கருப்பையா நாடார் - ஒரு நினைவுக்குறிப்பு

என் அய்யப்பா (அ) தாத்தா கருப்பையா நாடார், விருதுநகர் மாவ‍ட்டம், கல்குறிச்சி செல்லும் சாலையில், மல்லாங்கிணறு  நாடார் மேல்நிலை பள்ளிக்கு பின்னால், சில கிமீ தூரத்தில், பருத்தியும்  வேர்கடலையும் விளையும் கரிசல் மண் ஊரான திம்மன்பட்டியில்,  1929ல் பிறந்தார்.  அவரின் பத்தாம் வயதில் 5ம் வகுப்பு படிக்கும் தருவாயில், அவரது தந்தை  P சுப்பையா நாடார் என்கிற  பதினெட்டாம்படி சுப்பையா நாடார், பங்காளிகள் நால்வர் வீட்டின் கடன் காரணமாக, சொத்துகளை விற்க நேர்ந்ததாலும். கடுமையான பஞ்சத்தினாலும், ஊரை விட்டு வெளியேறினார்கள்.  1940களில் குடும்பத்துடன்  மதுரை சிம்மக்கல் அருகே பழைய ஸ்ரீதேவி தியேட்டர் பின்புறம், பூந்தோட்டம் பகுதியில் ரூ 3 க்கு வாடகைக்கு வந்து குடியேறினார்கள்.  அன்று முதல், அவர் இறக்கும் வரை, காஜா எடுக்கும் வேலை, உணவு விடுதியில் டோக்கன் விற்கும் வேலை, மில் தோழிலாளி,  கடலைப் பொறி கடை,  மிட்டாய் கடை, விறகுக் கடை வியாபாரி, மாணவர்களுக்கு சீட்டு குலுக்கி பரிசு கொடுக்கும் கடை, மாடுகள் வளர்த்து வைகை கரையில் பேச்சியம்மன் படித்துறை அருகில் உள்ள வெங்கடசாமி நாயுடு அக்ரகாரத்தில் பால் விற்பது,  சந்தையில் பழைய பொருட்களை ஏலத்தில் எடுத்து விற்பது என பல  வேலைகள் மாறி மாறி செய்து,  முடிந்தவரை மகன்கள், பேரன்கள் தயவில்லாமல் வாழ்ந்து 28 ஏப்ரல் 2017ல் மறைந்தார்.  


மதுரை வந்தவுடன், ராஜா மில்லில் சுப்பையா நாடார் வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்தார். மில்லில் வேலை செய்ய வயது போதாததால், முதலில் டெய்லரிங் கடையில் காஜா போடும் வேலைக்கு சேர்ந்தார் கருப்பையா.  பின் பதினைந்தாம் வயதில் ராஜா மில்லில் தானும் வேலைக்கு சேர்ந்தார். தாய் பாக்கிய லெட்சுமியிடம் அனாவசிய செலவு செய்யாமல், அப்படியே மாத சம்பளத்தை ஒப்படைக்கும் வழக்கம் கொண்டிருந்தவர்.  பின்னர் மகன்களிடமும் அதையே வழக்கப்படுத்தியிருந்தார். ஒன்பது வருடங்கள் உழைத்து, வாடகைக்கு இருந்த வீட்டையே தரையடி கிரையம் இல்லாமல் ரூ 50க்கு  வாங்கி  மராமத்து பார்த்து தங்கினார்.  மதுரை  கைலாசபுரத்தில், மூக்கம்மா பெரியம்மாவின் கணவர் மூலம் தேனி மேல்கிழார்பட்டி கிராமத்தில் ராமசாமி  நாடார் அவர்களின் 15 வயது மகள் அய்யம்மாளுடன்  மணமுடிக்க  சம்பந்தம் வந்தது.   அன்றைய போடி பாசஞ்சர்  இரயிலில் சென்று பெண்பார்த்து 1953ல் திருமணம் நடந்தது.   அவர் பெயரும் அய்யம்மாள், என்னுடைய அய்யாவின் அம்மாவாதலால் அவர் எனக்கு அய்யம்மா. அவரை உறவின் வழியாக பெயர்கூறி அழைக்கும் உரிமையை மகன் வழி பேரன், பேத்திகள் அனைவரும் பெற்றோம். திருமணமான மறுவருடம் 1954ல் பிறந்த ஆண் குழந்தையான எனது  தந்தைக்கு பாலச்சந்திரன் எனப் பெயரிட்டார். பின் தங்கராஜ், செல்வராஜ், சுந்தர்ராஜ் என்று அடுத்தடுத்து மகன்களும்,  ஷீலா, மாலா என மகள்களும் பிறந்தார்கள்.


