூட அதே உடையைத்தான்  அணிவார். அவர் செயல்களில் இடது கைதான் ஆதிக்கம் செலுத்தும்.  அதனால் தராசினை வலது கையில் பிடித்து , முள் பார்ப்பார். பணம் வாங்குவது கொடுப்பது மட்டும் வலுக்கட்டாயமாக வலது கையில்.  கொய்யா,  பலாபழம், மாதுளை, மாம்பழம் என பழங்களாக  வாங்கி வருவார். பழங்கள் வாங்கும்போது, நல்ல பழங்களாக பார்த்து பொறுக்கும் பொறுமையும், திறனுமில்லை. அவர் வாங்கும் பழங்கள் பாதி குப்பைக்கே போகும். மகன்கள்,  பேரன்கள்,  வளர்ந்து வேலை பார்க்கும்போது,  அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்க  தயங்கியதில்லை. ஆனால் மருமகள்கள், பேத்திகள் வேலை பார்த்து ஊதியம் பெறுபவர்களாக இருந்தால் கூட தவறுதலாக கூட அவர்களிடம் பணம் கேட்டதில்லை.


தன் உடல்நலத்திற்கு எது தேவையோ, அதை தானே பார்த்துக்கொள்வதில் கவனமிக்கவர். இரவுணவு நாள்தவறாமல் வொர்க்‌ஷாப் ரொடு அல்லது தமிழ்சங்கம் அருகே உள்ள ஏதாவது ரோட்டு கடையில், இரண்டு புரோட்டா (அ) தோசையுடன் , ஆம்லெட் கண்டிப்பாக.  80 வயது வரை அவரின் மைத்துனிகள், அக்கா மகள் உறவுகளிடம் ‘எப்ப பொண்ணு பெத்து தர போறே’ என குசும்புடன் பேசுவதை விடவில்லை. ஆனால் அந்த கிண்டல் பேச்சு   மகன்கள், பேரன்கள் இல்லாத போதுதான் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறார்.  சிவகாசி தேரடி கருப்பசாமி, சீலைக்காரியம்மாள்  குலதெய்வ வழிபாடு தவிர ஆன்மீக நாட்டம் கொண்டவரில்லை. அங்கும் கூட சாமியை விட  ஊர்பங்காளிகளை ஊர்காரர்களை சந்தித்து அளவளாவுதல்தான் முதன்மையான நோக்கம். எங்கு சென்றாலும் முடிந்த அளவு சற்றே வளைந்த கவட்டை நடையுடன் அழுத்தமாக   நடந்தே செல்வார். மூன்று மாதம் முன்பு கூட, (2017 ஜனவரி), ஒருநாள் வீட்டின் வெளி கம்பி கதவு பூட்டப்பட்டதால், மொட்டை மாடி சென்று, தடுப்பு சுவவேறி பக்கத்து வீட்டு மாடியில் குதித்து, அவர்கள் கேட் வழியே வெளியே வந்திருக்கிறார். மகன்களின் தோலைபேசி எண், முகவரியை மழைகாகிதத்திற்குள் மறைக்கப்பட்ட குறிப்பேட்டில் வைத்துக் கொண்டு, எவர் தயவும் எதிர்பார்க்காமால் தேனி, பவானி, விருதுநகர்,  என பயணம் செய்திருக்கிறார். 85 வயது வரை, வழி மாறி போனதே கிடையாது.


அவரின் மூத்த பேரனான என்னை, என் தங்கையை, என் தம்பியை அவர் தொட்டு எடுத்து கொஞ்சியதாகவோ, விளையாட்டு பொருட்களை வாங்கியதாகவோ என் நினைவினில் இல்லை. அதற்கு காரணம் மூத்த மருமகளான, என் அம்மா மணிமொழி மீதான அவர் என்றுமே வார்த்தையில் வெளிக் காட்டாத சினம்தான். வாயாடி பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுகிறான் என்று என் அப்பாவின் மீது குற்றசாட்டு. திருமணமாகி 6 மாதமாகியும், கருவுறாததால், மாரியம்மாள் கிழவி கொடுத்த வாழைபழத்தில் ஏதோ வைத்தியர் வைத்த மருந்தை விழுங்க நேர்ந்த, என் அம்மாவிற்கு அவர்கள் மீது வன்மம் வேறு. குச்சி கை கால்களுடன், பலவீனனாக பிறந்து , வருடம் முழுவதும் ஓன்று மாறி ஒன்று நோய் வந்து முடங்கியிருந்த நோஞ்சானான நான், என் 3 வது வயதில், வயிற்றுபோக்கினால் கவலைக்கிடமானேன். அப்போது மதுரை மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் பணம் செலவாகும், அரசு மருத்தவமனையிலேயே சேர்த்தால் சரியாகிவிடுவான் என மாரியாம்மாள் பாட்டியும், கருப்பையாவும் கூறியதை கேட்டு சீறி சண்டையிட்டாள் என் அம்மா. அதுவே கூட்டு குடும்பத்திலிருந்து விலகி , மதுரை சிந்தாமணி அருகே தற்காலிகமாக, பின் பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகரில் நிரந்தரமாக வசிக்க காரணமாகியது. முற்றிலும் உறவிலிருந்து விலகவில்லை, தீபாவளி , பண்டிகை, வார இறுதி விடுமுறை நாட்களில் அய்யம்மா வீட்டில் கழிந்தது. இருப்பினும் கூட்டு குடும்பத்திலிந்து விலகியதால், அய்யப்பா கருப்பையா, என் அம்மாவுடன் சேர்த்து பேரன்கள், பேத்தியையும் மன்னிக்கவில்லை. இறுதி காலத்தில், முதல்மாடியில் அவருக்கென ஒதுக்கபட்ட 5 * 8 அடி, வெப்பம் கொட்டும் அறையில் தனியாக வாழ்ந்து வந்தார். கடைசியாக, என் மகன் ரிஷிவர்தன் 6 மாத குழந்தையாக இருந்த போது,, அவரிடம் சென்று ஆசி வாங்கினேன். ‘யாருன்னு தெரியுதா தாத்தா?’ என்ற கேள்விக்கு ‘ செவகுமாருதானே! ‘ என்றார், கலர் வாங்கித்தர சொல்லி குடித்தார். பளுப்பு கறை சட்டை இல்லை, முதுகில் கோர்க்கப்பட்ட கைகள் நடுவில் தொங்கும் துண்டு இல்லை, சிறிது வளைந்த ஆனால் அழுத்தமான கவட்டை நடை இல்லை, வட்ட முகம் இல்லை, விரிந்த கை கால்கள் உடல் இல்லை. மன்னிக்காத கோபம் கூட இருந்திருக்காது. பசியாக மட்டுமே இருந்தார்.

<முற்றும்>

புதன், 29 மார்ச், 2017

பறக்கை நிழற்தாங்கல் 2017

 

நாகர்கோவில் அருகே இருக்கும் சிற்றூரான பறக்கையில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் படிகம் ரோஸ் ஆன்றோ இணைந்து நடத்தி வரும்  நிழற்தாங்கல்(படைப்பிற்கான வெளி) அமைப்பின் சார்பாக ‘ஜெயமோகனுடன் ஒரு நாள்’ இலக்கிய கலந்துரையாடல்  நிகழப்போகிறது என்ற பதிவைஅவரது தளத்தில் பார்த்தேன். தவறவே விடாமல் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என முன்பதிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர்  கன்னியாகுமரிக்கு, திற்பரப்பு அருவிக்கு நாகர்கோவில் வழியே சென்றிருந்தாலும், நாகர்கோவிலுக்குள் இதுவே முதன் முறை. ஜெவின் எழுத்துகள் வழியே கற்பனையில் அங்கு நிறைய அலைந்திருக்கிறேன் எனினும்  கால் பதித்து சுற்றி திரிய போகின்றேன் என்கிற எண்ணமே கிளர்ச்சியை தந்தது. அங்கு எங்கு தங்கபோகிறோம் என எதனை பற்றியும்  யோசிக்காமல், எழுந்த குன்றாத ஆர்வத்த்துடன் முந்தின நாள் காலையிலேயே  கிளம்பி வந்துவிட்டேன். மேற்கில் மலையடிவாரங்களில் சிதறி வியாபிதிருந்த காற்றலைகளை கடந்து ஆரல்வாய்மொழி கணவாய் வழியே உள்ளே நுழைந்தபோது  வேறொரு நிலப்பகுதிக்கு வந்துவிட்டது போல இருந்தது. பசுமையும் வெக்கையும் ஒனறையொன்று ஆக்கிரமிக்க முனைந்து கொண்டிருந்தன. ராம லக்ஷ்மி கல்லூரி அருகில் தாழக்குடி என்கிற ஊர் வழிசொல்லும் போர்டை பார்த்ததும், சோற்றுகணக்கில் வரும் ராமலக்ஷ்மியும் தாழக்குடி மாமியும் நினைவிற்கு வந்தார்கள்.

