சாளரக் கண்கள்


                                     


அந்த பெரிய சாளரத்தின் முன்,  தன்னிலை மறந்து, தான் காணும் காட்சிகளில் லயித்து,  நேரம் போதாமல், நின்றிருப்பது, அவன் வழக்கம். குறு மென்பொருள் அலுவலகங்கள், இளநீர் அடுக்கு போல அடுத்தடுத்து நிரம்பியிருக்கும் கண்ணாடி மாளிகையின், ஒன்பதாவது மாடியின், கடைசி தளத்தில் உள்ளது அவன் பணி புரியும் இடம்.  அந்த அலுவலக உணவக அறையின் ஒரு பக்க சுவருக்கு பதிலீடாக, பத்தடி உயரத்திற்கு, அறுபதடி அகலத்தில், அவன் தன் வாழ்நாளில் கண்டதிலேயே மிகப்பெரிய அந்த கண்ணாடி சாளரம் அமைந்திருக்கிறது. வலது மோதிர விரலினை கோப்பையின் கைப்பிடியில் விட்டு,   ஆட்காடி விரல், கட்டை விரல்களால், அணைத்தபடி , மிதமான சூட்டில் பருகப்படும் காபிக்கு, காண்பவைகளை, நுண்படுத்தி காட்டும் திறன் இருக்கிறது என அவன் கண்டுகொண்டது அதன் முன்தான். புத்தக வரிசையிலிருக்கும், ஒவ்வொரு புத்தகமாக எடுத்து, அதன் விளிம்பினை மார்பில் ஏந்தி, உள்ளங்கைகளில் வைத்து,  ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து எடுத்து, பொறுமையாக வாசிக்கும் வாசகன் போல அவன் அந்த சாளர காட்சிகளை, நாள் தவறாது, தொடர்ந்து கண்டு வருகிறான்.

ஒரு சிறிய வீதி, பெரிய முதன்மை வீதியில் சந்திக்கும் முச்சந்தி மாடி மீது,  அவன் ஆதி நினைவு தெரிந்த முதல் வட்ட வடிவ சாளரம் அமைந்திருந்தது. அவனது குழந்தை நாட்களின், ஒரு பொன்மை காலையில், கால்களால்  எம்பி, அந்த சாளர கம்பிகளை பிடித்து, நெற்றியையும் கன்னங்களையும் குளிர்க்க பதித்து, கண்களை நுழைத்தபோது, தன் கையிலிருந்த யானை பொம்மை பெரியதாகி அதில் உயிருடன் நடந்து வந்ததை வியந்து கண்டான். மேல்த்திரை விலகி ஆழ்மன அகலொளியை தரிசித்த,  அந்த தருணத்தில்தான் சாளரத்தின் மீதான என்றும் குன்றாத அவனது காதல் துவங்கியது. அதன்பின் அவன் கடந்த ஒவ்வொரு சாளரமும், தட்டு முழுவதும் படைக்கப்பட்டிருக்கும் காப்பரிசியை, கண்டு குதூகலித்து, விரைந்து தவழ்ந்து வந்து, கண் அகல விரித்து, சிந்தியபடி உண்ணும் பசித்த குழந்தை போல அவனை உணர செய்யும்.