கணவனை இழந்து, குழந்தையில்லாமல் தனித்திருந்த, கருப்பையாவின் தாய் பாக்கிய லெட்சுமியின் தங்கையான  அழகிய மாரியம்மாளுக்கு, ஊர்பெரியவர்களால் பாலியல் தொந்தரவு இருந்தது.  அவர் அன்னை  1958ல் இறந்தவுடன்,  சித்தியை அழைத்து,   2001ல் இறக்கும் வரை உடன் வைத்து கவனித்திருக்கிறார். கூட்டுக்குடும்பத்தில்  இருந்தவரை பேரன்கள் அனைவரும்  சம்பள அளவில் ஏற்றதாழ்வு இருந்தாலும், ( தங்கராஜின் அரசாங்க கணக்கர் சம்பளம், பாலச்சந்திரனின் மதுரை கோட்ஸ் மில் சம்பளம், சுந்தர் மற்றும் செல்வத்தின் வொர்க்சாப் ரோட்டில் லேத் வேலைக்கான  சம்பளம்) என  பாட்டி மாரியாம்மாளிடம் அவர்களின் சம்பளத்தை அப்படியே கொடுத்துப் பின் தங்கள்  செலவுக்கு ஓரே மாதிரியான பணத்தை வாங்கியிருக்கிறார்கள்.  மாரியம்மாளே குடும்பத்தின் மொத்த வரவு செலவினை பார்த்திருக்கிறார். சில சொத்து வாங்கும் முடிவினையும் சித்தியை கேட்டே செய்திருக்கிறார் கருப்பையா.  இந்த அல்லோலம், எதிலும் பங்குபெறாத, நாடாரில்  செவத்த மகன்களை பெற்ற பெருமை மட்டும் பேச தெரிந்த,  அய்யம்மாளை, ஆதிக்கம் செலுத்தும் மிரட்டி உருட்டும் நேரடி மாமியாராகவே இருந்திருந்தார் மாரியம்மாள்.  


கருப்பையா,  ராஜா மில்லில் வேலை  பார்த்துக்  கொண்டே, துணை தோழிலாக, அங்கு பணிபுரியும் தோழர்களுக்கு,   கமிஷனை பெற்றுக் கொண்டு காண்டீன் டோக்கன் விற்பார். இதனால் மேலதிகாரிகளின் கோபத்தை பெற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். புத்தகம் வாசிப்பது,  அரசியல்  பேசியது என நான் பார்த்ததில்லை. ஆனால்  கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு மட்டும் செல்வார். காரணம் 1948ல்,  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் ராமமூர்த்தியை பற்றி விசாரிக்க வந்த போலீஸிடம், எகத்தாளம் பேசிய அவரது தந்தை  P சுப்பையாவை குண்டு கட்டாக தூக்கி சென்றதை இளைஞனான அவர்  வெறும் பார்க்க மட்டுமே  செய்ததால் இருக்கலாம். அன்றிலிருந்து கடைசி வரை கம்யூனிஸ்ட் கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிகளுக்கே தேர்தலில் வாக்களித்திருக்கிறார். ஆனால் முதலில் காங்கிரஸ் பின்பு இரட்டை இலைக்கு வோட்டு போட்ட அவர் மனைவி அய்யம்மாளுக்கு  இதை வலியுருத்தவில்லை. பாவலர் வரதராஜன் பாடும் கூட்டங்களுக்கு பாலச்சந்திரனையும், தங்கராஜையும் அழைத்துச் சென்று விடியும் வரை மூவரும் பார்த்திருக்கிறார்கள். 1967ல் காங்கிரஸை வென்று திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வந்த்தை கொண்டாடியிருக்கிறார்.