கவிஞரும் எழுத்தாளருமான லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் நாகர்கோவிலிருந்து பக்‌ஷிராஜபுரம்  என்னும் பறக்கைக்கு அழைத்து சென்றார். பேசும் போது மீசையை முறிக்கியபடி பேசிக்கோண்டிருந்தார். ஜெயகாந்தன் கால உடல்மொழியாக இருந்திருக்க வேண்டும். குமரி மாவட்ட இலக்கியவாதிகள் பற்றியும், எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன்  அவருக்கான தொடர்பு பற்றியும் சுருக்கமாக பேசினார். அவரின் மகன் ரிஷிநந்தன்  +2 தேர்விற்கு படித்துவருகிறான். என் ஒரு வயது பையனும் ரிஷிதான் ‘ரிஷிவர்தன்’ அவன் பெயர் என்ற போது , இன்னும் நெருக்கமாக உணர்ந்தோம். நாகர்கோவிலிலிருந்து  மணக்குடி செல்லும் வழியில், நெருக்கமாக அமைந்த அழகிய சிற்றூர்களுக்கு இடையில்,  சுசீந்திரம் தாணுமலையான்  கோயிலுக்கு நேர் பின்னால், பறக்கை பெயரிலேயே உள்ள ஏரியின் அருகே ,அமைந்திருந்த்து. என் மனைவி மாலதியிடம் எந்த ஊருக்கு சென்றாலும்  ரம்மியமாக இருக்கிறது இங்குதான் சென்னையை விட்டு வந்து செட்டில் ஆக போகிறோம் என இதுவரை பல ஊர்களை கூறி வந்திருக்கிறேன்.  அவ்வாறு செட்டில் ஆக தகுதியான அமைதியான முக்கியமாக தூய்மையான ஊர். 

தாழ்ந்த சாதி மக்களின் முன்னேற்றத்துக்காக 18ம் நூற்றாண்டில் அய்யா வைகுண்டர் தோற்றுவித்த, தென்தழிழகத்தின் முக்கியமான வழிபாட்டு முறையான அய்யாவழியில் நிழல் தாங்கல், என்றால் தங்குமிடம் என்று பொருள். படைப்பாளிகள் நிழற்தாங்கல் நிறுவனரான லக்ஷ்மி மணிவண்ணன் அனுமதி பெற்று அங்கு தங்கி எழதலாம்.  படைப்பாளிகளுக்குகான ஏற்ற சூழல்.

நிழற்தாங்கலுக்கு அருகில் இரண்டாவது முடுக்கின்  (ஒரு சிறுவன் வழிகாட்டினான். முடுக்கு என்றால் , எங்களூரின் சந்து என்று உணர சில வினாடிகள் பிடித்தது. என்னடா இது இந்த ஊரில் எல்லோருமே ஜெ போலவே பேசுகிறார்கள்) வழியே அங்கிருக்கும் மதுசூதன பெருமாள் கோவிலுக்கு சென்றேன். பூதேவி, மாதேவி நடுவே  சந்தன காப்புடன் மதுசூதனன் நின்றிருந்தார். சட்டையை கழற்றி நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டது  புதுமையான அனுபவமாக இருந்தது. பெண்கள் அமர்ந்து வாழ்த்துபாடல் பாடிகொண்டிருந்தார்கள். இவர்களோடு சேர்த்து எனது பாட்டிக்கும் பாட்டனுக்கும் ஒரு காலத்தில் ஆலய நுழைவு மறுக்கப்பட்ட இடமாக இருந்திருக்கலாம்.  தண்டு பகுதியில் வளைவுகள், வேலைபாடுகள் இல்லாமல் இருந்த கேரளா பாணி குத்துவிளக்கை பார்த்து கொண்டிருந்தேன். அதற்கு திரி வைத்து விளக்கேற்ற முகங்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை. கோயில் திருப்பணிக்கான மரவேலை நடந்து கொண்டிருந்து. பணம் வசூலிப்பதே முதன்மையாக மாறிவரும்  மதுரை  மீனாட்சி அம்மன் கோயில் ஶ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவில்களுக்கு அண்மை காலமாக சென்றது நல்ல அனுபவமாக இருக்கவில்லை. அது போல வெம்மையான இல்லாமல் குளுமையான அனுபவமாக  இருந்தது.

பின் நிழற்தாங்கலில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணனுடன் குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த போராட்டத்தின் பின்ணணி பற்றியும் , அதில் வழக்கறிஞர் ,  நேசமணி பங்கினையும் பற்றி விவாதித்தோம்.  அவருக்கு அரசியல் போட்டியாக காமராஜரால் அமைச்சராக்கப்பட்ட  லூர்த்தம்மாள் அவர்களை பற்றியும் விவாதித்தோம். பின்னர் சிலேட் மாதஇதழில் வெளிவந்திருக்கும் ஷோபா சக்தியின் ‘ஒரு உள்ளக விசாரணைய’ சிறுகதையை, வாசித்தேன்.  ஈழத்தில் போர் ஓய்ந்த இன்றைய சூழலில் ஒரு கிணறை தோண்டுகிறார்கள், அங்கு எடுக்க எடுக்க சிதைந்த சடலங்கள் வருகின்றன.அதில் ஒரு உயிருள்ள மனிதனும் வருகின்றான். அவனை வெளிகொணர்ந்து, ஆசுவாசபடுத்தி, அவன் பின்ணணி பற்றி விசாரிக்கிறார்கள். 80களின் போர் சூழலையும் அரசியல் சூழலையும் விவரிக்கின்றார் அவன்.  சிங்களராணுவம், விடுதலை போராளிகள் எவராலும் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சமாதான சூழலில் அந்த பினண்ணி தேவையில்லை என மீண்டும் அவன் அதே கிணற்றில் உயிருடன் புதைக்கப்படுகிறான் என்று முடிகிறது. தேவையான குறைந்த விவரிப்பில் போர் சூழலை உணர்த்தும் கதை இது,  போர் ஓய்ந்த சூழலில் நீதி விசாரனை செய்பவர்கள் மீது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அறத்தின் கேள்விக்கு முன் நிறுத்துகிறது.. உண்மை எப்போதும் போல கிணற்றுக்கடியில் இருட்டில் ஆழமாக புதைக்கப்படுகிறது. எழுத்தாளன் அவனரறிந்த உண்மையை , புனைவின் மூலம் உணர்வுடன் தோண்டி எடுத்து காட்டுகிறான்.

அன்று கப்பலில் பணி புரியும் நாஞ்சில் Jack Sparrow வான  ஷாகுல் ஹமீதினை சந்தித்தேன். ஜெ தளத்தில் வெளிவந்த அவரது ஈராக் போர் முனை அனுபங்கள் பதிவுகளை ஒரே மூச்சில் வாசித்திருக்கிறேன். அவரது தாயன்பு பதிவில் , 3 வயது வரை அவருக்கு பேச்சு சரிவர வரவில்லை என்பது முதலில்  நம்ப முடியவில்லை. பள்ளி விழாவில் நடக்கும் 4 அடுக்கு மாணவ பிரமிடுகளின் உச்சியில் கொடி பிடிக்கும் உரிமை, 14 வயது வரை பெற்ற 22 கிலோ மாணவனாக நான் இருந்திருந்ததால் அவர் சொன்னதையும் நம்ப நேர்ந்த்து. .  அவரது அன்னையால் நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு அவர் தெளிவாக பேச ஆரம்பித்த சித்திரம் உணர்வெழுச்சி தந்த்து.  அவரின் எழுத்து போலவே குரலும் கணீரென்றிருந்த்து. தனது பயண வாழ்வில் பல செறிவான அனுபங்கள் பகிர்ந்தார். கடலின் கடுமையான சூழல் பற்றியும், மாலுமிகளுக்கான விசா கொள்கைகள் பற்றியும் விளக்கினார். கடலின் நடுவே கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட தீவிபத்தினை மட்டுபடித்தியதை விவரித்த நிகழ்ச்சி கேட்டு விதிர்விதிர்த்தேன்.  பொதுவாக கப்பலில் பணிபுரியும் நண்பர்கள் மீதிருக்கும் தேய்வழக்கான சர்வதேச பாலியல் தொடர்பு போன்ற சில எண்ணங்களை கட்டுடைத்தார் , மெக்சிகன் மாலுமி வழியாக மீள கட்டினார்.