Man-Looking-Out-Window_860x440.jpg

முதல் பார்வைக்கு ஓரிடம் விடாமல் ஒளியூட்டப்பட்டு என்றும் நிலைத்திருப்பவைகள் போல தோன்றும் அந்த பெரிய சாளரத்தின் காட்சிகள்.  அவன் காணும் ஒட்டுமொத்தம் ஓவியம் என்றால், அந்த ஓவியத்தின் முதன்மை வண்ணம் புற்பச்சை. அடர்த்தியான கருவேல மரங்களாலான அந்த புற்பச்சை குறுங்கானகம் நகரின் மையமாக உள்ள இடத்தின் பெரும்பகுதியில் வியாபித்திருக்கிறது. முதலில் அசைவின்றியிருப்பது போல தோன்றும் அந்த கானகத்தின் மரங்கள்,  நுணுக்கமாக பார்த்தால், காற்றில் ஓயாமல் அலை அலையாக நெளிந்து, குறுகி, சாய்ந்து ஆடியபடி இருக்கும். அதன் இடையிடையே பழுப்பு சாம்பல் நிற தீற்றல்கள். ஒரு தனி வெள்ளைப் புள் தன் இறகு செல்லும் போக்கில், கானகத்தின் குறுக்காக, பறந்து செல்லும். அதுவரை அந்த பறவை சென்ற பாதைப் புள்ளிகளை நினைவு படுத்தி, கற்பனை நூலால் கோடிட்டு இணைத்து,  அதன் நெருக்கமான வடிவம் என்னவாக இருக்கும் என அவன் சிந்தித்திருக்கும் கண நேரத்தில், புற்பச்சைக்கு நடுவில் சென்று, தடத்தை விட்டு செல்லாமல் மறையும். கானகத்தில் கண்டவைகளில், கைப்பானவைகள் என எதுவுமில்லை.

அந்த குறுங்கானகத்தில், ஒரு நாள், குழைத்த செந்தூர  நிறத்தில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை கவனித்தான். பசுக்கள் போல பெரிய உருவமும், நீண்ட வாலும் அவைகளுக்கு இல்லை. நாய்கள் போல விரைந்து இயங்குவது போலவும் தெரியவில்லை.  இவற்றின் குருளைகளும் போலவும் தோன்றவில்லை. பிறகு அவைகள் என்னவாக இருக்கும், என சேமித்த நினைவுகளில் துழாவியபடி சிந்தித்த போது, ஒரு நானோ நொடியில், மூளை அது மான் என்றது. கவனத்தை குவித்து, பார்வையை கூர்மையாக்கி மீண்டும் பார்த்தான், ஆம் அவை மான்கள்தான், உறுதியாக.  மூன்று மான்கள். மாநகரின் நடுவே குறுங்கானகம் இருக்கிறது என்பதும், அதில் மான்கள் உலவுகின்றன என்பதும், அவனால் நம்ப முடியாத கனவுலத்தில் இருப்பது போல தோன்றியது.


அந்த முழு கானகத்தையும் கண்களால் அளந்து புற்பச்சையை விலக்கிய பின்தான்,  சீரற்று வெட்டப்பட்டு சிதறிய திரைப்படச் சுருள்கள் போல சுருண்டு, பரவியிருக்கும் குளங்கள் பார்வைக்கு தெரியும்.   கீழ் எல்லையாக ஒரு ஒழுங்கற்ற நீள்வட்ட வடிவ பெரிய முதன்மை குளம். அதன் தொடர்ச்சியாக, காட்டில் குறுக்காக வளைந்து மறித்தபடி, வெட்டுப்பட்ட  சில துணை குளங்கள். நீர் நிலைகளுக்கான வண்ணம் நீலம் என்று யார் வகுத்தது? வேனில் வாட்டும் போது, பூஞ்சல் வண்ணத்தில், மாரி காலத்தில் முத்துசாம்பல் வண்ணத்தில், வசந்தத்தில்  மங்கல்பச்சை வண்ணத்தினாலான நீரினால் அந்த குளம் நிரம்பியிருக்கும். கோடை நெருங்க நெருங்க, அந்த முதன்மை குளத்தில் ஒரு பச்சைப் புள்ளி போல தோன்றும் மேடு, நாளாக நாளாக பச்சை பாம்பின் உருண்ட தலை போல உருமாற துவங்கும்.  அதன் முழுவடிவத்தில் வளைந்து நீண்டு, பச்சைப் பாலம் போல அந்த நீர்நிலையை இரண்டாக வெட்டி விடும். அதன் வலது புற குளம் நடுவே புல்லால் மூடப்பட்ட இன்னொரு கூம்பு மேடு அதன் எச்சம் போல உருவாகும். அந்த குளத்தில் குவியும் பறவைகள்  பச்சை பாலத்திற்கும் , சிறிய கூம்பு புல்மேட்டிற்கும் பறந்து, நின்று பின் பறந்து நின்று, நாள் முழுவதும் விளையாடும். அவையிடும் நீர் கோடுகள் சில நொடிகள் நிலைத்து, பின் மறையும்.