கடன் வாங்குவதை விரும்பாதாவர், ஆனால் மகன்களின் படிப்பிற்காக, கடன் வாங்கி , அது திரும்ப செலுத்த முடியாததால், கடையிலிருக்கும் தராசு படிக்கல் பிடுங்கப்பட்ட  அவமானமடைந்தார்.  அய்யம்மாள் வீட்டு சீதனமான வெண்கல அண்டாக்கள் விற்கப்பட்டு கடன் அடைந்தது.   விறகுக் கடையில் உதவிக்காக வேலைக்கு அமர்த்தியிருந்த,  சொந்த கார சிறுவன் பையில் கல்லாவிலிருந்து அவன் திருடியிருந்த பணத்தை  பறிமுதல் செய்த நாள் முதல், மகன்களை விட்டு அல்லது அவர் மட்டுமே கடை பொறுப்பை பார்த்தார்கள். தொலைக்காட்சி,  சினிமா  பார்க்கும் பழக்கம் இல்லை.  ஒருமுறை அவரது இரண்டாவது மகனான, தங்கராஜ் நண்பர்களுடன்  இரவு ஆட்ட சினிமாவிற்கு சென்ற போது, எதேச்சையாக அங்கு  வருவது போல, தன் மகன் பாதுகாப்பாக போய் வருகின்றானா பின்தொடர்ந்து கண்காணித்திருக்கின்றார்.  ஜாதி பிரக்ஞை மிக்கவர், துணி ,  மளிகை வாங்கும்போது நாடார் கடைக்குதான் முதலுரிமை கொடுப்பார். ஆனால் நாயக்கர், கள்ளர், பிள்ளை நண்பர்கள் பல உண்டு. ‘உங்க தேவம்மார்லே  ஒருத்தர்   நம்ம ஏரியால்லே அச்சாபீஸ் வச்சிருக்கார்’ .  ‘இப்போல்லாம் அய்யர்ல்லாம்  ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்து வீடு கட்டி விக்கிரதுலே இரங்கிட்டீங்க!’   என சகஜமாக நெருங்கி உரையாடி  பார்த்திருக்கிறேன்.


பண்டிகை நாளில் கூட நன்றாக வெளுத்த துணி  அணிந்தவரில்லை. பின்னாளில் ஒருமுறை பேரன்கள் அழுக்காக இருக்கீங்க தாத்தா என்றவுடன்,  மூன்று முறை குளித்து விட்ட பின் கூட அதே உடையைத்தான்  அணிவார். அவர் செயல்களில் இடது கைதான் ஆதிக்கம் செலுத்தும்.  அதனால் தராசினை வலது கையில் பிடித்து , முள் பார்ப்பார். பணம் வாங்குவது கொடுப்பது மட்டும் வலுக்கட்டாயமாக வலது கையில்.  கொய்யா,  பலாபழம், மாதுளை, மாம்பழம் என பழங்களாக  வாங்கி வருவார். பழங்கள் வாங்கும்போது, நல்ல பழங்களாக பார்த்து பொறுக்கும் பொறுமையும், திறனுமில்லை. அவர் வாங்கும் பழங்கள் பாதி குப்பைக்கே போகும். மகன்கள்,  பேரன்கள்,  வளர்ந்து வேலை பார்க்கும்போது,  அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்க  தயங்கியதில்லை. ஆனால் மருமகள்கள், பேத்திகள் வேலை பார்த்து ஊதியம் பெறுபவர்களாக இருந்தால் கூட தவறுதலாக கூட அவர்களிடம் பணம் கேட்டதில்லை.


தன் உடல்நலத்திற்கு எது தேவையோ, அதை தானே பார்த்துக்கொள்வதில் கவனமிக்கவர். இரவுணவு நாள்தவறாமல் வொர்க்‌ஷாப் ரொடு அல்லது தமிழ்சங்கம் அருகே உள்ள ஏதாவது ரோட்டு கடையில், இரண்டு புரோட்டா (அ) தோசையுடன் , ஆம்லெட் கண்டிப்பாக.  80 வயது வரை அவரின் மைத்துனிகள், அக்கா மகள் உறவுகளிடம் ‘எப்ப பொண்ணு பெத்து தர போறே’ என குசும்புடன் பேசுவதை விடவில்லை. ஆனால் அந்த கிண்டல் பேச்சு   மகன்கள், பேரன்கள் இல்லாத போதுதான் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறார்.  சிவகாசி தேரடி கருப்பசாமி, சீலைக்காரியம்மாள்  குலதெய்வ வழிபாடு தவிர ஆன்மீக நாட்டம் கொண்டவரில்லை. அங்கும் கூட சாமியை விட  ஊர்பங்காளிகளை ஊர்காரர்களை சந்தித்து அளவளாவுதல்தான் முதன்மையான நோக்கம். எங்கு சென்றாலும் முடிந்த அளவு சற்றே வளைந்த கவட்டை நடையுடன் அழுத்தமாக   நடந்தே செல்வார். மூன்று மாதம் முன்பு கூட, (2017 ஜனவரி), ஒருநாள் வீட்டின் வெளி கம்பி கதவு பூட்டப்பட்டதால், மொட்டை மாடி சென்று, தடுப்பு சுவவேறி பக்கத்து வீட்டு மாடியில் குதித்து, அவர்கள் கேட் வழியே வெளியே வந்திருக்கிறார். மகன்களின் தோலைபேசி எண், முகவரியை மழைகாகிதத்திற்குள் மறைக்கப்பட்ட குறிப்பேட்டில் வைத்துக் கொண்டு, எவர் தயவும் எதிர்பார்க்காமால் தேனி, பவானி, விருதுநகர்,  என பயணம் செய்திருக்கிறார். 85 வயது வரை, வழி மாறி போனதே கிடையாது.