இரண்டவாது நாள், காலையில் வழக்கம்போல அரைமணி நேரத்திற்கு முன்னரே ஜெ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருடன் குறுநடை சென்று க.நா.சு டீ குடித்த கடையில் கூட்டு தேநீர் அருந்தினோம்.  வழக்கம்போல எந்த வித சம்பிரதாயமும் இல்லாமல் கலந்துரையாடல் அரம்பித்தது.  முதலில் தென்னிந்திய கட்டிட கலை பற்றியும், குடைவரைவு கோயில்களின் அமைப்பை பற்றியும்  ஆரம்பித்தது.  புனே அருகில் அமைந்திருக்கும் புத்த பாணி கட்டிட கலையில் அமைந்த, கார்லே குடைவரைவு கோயில்தான்  இந்தியாவிலேயே மிக தொன்மையான குடைவரைவு கோயில் என்றார்.  தொன்மையான கலவெட்டுகளை  பாதுகாக்கும் அக்கறை இல்லாத ஒரு சமூகமாக இருக்கிறோம் என்றும். மதுரை அருகே இருக்கும் சமணர் கல்வெட்டுகள் கவனிக்காமல் விட்டதனால், அழிந்து வருவதாகவும் கூறினார். காது நீண்டு தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும், சமண தீர்தங்கரர், தங்கள் காது செட்டி  மூதாதையர் சிலை என்று ஒரு ஊரின் மக்கள் பாதுகாத்து வருவதையும் குறிப்பிட்டடார்.

ஆரம்ப கால தமிழக கட்டிட கலையில் தூண்கள், மரத்தினை கொண்டு அமைந்திருக்கலாம் என்றும், பின்னர் கல்லை வெட்டி எடுக்கும் தொழிற்நுட்பம் வந்தவுடன் கட்டப்பட்ட கோவில் கட்டிடங்களில்  மரதூண்கள் கல்தூண்களாக மாறியிருக்கலாம் என்றும் கூறினார். சில கோயில்களின் கல்லாலான தீர்த்த குழாயில், மர சட்டக வடிவில் அமைந்த கல். முட்டு கொடுக்க, அமைந்திருப்பத்தாகவும், அது முந்தைய காலகட்ட மரகட்டிடகலை தொழிற்நுட்பத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும், ஆனால் அது கல்லாலான தீர்த்த குழாய்க்கு தேவையில்லை எனவும் ஜெ கூறினார்.

கட்டிடகலை, மருத்துவம் போன்ற நமது முன்னோர்கள் வளர்த்து எடுத்த துறைகள் என்பது , தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட பட்டறிவு என்கிற வகையில் பழக்கப்பட்ட தொழிற்நுட்பமாக மட்டுமே இருந்ததாகவும், அது அறிவியல் கொள்கைகளாக கோட்பாடுகளாக மாறவில்லை என்பது மாபெரும் குறை என்றார். அவ்வாறு அறிவியலை  கோட்பாடாக மாற்றப்பட்ட ஐரோப்பாவில் மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்த்து எனவும் கூறினார்.

லக்ஷ்மி மணிவண்ணன் அவர் அண்மை காலத்தில் எழுதிய கவிதையை வாசித்தார்.  படிகம் ரோஸ் ஆன்றோ நிழற்தாங்கல் அமைப்பின் நோக்கம் பற்றி சிறு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர் ஓருவர், தமிழாசிரியர்கள் மீது ஜெ வைக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் நடைமுறை உண்மை என்றும்.  விதிவிலக்காக,  தான் தன்னால் இயன்ற அளவு இலக்கியத்தையும் ,அறிதலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதாகவும் கூறினார். அதற்கு ஜெ தான் பணிசெய்த காலம் முழுவதும் மாணவர்களுக்கு இலக்கியத்தை  வரலாற்றை அறிதலையும் கற்பித்த்தவர் அ கா பெருமாள்.  50 புத்தகங்க்ளுக்கு மேல் எழுதிய எழுத்தாளரான ,அவர், கற்பித்தலில் பாட திட்டத்தை தாண்டி அறிவூட்டுதலில் உதாரண ஆசிரியாராக இருந்திருந்திருக்கிறார். இருப்பினும் அவர் பணியாற்றிய கல்வி நிறுவனம்  பிரிவு உபசார விழா கூட நடத்தப்படாமல் அவருக்கும் பணிஓய்வு அளித்தது. பின்னர் அவரின் பங்களிப்பின் மீது கொண்ட மதிப்பால், தானே விழா நடத்தியதாகவம் ஜெ கூறினார்.  அவ்வாறு கற்ற  அ கா பெருமாளின் மாணவர்களில்  பலர் தனது இணையதளத்தில் வந்த நல்ல வாசகர்களாக அமைந்திருக்கார்கள் என்றார். ஆசிரியர்களின் கடமை விளைவினை எண்ணாமல் விதைத்தல் என்றார் ஜெ. 

பின்னர் விவாதம் படைப்பினை நோக்கி சென்றது, படைப்பில் மேலும் மேலும் நுண்மையை சேர்ப்பதுதான் படைப்பாளியின் கடமை என்றும், ஒரு படைப்பில் தத்துமும் சேர்ந்து நிகழ்ந்தால் அது அந்த படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றார். நவினத்துவர்களான அசோகமித்ரன், சுந்தர ராமசாமி அவர்கள் மரபின் மீதும், தத்துவத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றார். உதாரணமாக ஒரு கதையை விவரித்தார்.  தன் குழந்தையை தானே கொன்ற அன்னையை பற்றிய கதை என்றால், சமாத்காரமாக கதையை மட்டும் சொல்லி வாசகனுக்கு அனுபவத்தை நிகழ்த்த மட்டுமே செய்யாமல், அந்த நிகழ்வின் தத்துவ விசாரணையே படைப்பினை ஆழமான அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார்..

அவரின் சிங்க்ப்பூர் பயண அனுபவத்திலிருந்து கிழக்கு ஆசியா நாடுகளின் கல்விமுறைகள் பற்றி விவாதம் நிகழ்ந்தது.. அந்த அரசாங்கம் பல மில்லியன் செலவழித்தும், புதுமையான பல சலுகைகள் அளித்தும் புத்தகவாசிப்பினை ஊக்குவிக்க முடியவில்லை என்றும் கூறினார்.  ஜப்பான் ஒழுக்கம், உழைப்பு, மனப்பாடத்தை வலியுறுத்தும்  பாரம்பரிய கல்விமுறையால் தேங்க ஆரம்பித்திருப்பதாகவும், அதன் தாக்கம் கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் தெரிவதாகவும் கூறினார். பின்னர் இந்திய கல்விமுறையை பற்றி விவாதிக்கையில், மெக்காலே அறிமுகப்படுத்திய சமன்படுத்தப்பட்ட தரகல்வி தான் பாரம்பரிய கல்வியை அழித்தது என  வாசகர்கள் கடுமையான விமர்சனங்களை கூறினார்கள்.  பிரிட்டன் தந்த அரசாங்க சட்டம், நீதிமன்றம், அறிவியல், தொழிற்நுட்பம் இவற்றுடன் சமன்படுத்தப்பட்ட தர கல்வியும் பரவலான  மக்களுக்கு  சென்றடைந்து நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது என்றும்.   மேற்கினை பற்றி விமர்சிக்கையில்  கொடைகளான மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டே, சாபங்களான சுரண்டல், பஞ்சம், பிரித்தாள்தல் போன்றவற்றையும் பேசும் சமனிலை வேண்டும் என்றார்.

இன்னும் இன்னும் என்ற எண்ணத்துடன் சோர்வே இல்லாமல், விழா முடிவது தெரியாமல் முடிந்தது. மதியம் அவியல், பாயாசத்துடன் கூடிய உணவு, மாலையில் நாகர்கோவில் சென்று அசோகமித்ரன் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று, மனநிறைவுடன் தூங்கி எழுந்து. சென்னை வந்து சேர்ந்தேன்.

<முற்றும்>

வியாழன், 29 டிசம்பர், 2016

விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–வண்ணதாசன் உரை

IMG_8435

எழுத்தாளர் சு வேணுகோபால் உரையாடலின் நடுவே, பார்வையாளர்களின் வாழ்த்துக்களுடனும், வணக்கங்களுடனும், மேடையில் வந்து அமர்ந்தார் எழுத்தாளர், கவிஞர் வண்ணதாசன் அவர்கள். மிக மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரலில் அவரது உரையை துவங்கினார். அவரின் கதைகள் வாசகனிடமிருந்து பெற்றவற்றை வாசகனுக்கே திரும்ப அவர் எழுதும் நீண்ட கடிதம் என்றார்.  ஆற்றின் கரையிலிருந்து ஆற்றின் நடுவில் ஓடும் வெள்ளத்தை பார்ப்பதுபோல, கடலின் கரையிலிருந்து ஓயாத கடலை பார்ப்பது போல, சுடலைமாடன் கோயில் வாசலில் இருந்து தெருவில்  இருக்கும் சலிக்காத மனிதர்களை பார்ப்பது போல, வாழ்வின் ஓரத்தில் இருந்து தீராத மையத்தை பாரப்பது தனக்கு பிடித்திருக்கிறது என்றார். ஓரு பெரிய விவசாய குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பிறந்திருக்கின்றார். அவரது சொற்களை, வாசகங்களை,  வாசகன் வந்து அவருக்கு ஞாபகப்படுத்தும் நிலையிலுருக்கும் எழுத்தாளனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்..  பதட்டத்திற்கு முந்திய அமைதியாக, அந்த அமைதியை கலைக்கும் உங்களிடம் பெற்ற சொற்களாக இருந்து,  உங்களுக்கே திரும்ப அளிப்பவை எனது கதைகள் என்றார்.  குமிழியிலே உதிர்ந்த சிறுகுகள், இலைகள் மேலும், கீழும் வளரும் புழுக்கள், குறுக்கிடும் கீரிபிள்ளைகள் போல என பல வர்ணங்களை காட்டி, அதனை உடைத்துவிட்டு திரும்புகிறேன் என்றார்.  ஒரே நேரத்தில் தான் புல்லாகவும், மானாகவும் இருக்க விரும்புவதாக கூறினார்.

மிகச்சிறியவற்றை உருபெருக்கி நுட்பமாக்கி, பேருருவத்தில் காட்டுவதே இலக்கியவாதியின் செயல் என்கிறார். உலகம் முழுவதற்கும் சமைக்கும் சமையற்காரி போல, கிரகித்து கொண்ட பாட்டிகளின் கதைகளை கூற விரும்புவதாக கூறினார். அம்மாச்சி பெற்ற அனபுமகள் வளர்த்த , பசியே அறியாத 6 குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார். வாழ்வில் அவர் கடைபிடித்து வரும் அதிகபட்ச நேர்மை, உணமையை போல படைப்பகளை எழுதுகிறேன் என்றார். வாசகர்ளை நோக்கி, தயவு செய்து, கல்யாண்ஜியாக, வண்ணதாசனாக என்னை தொடுங்கள். மலையப்பனுக்காக மன்னிப்பு, முத்தத்தை கொடுங்கள் என்றார். மாரியப்பன் என்கின்ற மலையப்பன் சமையற்கார், வாய்பேச முடியாதவர், சாக்பீஸால் எழுதிய பையன், கற்பனைக்கெட்டா ஓவியம் வரைபவர், ஆனார் இறுதியில் மாட்டு தொழுவத்தில் நாண்டு கொண்டிருக்கிற செய்தி கிடைத்தாலும், மலையப்பன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் மாரியப்பன் இறந்து விடுகிறார்கள் என்றார்.

IMG_8448

அப்போது அவரின் கதையில் வரும் காசர்கோடு ராஜா ஹேர் கட்டிங் அனட் சலூன் வைத்திருக்கம் மலையப்பனை பற்றி கேட்டார். 1959ல் 3வது படிக்கும் ஆசிரியர்,  நாளிதழில் சிரிப்பு படம் வரைந்து அதற்கு அன்று அவருக்கு மிகப்பெரிய சன்மானமாக 5 ரூபாய் வாங்கும் உற்சாக மாணவனாக இருந்திருக்கிறார். அவரின் ஓவியங்களின், கோடுகள், மனிதர்களை வரையும் அமசத்தினால் கவரப்பட்ட,  முதல் ரசிகரும், வாசகருமான காசர்கோடு மலையப்பன் அவருக்கு பிரியமான கடிதங்களை தபாலட்டையில் அனுப்பி பதில் பெற்றுக்கொள்கிறார்.  ஒருநாள் தபாலில் பொதிபோன்ற மூட்டை அவருக்கும் வருகிறது. அது காசர்கோடு மலையப்பன் பரிசாக அனுப்பிய துணி. அதுவரை ஊதா நிற அரைகால் சட்டை அண்ந்த ஆசிரியர், முதன் முதலில் மலையப்பன் பிரியத்துடன் அளித்த துணியில் இரண்டு கால்சட்டை தைத்து அணிகிறார். அதனை அணிந்து கொண்டுதான்,  B com  படிக்கும் போது, மாணவர், ஆசிரியர் குழு புகைபடத்தில் பதிவாகியிருக்கின்றார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார். எழுத்தாளர் குகைகளில் மறைத்து வைத்திருந்த  மலையப்பனை, அவரின் வாசகரான ஜெமோ நேரில் சந்தித்து அவரின் ‘’சொல்ல மறந்த கதை’ தந்த உணர்வினை பகிர்ந்திருக்கிறார்.

அவரின் பேச்சினை தொடர்ந்த கலந்துரையாடலில், சு வேணுகோபால் அறைதோழரின் நண்பரான செல்வம் வண்ணதாசனின் அணுக்க சகவாசகராக இருந்திருக்கிறார். 20 வருடங்களாக தொடர்ந்து அவரின் எழுத்துகளை ஆழ்ந்து தீவிரமாக வாசித்து வரும் நண்பர். வண்ணதாசனை படிக்கவில்லை எனில் அவரது மனைவியை விவாகரத்து செய்திருப்பேன் என்றிருக்கிறார். அதற்கு பதிலாக வண்ணதாசனின் எழுத்துகளால் அவரை மீண்டும் காதலித்திருக்கிறார். தானும் ஒரு படைப்பாளி என எண்ணாமல், ஒரு வாசகனாக படித்ததில் சமவெளிதான் அவரின் மிகசிறந்த கதைதொகுப்பு என்றார். சின்னு முதல் சின்னு வரை கதையில் தினகரி அவரின் தந்தையிடம் ‘’கொய்யாபழம், மாதுளை பழம் வாங்கிவந்திருக்கிறோம்’ என கூறுமிடம் நுட்பமாக வந்திருப்பதாகவும், தான் ரசித்ததாகவும் கூறினார். 

எழுத்தாளர் பவாசெல்லதுரை, வண்ணாதாசன் எழுத்தின் வழியே தன் நிலத்தில் அரிதாக காண கிடைக்கும்  குல்முகர் மலரினையும், வாதம் மரத்தையும் தானும் மனம் வழியே கண்டதாக கூறினார். தேவதேவன் வீட்டின் தட்டோட்டியில் (மாடி) உதிர்ந்து கிடக்கும்  குல்முகர் மலர் செறிவை நினைவுபடுத்தி, எழுத்தாளனுக்கு அகற்றப்படாத வாழ்வின் குப்பைகள் , சருகுகளும் வேண்டுமென்றார்.  அதற்கு, ஆசிரியர், பவாவின் எழுத்தில் தான் நேரில் பன்னீர் மலர்களையும், பவளமல்லியையும் கண்டதாக பதிலளித்தார். எளிமையில்தான் நுட்பங்கள் வந்து குமியும் என்றார். ஒரு வாசகி தான் சிறு பெண்ணாக இருந்த போது எழுதிய வாசக கடித்ததிற்கு, பொறுமையும், நிதானமுமாக பதில் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். அன்னை வீட்டிற்கு, விடுமுறைக்கு திரும்ப வரும் திருமணமான பெண் போல வண்ணதாசன் எழுத்தை வாசிக்கும் போது உணருவதாக கூறினார்.