அவரின் மூத்த பேரனான என்னை, என் தங்கையை, என் தம்பியை அவர் தொட்டு எடுத்து கொஞ்சியதாகவோ, விளையாட்டு பொருட்களை வாங்கியதாகவோ என் நினைவினில் இல்லை. அதற்கு காரணம் மூத்த மருமகளான, என் அம்மா மணிமொழி மீதான அவர் என்றுமே வார்த்தையில் வெளிக் காட்டாத சினம்தான். வாயாடி பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுகிறான் என்று என் அப்பாவின் மீது குற்றசாட்டு. திருமணமாகி 6 மாதமாகியும், கருவுறாததால், மாரியம்மாள் கிழவி கொடுத்த வாழைபழத்தில் ஏதோ வைத்தியர் வைத்த மருந்தை விழுங்க நேர்ந்த, என் அம்மாவிற்கு அவர்கள் மீது வன்மம் வேறு. குச்சி கை கால்களுடன், பலவீனனாக பிறந்து , வருடம் முழுவதும் ஓன்று மாறி ஒன்று நோய் வந்து முடங்கியிருந்த நோஞ்சானான நான், என் 3 வது வயதில், வயிற்றுபோக்கினால் கவலைக்கிடமானேன். அப்போது மதுரை மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் பணம் செலவாகும், அரசு மருத்தவமனையிலேயே சேர்த்தால் சரியாகிவிடுவான் என மாரியாம்மாள் பாட்டியும், கருப்பையாவும் கூறியதை கேட்டு சீறி சண்டையிட்டாள் என் அம்மா. அதுவே கூட்டு குடும்பத்திலிருந்து விலகி , மதுரை சிந்தாமணி அருகே தற்காலிகமாக, பின் பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகரில் நிரந்தரமாக வசிக்க காரணமாகியது. முற்றிலும் உறவிலிருந்து விலகவில்லை, தீபாவளி , பண்டிகை, வார இறுதி விடுமுறை நாட்களில் அய்யம்மா வீட்டில் கழிந்தது. இருப்பினும் கூட்டு குடும்பத்திலிந்து விலகியதால், அய்யப்பா கருப்பையா, என் அம்மாவுடன் சேர்த்து பேரன்கள், பேத்தியையும் மன்னிக்கவில்லை. இறுதி காலத்தில், முதல்மாடியில் அவருக்கென ஒதுக்கபட்ட 5 * 8 அடி, வெப்பம் கொட்டும் அறையில் தனியாக வாழ்ந்து வந்தார். கடைசியாக, என் மகன் ரிஷிவர்தன் 6 மாத குழந்தையாக இருந்த போது,, அவரிடம் சென்று ஆசி வாங்கினேன். ‘யாருன்னு தெரியுதா தாத்தா?’ என்ற கேள்விக்கு ‘ செவகுமாருதானே! ‘ என்றார், கலர் வாங்கித்தர சொல்லி குடித்தார். பளுப்பு கறை சட்டை இல்லை, முதுகில் கோர்க்கப்பட்ட கைகள் நடுவில் தொங்கும் துண்டு இல்லை, சிறிது வளைந்த ஆனால் அழுத்தமான கவட்டை நடை இல்லை, வட்ட முகம் இல்லை, விரிந்த கை கால்கள் உடல் இல்லை. மன்னிக்காத கோபம் கூட இருந்திருக்காது. பசியாக மட்டுமே இருந்தார்.

<முற்றும்>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்