அவரின் பேச்சு என்னும் பட்டாம்பூச்சியை அதே படபடப்புடன் முழு கவனத்துடன், மென்மையாக ஏந்தி, உள்ளங்கைகளில் வைத்து , ரசித்து வாசிக்கும் உள்ளங்களுக்குக்கு திரும்ப அளிக்க நான் முயன்றிருக்கிறேன்

புதன், 28 டிசம்பர், 2016

விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–சு வேணுகோபால் உரை

இரண்டாவது நாள் காலை 6 மணிக்கு எழுந்தேன். எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடனான காலை நடையை தவற விட்டு விட்டோம் என என்னை நானே கடிந்து கொண்டே அவசரமாக குளித்து புறப்பட்டேன்.  அறையில் உடனிருந்த  கமலகண்ணன், சுசீல், விஜயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த வேறு ஒரு குழுவாக நடை சென்றோம். வழியில் ஏற்கனவே நடந்து சென்ற ஜெமோ, கடலூர் சீனு, அரங்கசாமி, விஜயராகவன் அணியுடன் சேர்ந்து கொண்டோம். தேநீர் கடையில் விவாதம் பன்னாட்டு உளவு பற்றி சென்றது. ரஷ்ய உளவுதுறையான KGP ல் ஊடுறுவிய அமெரிக்க உளவாளி பற்றி ஜெமோ பேசினார். அந்த உளவாளி பெட்டி பெட்டியான ஆவணங்களுடன் பிரிட்டன் தூதரகத்தில் சரண்டைய சென்ற நிகழ்வின் சித்திரம் Fall of the Titan என்ற புத்தகத்தில் பதிவாகியிருப்பதையும் பற்றி உரையாடல் நிகழ்நத்து.

IMG_8399

காலை உணவு பரிமாற உதவியபின் அவசரமாக உண்டு முடித்து,  ஏற்கனவே தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வு நடந்த அரங்கத்திற்கு சென்றோம். முதல் அமர்வில் எழுத்தாளர் சு.வேணுகோபால் கலந்துரையாடலை நடத்தினார். எழுத்தாளன் வாழ்வனுபவத்தையும் அவனது படைப்பின் பரப்பில் அந்த அனுபவத்தின் பங்கினை பற்றியும் விவாதம் நிகழ்ந்தது. இவையிரண்டிற்கும் நேரடியாக உள்ள தொடர்பை அருதியிட்டு சொல்ல முடியாது. உதாரணமாக நிலப்பிரபுவான டால்ஸ்டாய் வாழ்வில் அடைந்த அனுபவத்தினை விட அவரின் பெரும்படைப்புகளின் பரப்பு மிக மிக அதிகம் என விவாதிக்கப்பட்டது. கு.அழகிரிசாமியின் ‘’சந்திப்பு’ என்ற கதையை சொன்னார் வேணுகோபால், பருத்தி காட்டில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெரியம்மாவை,  சந்திக்க செல்கிறார் கதை சொல்லி, அவரின் சேலையில் இருந்த முடிச்சை பார்த்து கண்டுகொள்ளும் அவர் தன்னை பற்றி நான்தான் உங்கள் மகன் என கூறி  மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திய போது கூட, பல நீண்ட கால விவசாய உழைப்பால் நினைவு மங்கிப்போய், நைந்து போன உடலுடன்  பெரியம்மா ‘ம்’ என ஒரே சொல்லை சொல்லி கடந்து போகிறார். விவாதம் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் ஆளுமை, எழுத்தின் பக்கம் சென்றது. ஜெமோ, இந்தியாவில் கடந்த 50 வருடங்களில், உருவாகிய 10 மாபெரும் எழுத்தாளர்களில் பஷீர் கண்டிப்பாக ஒருவர் என்றார். இந்தியாவிலிருந்து மொழியாக்கம் மூலம் மேற்கில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஆளுமை பஷீர் என்றார். அரங்கசாமி ஓங்கி மனதினை குத்தும் நிகழ்வுகள் அவரின் படைப்பில் இல்லையென்றாலும் நிஜமான பிரியம் இருக்கும் என்றார். ஜெமோ 1969 முதல் 1972 வரை தடை வரும் முன் பெரிய விஷயங்களை தீவிரமாக எழுதினார் பஷீர். 1972ல் சுபி த்ததுவத்தில் நம்பிக்கை கொள்ளும் வரை, முதலில் தத்துவத்திலும், பண்பாட்டிலும் ஆழ்ந்த அவநம்பிக்கையுடனிருந்தார்,  அதன் பின் பல எளிய கதைகளை எழுதினார் என்றும்.

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 12 வருடங்களுக்கு பின் வீடு திரும்பிய மகனுக்காக, ஒவ்வொரு நாளும் சமைத்து வைத்து காத்திருக்கும் அன்னையின் பேரன்பின் சித்திரம் அவரின் ஒரு கதையில் வருகிறது. ஒரு நண்டின் படத்தை , தர்பாரில் வரைந்து மாட்ட ஒரு அரசனுக்கு தோன்றுகிறது ,  அதற்காக சீனாவிலிருந்து ஓவியரை அழைத்து வரும் மன்னன் அவனுக்கு  பொன்னையும், அரண்மனையையும் 2 வருட நேரமும் கொடுத்து காத்திருக்கிறார். கடைசி நாள் வரை காத்திருந்து, ஓவியம் வரைந்து கிடைக்கப்பெறாமல் பொறுமையிழந்து, இன்றிரவு 12 மணிக்குள் அவன் வரையவில்லையெனில் அவன் தலையை கொய்துவிடு என காவலாளிகளுக்கு கட்டளையிடுகிறான். கடைசி நிமிடத்தில் அவன் தீட்டிய வெறும் கோடு போன்ற ஓவியம், மன்னனின் மகனால் மட்டும் அந்த ஓவியம் நண்டு சென்ற இடத்தின் தடம் என அறிந்து, மற்றவருக்கு அவன் உணர்த்துவதாக கதை முடிகிறது.  மாபெரும் திறப்பு, தத்துவ விசாரணை அவரது கதையில் பெற முடியாது, ஆனால் சின்ன சின்ன விஷயங்களில் கனிவும், கருணையும் கொட்டி கிடக்கும் என்கிறார். தமிழில் அவரது கதைகளின் மொழியாக்கம் ‘பாத்தும்மாவுடைய ஆடு’ கிடைக்கிறது என்றார்.

விவாதம் சு.வேணுகோபால் கதைகள் பக்கம் திரும்பியது. ஆட்டம், நிலவெண்மை கதைகளில் அருமையான பாத்திரம், கதைகளம் இருந்தும் அது முழுவதும் நிகழாமல் முடிந்துவிட்டதாக சுநீல் கருதுவதாக கூறினார்.  ஆசிரியர் அவர் கதைகளில் மனித மனதின் ஊடாட்டத்தை, வாழ்க்கை பற்றிய விசாரணையை பதிவு செய்வதே முதன்மை நோக்கம் என்றார். இந்த கதைகளின் மூலம் தன் பிறந்த இடத்திலிருந்து, வேறு ஒரு நிலத்திற்கு சென்று வாழும் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை சொல்ல முயன்றிருக்கிறேன் என்றார். அவரின் ஒரு கதையில் நிலம்பெயர்ந்து சென்ற ஒரு கதை சொல்லி, தனது 55வது வயதில் பிறந்த ஊருக்கு திரும்புகிறான். அவன் மீண்டும் அங்கு வந்து காலூன்றுவதில் உள்ள வேதனையையும் தத்தளிப்பையும் விவரித்திருக்கின்றேன் என்றார். இந்த எழுத்து சிக்கல்களை தவிர, எழுத்தை மட்டும் நம்பி வாழ இயலாத தமிழ் சூழலில், வெளியில் இருந்து எழுத்தாளன் எதிர்கொள்ளும் லௌகீக அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்றார். இந்த கதைகள் இன்னும் எழுதப்படாத அவரின் நாவலின், எழுதப்பட்ட பகுதிகள் என்றார். ராஜகோபாலன் அவர் கதைகளில்  திருநங்கைகள், குழந்தை பெற முடியாத ஆண் போன்ற குறைபாடுள்ள மனிதர்கள் வீழ்ச்சியடைந்து பின்பு மீளும் சித்திரம் மீண்டும் மீண்டும் வரும் காரணம் என்ன? என் வினவினார். தனது ‘பால்கனிகள்’ மற்றும் பிற கதைகளில் ஆதரவை தேடும் ஏற்றதாழ்வு மிக்க மனிதர்கள், வாழ்வதற்கான நம்பிக்கையை துருத்தலில்லாமல் சொல்ல முயன்றிருப்பதாக ஆசிரியர் பதிலளித்தார்

IMG_8393

தொடர்ந்த உரையாடலில், எழுத்தாளர், தனது வாழ்வனுவங்களை பற்றி விவரித்தார். இளம் ஆடு ஒரு சிறிய ஓடையை அல்லது நிலபிளவை  ஒரே நேரத்தில் நான்கு கால்களினாலும் தாவுவது ‘மளிச்சு’ என்ற சொல் மூலம் தேனி வட்டாரத்தில் வழங்கப்படுகிறது என்றார்.  மாடு நடப்பது ‘தரக் தரக்’ எனவும் அங்கு சொல்லப்படுகிறது என்றும், நாய் ஓடுவது தொத்தலாட்டம் எனவும் சுவாரஸ்யமாக விவரித்தார்.   கி.ரா. எழுத்தில் இதுவே லொங்கோட்டம் எனப்படுகிறது என்றார். அதே போல கிராமத்தில் மாடு வாங்கும்போது மொத்தமாக புல் அள்ளி அதன் முன்னால் போட்டுவிட்டு, எந்த மாடு அதை கொத்தாக சாப்பிடுகிறதோ, அதுவே ஆரோக்கியமான மாடு எனவும். ஒவ்வொரு புல்லாக வாயால் எடுத்து மெதுவாக சாப்பிடும் மாடு உழவுக்கு உதவாது எனவும் கூறினார். அவரின் வீட்டிற்கு பின்னால் இருக்கும் 80 அடி ஆழ கிணற்றில், வீட்டில் வளர்க்கும் நாயை கைகளில் பிடித்துக்கொண்டே உள்ளே தாவி, அந்த நாயின் துள்ளலினை குதூகலமாக அனுபவித்ததை விவரித்தார். அதே கிணறும் , அதற்கு தண்ணீர் அளிக்கும் குளமும் பத்து வருடங்களாக வற்றி வருகிறது என்றார்.

இந்த தலைமுறை வரை விவசாயத்தை நம்பி வாழும் அவரது குடும்பத்தின் வாழ்வு சூழலலை அவர் விவரித்தது வியப்பினையும், நெகிழ்ச்சியையும், வருத்தத்தினையும் ஒருசேர தந்தது.  கடுமையான உழைப்பாளிகளான அவரது தாய் மற்றும் தந்தை. சிறுக சிறுக சேமித்து வாங்கிய 30 ஏக்கர் நிலத்தில், 10 ஆண்டுகளாக விடாமல் விவசாயம் செய்து, ஒவ்வொரு வெள்ளாமையிலும் தோற்பதாகவும்,  7 இலட்சம் வரை கடனாளியானதாகவும் கூறினார். தன்னைவிட 10 வயது பெரியவரான, அவரை தம்பி என கருதாமல் மகன் போல வளர்த்தவர் அவர் அண்ணன். இருவருக்கும்  சொந்தமான நிலத்தில், மொத்தமாக பருத்தி, தட்டாம்பயிறு என விவசாயம் செய்து பராமரிப்பதுதான் அவரது அண்ணன் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம். 20 வருடமாக அந்த 10 ஏக்கர் நிலத்தின் விளைச்சலில் ஆசிரியரின் பங்கினை அவர் என்றுமே கேட்டு பெற்று கொண்டதில்லை எனவும், அண்ணனாக பார்த்து தருவதுதான் கூறினார். காங்கேயம் காளையை வளர்பபதற்கு ஒரு நாளில் 300 வரை செலவு பிடிக்கும், மெல்லிய சாக்கினை மடித்து வைத்து அந்த காளையின் முதுகினை தடவி கொடுத்து பாசமாக வளர்த்தார் என்றார். அதற்கு மாற்றாக டிராக்டரை பயன்படுத்தலாம் என்ற யோசனைக்கு பதிலாக, கட்டுதரையில் காளையில்லையென்றால் அண்ணன் இறந்து விடுவேன் எனறார் அவர் அண்ணன். தன் மகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த அண்ணன் தன் உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல், மருத்துவத்திற்கு வைத்திருந்த 6ஆயிரம் ரூபாய், கடனுக்கு வட்டி கட்ட உதவும் என, உடல் நோயை தாங்கியிருக்கிறார். தீயூழாக, குளத்திலும் தண்ணீரில்லை, மழையும் பெய்யவில்லை.  எவரிடமும் இதனை பகிராமல், மன அழுத்ததில் இருந்த அவரது அண்ணன், அவரது நிலத்தில் , வளரந்து கருகும் பயிரின் நடுவேயே உட்கார்ந்து அமர்ந்து மரணித்திருந்த இருந்த காட்சியை ஆசிரியர் விவரித்தது மனதை வருத்துவதாக இருந்தது. இந்த சரிவு ஒவ்வொரு விவசாயியின் சரிவு,  ஒவ்வொரு முறையும் அவரை சந்தித்து பின் விடைபெறும் போது,  பேருந்தில் படியில் ஏறப்போகும் முன்வரை, கொடுக்கவா வேண்டாமா என தயங்கி பின், மனம் பொறுக்காமல் அவர் கொடுக்கும் 600 ரூபாயை எண்ணி, அந்த தயக்கத்தினை எண்ணி வருந்துவதாக ஆசிரியர் கூறினார். எதிர்காலத்தில் தான் எழுதப்போகும் மாபெரும் படைப்பிற்காக இந்த  அனுபவங்களை சேமித்து வைத்திருப்பதாக சொல்லி, தன் உளம் திறந்த நேர்மையான, வலிமிகுந்த பேச்சினை நிறைவு செய்தார் ஆசிரியர்.

திங்கள், 26 டிசம்பர், 2016

விஷ்ணுபுரம் விருது 2016 முதல் நாள்

 

 

IMG_8238 (1)

 

 

முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முன்னமர்ந்து நடத்தினார். மரபில் இருந்து வளமையான சொற்கள் அற்று போய்விடாமல், அடுத்த தலைமுறை வாசகனுக்கு எடுத்து அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் உற்சாகத்துடன் நிகழ்ந்தது.  கவிதை ஞானத்திற்கு மிக அருகில் இருக்கிறது எனவும், மொழியில் பலவேறு புதிய சொற்கள் வந்து  குவிய வேண்டியது அவசியம் எனவும் கூறினார். உதாரணமாக கம்பராமாயணத்தில், யானை என்ற பொருள்படும்  களிறு, குஞ்சரம், வாரணம் போன்ற பல சொற்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வெவ்வேறு சொற்கள் அவற்றின் ஓசைநயத்திற்கு ஏற்ற வகையில் செய்யுளில் அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டி காட்டினார் நாஞ்சில். ஆய்வாளன், விமர்சகன், அகராதி, கலைசொல் உருக்குபவன் இவர்களை விட எழுத்தாளனுக்குதான் இந்த பணியின் பெரிய பொறுப்பு என விவாதிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, கன்னியகுமாரி மாவட்டத்திலேயே மூன்று தனி தனி வட்டார வழக்கு இருப்பதையும், அந்தந்த வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் அவசியத்தை பற்றி விவாதம் நிகழ்ந்த்து. இந்த வட்டார சொற்கள் வாசகன் வாசிப்பிற்கு தடையாக இருப்பதால், இலக்கியத்தில் இவற்றை சமன்படுத்தி ஒற்றை வழக்காக்கும் போக்கு அவசியம்தானே என்ற கேள்விக்கு நல்ல வாசகன் இந்த தடைகளை பொருட்படுத்தாமல், வெல்விளியாக எடுத்து இலக்கியத்தின் சாரத்தை தேடி வாசிப்பான் என்றார்.

நாஞ்சில் அவரது மராட்டிய நண்பருடன் பழகியபோது நடந்த நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அந்த நண்பர் வீட்டில் இருவருக்கும் சேர்த்து உணவாக ரொட்டி தயார் செய்யப்பட்டது. ரொட்டி பரிமாறியபோது, இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். அப்போது, விருந்தினரான நாஞ்சில் காத்திருக்கும் நிலை வந்தது. அதை கண்ட, அவர் நண்பரின் மனைவி அந்த ரொட்டி இரண்டாக பிரித்து, பாதி பாதி ரொட்டியை சுட்டு இருவருக்கும் பகிர்ந்தளித்தார் எனவும், அதனால் உற்சாகமாக பேசியபடி உணவருந்தினார்கள் எனவும் நெகிழ்வுடன் மராட்டியர்களின் விருந்தோம்பலை நினைவு கூர்ந்தார். இரயிலில் முதுகை திருப்பி வாசனையை கூட பிடித்து வைத்து உணவு உண்ணும் தமிழர்களின் விருந்தோம்பல் வெடிச்சிரிப்புடன் பகடி செய்யப்பட்டது. 

கம்பராமாயண வாசிப்பில் நுழையும் வாசகன் சந்திக்கும் சிக்கல்கள் தொடர்பான விவாதம் நடந்தது முதன்மையான தளை ராமனை கடவுளாக, கம்பராமாயணைத்தை புனிதநூலாக வாசிப்பதுதான். அந்த நூலையும் ஒரு இலக்கிய படைப்பாக எண்ணி, ராமனை கதைக்குள் இருக்கும் பாத்திரம் என நினைத்து, அதற்கான கவனத்தையும், உழைப்பினையும் செலுத்தினால் கண்டிப்பாக வாசிப்பின்பம் கிடைக்கும் என்றார். செய்யுளை சீர்பிரிக்க உதவும் பல உரைநூல்கள் கணிசமாக கிடைக்கின்றன எனவும், கோவை கம்பன் கழகம் வெளியிட்டுள்ள உரைநூல் நல்ல துணை எனவும் கூறினார்.

புதிய சொற்கள் தொடர்பான விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், அவர் கண்டுபிடித்து அவர் எழுத்தில் பல முறை பயன்படுத்திய ‘பரப்புரை’ என்ற சொல்லை தினதந்தியில் படிக்க நேர்ந்த்து, ஆச்சரியமான அனுபவம் என்றார்.  புதிய சொற்களை கண்டறிவதோடு இல்லாமல், ஏற்கனவே புழங்கும் தமிழ் சொற்களை இணைத்து பிறமொழி சொற்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும் கூறினார். உதாரணமாக ஜாதகம் என்ற சொல்லிற்கு பிறவிநூல் என்ற சொல் பொருத்தமாக இருக்கிறது என்றார். எனக்கு அவர் எழுத்திலிருந்து படித்த சவால் என்னும் சொல்லுக்கு பதிலாக வெல்விளி என்ற சொல்லும், அதிர்ஷ்டம் என்ற சொல்லிற்கு நல்லூழ் என்ற சொல்லும் நினைவிற்கு வந்தது. Risk என்ற ஆங்கில சொல்லிற்கான சரியான பொருளை தரும் தமிழ் சொல்லை இன்று வரை தேடிகொண்டிப்பதாக நாஞ்சில் கூறினார். நேரிடர், அபாயம் போன்ற சொற்கள் நெருக்கமான பொருளை தந்தாலும் பொருத்தமான சொற்கள் இல்லை என்றார்.

 

IMG_8244

 

மேடை நாடக நடிகர், திரைபட நடிகர், எழுத்தாளர் பாரதி மணி, எழுத்தாளர் க.நா.சு வின் மருமகன் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடனான கலந்துரையாடல் உற்சாகமாக நிகழ்ந்தது. நவீன தமிழ் நாடகங்கள் மீதிருக்கும் அவரின் விமர்சனத்தை கறாராக முனவைத்தார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை நாடகம் எழுத கேட்டுகொண்டு பின் அவர் எழுதிய நாடகங்களை மேடையேற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த நாடகத்தில் இருந்த பெண் பாத்திரத்தின் வசனத்தை, அப்போது அவருடன் வழக்கமாக நடித்த மேடை நடிகைகள் பேச மறுத்த நிகழ்வினையும், அந்த பாத்திரத்திற்கு துணிந்து நடிக்க வந்து பின்னால் அவரின் துணைவியானவர் க.நா.சு.வின் மகனாள ஜமுனா என கூறினார். அவரின் அம்மா செய்த மசால் வடையின் எண்ணிக்கை குறித்து எண்ணாமல் அவர் சாப்பிட்ட அனுபவத்தையும், நடிகர் ஜெமின் கணேசன் உடன் மது அருந்திய நிகழ்ச்சியையும், நிகழ்ச்சியின் இடைவெளியில் தோரணையாக அமர்ந்து பைப் புகை பிடித்தனையையும் எண்ணிய போது  ரசனையான மனிதர் என தோன்றியது. அவர் தனது பேச்சில் இலக்கிய கூட்டத்திற்கு எதிர்பார்த்து வந்த நண்பர்களுக்கு பிறழ்வு நிகழ்வாக (Aberration) இருக்க கூடாது என கூறினார். ஆனால் எந்த வித்ததிலும் பாதை மாறாமல் செறிவான கலகலப்பான கலந்துரையாடலாகவே அவர் பேச்சு அமைந்தது.

DSCN2356

எழுத்தாளர் இரா முருகன் தன்னுடைய பூர்வீகமான சிவகங்கை சூழல் பற்றியும், இளம் வயதில்,  வாசிப்பிலும் அதனை தொடர்ந்து எழுத்திலும்  நுழைந்த அனுபவம் குறித்தும் விவரித்து தொடங்கினார்.  அவரின் பணியின் போது தங்க நேர்ந்த இடங்களையும், அந்த சூழலில் இருந்து தான் பெற்ற படைப்பூக்கத்தையும் எழுத்து அனுபவத்தையும் குறித்து சுருக்கமாகவும், செறிவாகவும் பேசினார். எழுத தொடங்கிய முதல் சில வருடங்களில் கவிதை எழுதியதையும், கதை , நாவலுக்கு முன்னரே நுழைய அது தாமதிக்க வைத்ததாகவும் கூறினார். முதல் வாசகர் கேள்வியாக, சுஜாதா அவர்களின் வழி வந்தவர் என கருதப்படுவது பற்றி என்ன நினைக்கிறார் என கேட்கப்பட்டது. அந்த கருத்து ஒரே நேரத்தில் இசையாகவும், வசையாகவும் தோன்றுவதாக கூறினார். அவரின் நாவல்களில் மாய யதார்த்தவம் பற்றிய கேள்விக்கு, அது பிரக்ஞைபூர்வமாக நிகழவில்லையென்றும், எழுத்து அது இட்டு செல்லும் இடமாக இருக்கிறது என்றும் கூறினார்.

DSCN2361

முதல் நாளின் உச்சமான நிகழ்ச்சி சந்தேகமின்றி எழுத்தாளர் பவா செல்லதுரையின் பேச்சுதான். அற்புதமான உடல்மொழியுடன்,  எந்த தடையும் இல்லாமல், நேரடியாக மனதிலிருந்து கதைகள் சொன்னார். திருவண்ணாமலை ஊரில், அவரின் தெருவில், அவரின் அருகிலேயே நிறைந்து கிடக்கும் தனித்துவமான குணம், செய்கைகள் உள்ள சாதாரணமான மனிதர்களே அவரின் படைப்புக்கான ஊற்றுகண் என்றார். இவர்களின் கதைகளே அள்ள அள்ள குறையாமல் அவரை சுற்றி கொட்டி கிடக்கின்றன. அதனை எழுத்தில் கொண்டு வருவதே அவரின் இலக்கு என்றார். மலையாளத்திலிருந்து அவர் மொழியாக்கம் செய்திருக்கும், இன்னும் தமிழில் அச்சில் வராத  எழுத்தாளர் பால் சகாரியாவனின் சிறுகதையை உணர்வுபூர்வமாக, ஆங்காங்கு வட தமிழக வட்டார சொற்கள் கலந்து சொன்னார்.

ஓர்  அழகான ஆண் கரடியே அந்த கதையின் முதன்மைபாத்திரம். அதன் அழகினால் கவரப்பட்ட பல பெண் கரடிகளை விலக்கி, மனித பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறது. காட்டிலிருந்து சேகரித்த மிகுந்த ருசிமிக்க தேனை அடையுடன் கொட்டி மனித பெண்ணிற்காக காத்திருக்கிறது அந்த கரடி. தேனினால் கவரப்பட்டு, அங்கு வந்து அந்த தேனை ரசித்து சாப்பிடும், அழகியான மனித பெண்ணிடம் திருமணத்திற்கான தனது விருப்பத்தை தெரிவிக்கிறது அந்த கரடி. சிறிது யோசனைக்கு பின் அந்த பெண், காட்டிலிருக்கும் கரடி, கேரளத்து ஆண்கள் போல காலையில் எழுந்து மாத்ருபூமி படித்து,  அரசியல் பேசி பூசலிடாது. கரடி குளிக்காவிட்டாலும் அதன் வாயிலிருந்து சிகரெட் புகையிலை வாசனை, மது வாசனை அறவே இருக்காது. என்ன உடலில் கொஞ்சம் முடி அதிகம். கேரளத்து மனிதனுக்கு இந்த கரடியே பரவாயில்லை என கரடியை திருமணம் செய்கிறாள். கரடியிடம் திருமணம் செய்து,  குழந்தைபெற்று அம்மா வீட்டிற்கு திரும்ப வந்த போது.  கரடி அந்த விசயத்தில் எப்படி? என அம்மா கேட்கிறார். குழந்தை கரடியை பார்த்தாயல்லவா, எந்த குறையுமில்லை என்கிறாள் மகள். காலம் கடந்திருந்தாலும் பரவாயில்லை, இந்த மனிசனுக்கு பதில், ஒரு நல்ல கரடியை பார், மறுமணம் செய்து விடலாம் அவளின் அன்னை கேட்பதாக அந்த கதை முடிகிறது.

பின் அவர் எழுதிய கதையான எச்சம் கதையை மேடையில் சொற்களால் நிகழ்த்தி காட்டினார். கிணறு தோண்டும் ஒட்டர்கள் சமூகம் பற்றிய கதை. கதை சொல்லியின் வீட்டிற்கு,  கிணறு வெட்டுவேன் என கூறி அறிமுகமாகும் ஒட்டர் ஒருவர். வறண்ட நிலத்தின் நடுவே, ஒரு இடத்தை குறியிட்டு அதன் அடியில் காவிரி பாய்கிறது என ஏமாற்றி அங்கு  அவர் மனைவி, மகளுடன், கூடாரமிட்டு தங்குகிறான். கிணறு வெட்ட ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்தபின்னரும், பலி கொடுக்க ஆடு வாங்க மேலும் பணத்தை கேட்டு பெற்றுகொள்கிறான். ஒருநாள் இரவு  ஆட்டின் எல்லா உள்பாகங்களும் கலந்த ருசிமிகு படையலான பங்குகறியை கதைசொல்லிக்கு தருகிறான். அடுத்த நாள் 25 அடி ஆழத்திற்கு கதைசொல்லியை அழைத்து, பாறையால் அழுத்தி மறைக்கப்பட்ட முதல் ஊற்று நீரை,  அவன் பின் தலையினை பிடித்து அழுத்தி, அவனுக்கு மூச்சு முட்டி திகட்ட திகட்ட பாய்ச்சி அடிக்க செய்கிறான், இதனை கண்ட அந்த கதை சொல்லி மனைவி ஆனந்ததில் மனகிளர்ச்சியடைந்து செய்து, இரண்டு தங்க வளையல்களை தூக்கி கிணற்றுக்குள் வீச ஒட்டர் பெற்று கொள்கிறான். மீதமுள்ள பணியை முடிக்காமல் , அந்த இரவே அங்கிருந்து பணத்துடன் தப்ப தயாரகுகையில், வளையலுடன் அவனது மகள் காணமல் போகிறாள். தேடிப்பார்க்கையில் கிணறுக்குள்ளே ஒரு இருண்ட சிறிய மண் குகைக்குள்,  வளையள்களுடன் குளிரில் வெடவெடக்க உட்கார்ந்திருக்கிறாள் அவரின் மகள். என் திருமணத்திற்கு வளையல் கொடுத்த அந்த அம்மாவிற்காக இந்த கிணறை வெட்டி முடிக்காமல் வரப்போவதில்லை என அவள் கூறுவதாக கதை முடிகிறது. அதுவே அவளின் அறம் , எளியவர்களின் அறம் என சொல்லி பவா அந்த கதையை முடித்தார்.

சீரான இடைவெளிகளில் அங்கத்ததுடன், ஈர்க்கும் குரலில், கேட்பவர்கள் உள்ளத்தில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமருமாறு  இந்த  Captivating கதையை கூறினார். என் கண்கள், காதுகள் முழுக்க அந்த ஊற்று தண்ணீர் போல அவரின் சொற்கள் நிறைக்க, மூச்சு முட்ட, மனம் திகட்ட நான் அமர்ந்து அவரின் பேச்சை கேட்டு கொண்டிருந்தேன்.

 

 

IMG_8353

விழாவின் அடுத்த பகுதி,   செல்வேந்திரன் மற்றும் செந்தில் அவர்களால் புதுமையாக நடத்தப்பட்டது.  அந்த நிகழ்ச்சி இலக்கிய வினாடி வினா, ஆம் , பதில் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டு, பதில் தெரியாதவர்கள் இதுவா அதுவா என குழம்பி விழிக்கும் நிகழ்ச்சிதான். மேடையிலிருந்த மேசை பரிசாக அளிக்கப்பட போகும் புத்தகங்களால் நிரப்பபட்டது. என்னை போன்ற இளம் வாசகர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு தரையில் அமர்ந்து பங்கேற்றோம். மீதமிருந்தவர்கள் பார்வையாளர்கள் அணியாக பிரிக்கப்பட்டார்கள். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் தொடர்பான ஆழமான, ஆர்வமூட்டும் வினாக்கள் கேட்கப்பட்டது. உதாரணமாக Herman Melville எழுதிய Moby dick நாவலில் முதன்மை கதாபாத்திரத்தின் கப்பலில் First mate ன் பெயர் என்ன? விடை அறிய குறிப்பாக அந்த பெயரில் அமெரிக்காவில் உணவு நிறுவம் ஒன்று செயல்படுகிறது என சொல்லப்பட்டது. அதற்கு விடை Star Buck என்பது விடை. ஆ.மாதவன் அவர்கள் எழுதிய, திருவனந்தபுரத்தில் மணல் அள்ளும் சமூகம் பற்றிய நாவல் என்ன? என்ற கேளவிக்கு விடையாக ‘புனலும் மணலும்’ என சொல்லி, ‘ஏழாம் உலகம்’ நாவலை பரிசாக பெற்றேன். லயோலா கல்லூரி மாணவரான பாரதி அதிக கேள்விக்கு பதிலளித்து புத்தகங்களை பெற்றார். பங்கேற்ற அனைவரும் , கேள்விக்கான விடைகளை விவாதித்தபடி உற்சாகமாக எழுந்தோம். இது போல அனைவரையும் பங்கேற்ற செய்யும் நிகழ்ச்சியை விஷ்ணுபுரம் வாசக வட்டம் தவறாமல் நடத்த வேண்டும் என  கேட்டுகொள்கிறேன்.  இடையிடையே உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, புத்தகங்களை வாங்குதல். இரவில் குஜராத் சமாஜில் கல்லூரி விடுதியை  நினைவுபடுத்தும் நெருக்கமான இரண்டடுக்கு படுக்கைகள் நிறைந்த, பெரிய அறையில் நண்பர்களான கமலகண்ணன், விஜயகுமார் உடன் அரட்டை விவாதம் என நேரம் சென்று,  அந்த நகராத அப்பர் பெர்த்தில் உறக்கத்துடன் முதல் நாள் நிறைவுடன் நிறைவடைந்தது.