இடது புற ஓர எல்லையாக, பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டது போல தோற்றமளிக்கும்,  ஒரு பதினோரு மாடி கண்ணாடி கட்டிடம் , அதன் பின்பகுதியை முழுக்க காட்டியபடி நின்றிருந்தது.  வெளிர்சிவப்பு சிற சுவர் மற்றும் ஆழ்சிவப்பு நிற கண்ணாடி என, இருவண்ணங்கள் செங்குத்து வாக்கில் அடுத்தடுத்து பொருத்தப்பட்ட, உரு பெருகிய, ரூபிக் கன சதுரம் போல இருக்கும் அந்த கட்டிடம். அதனுடன் சேர்த்து ஒட்டியது போல,  முன்பு உலோக நிறத்தில் இருந்திருக்கலாம் என தோன்றும், புகையை என்றுமே விடாத, ஒரு எண்ணெய் கருமை புகைபோக்கி செயலின்றி நின்றிருந்தது. பூநாரை பறவை ஒன்று, தன் மகரம், கருமை கலந்த சிறகினை அசைத்தபடி, நாடார் கடையில் காகித பொட்டலத்தை மடிக்கும் நூலினைப் போல, கட்டிடத்தை ஒட்டி தாழ்ந்து அலாவியபடி,  அதன் இரு வேறுபட்ட வண்ணங்கள் வழியாக, பறந்து மறைந்து பின் பறந்து மறையும். அந்த கட்டிடத்தின் கீழ் பாதியையும், அந்த மகர நிற பறவையையும் முன்னுள்ள குளம் ஒரு சேர அலை அலையாக பிம்பப்படுத்தும்.


அண்மையில் அங்கு கடந்த புயலினால்,,  அந்த கட்டிடத்தின், வலதுபுற சரி நடு முனையில், கண்ணாடிகள் சீரற்று உடைந்து, ஒரு  விரிசல் உண்டாகியது. நாளாக நாளாக அந்த வடிவமற்ற தோற்றம் இருள் குகையின் வாய் போல  உருமாறியது. பழிபோடும் பட்டிமன்ற இணை மேடையினை நினைவூட்டும், பாலத்தின் மீதமைந்த இரு மின்சார இரயில் நிலையங்களை இணைக்கும், மென்சாம்பல் வர்ணம் பூசப்பட்டு உதிர்ந்து போல தோன்றும் பாலம்,  மிகச்சரியாக அந்த குகை வாயில் ஆரம்பித்தது. கவிழ்ந்த ‘ப’ வடிவ தூண்களால் சீரான இடைவெளியில் தாங்கப்பட்டு, கண் எட்டும் வலதுபற இறுதி வரை நீண்டு சென்று மறைந்தது. ஒவ்வொரு தூண் இரட்டைக்கும் சொந்தமாக மூன்றடுக்கு இரும்பு கம்பிகளாலான ஒரு உப்பரிகை.  அந்தக் கண்ணாடி கட்டிடம், சாய்வாக சாத்தப்படிருக்கும் குன்றளவு சுத்தியலின், கனமிக்க அலங்கரிக்கப்பட்ட இருவண்ண தலை, என்றும், அதன் மெல்லிய கைபிடி, அந்த நீண்ட மென்சாம்பல் இரயில் பாலம் எனவும் அவன் கற்பனையில் தோன்றும். புரட்சி வரும் வரை அந்த மாபெரும்  சுத்தியல் அவ்வாறு சாய்ந்தே இருக்கட்டும் என நினைத்துக் கொண்டான்.


இருவண்ண கட்டிட காட்சியில் அவன் மூழ்கியிருக்கும் நேரம், ஒரு சட்டென்ற மணித்துளியில், அந்த திமிரச் சுரங்க வாயிலிருந்து,  ரப்பர் எழுத்து பதிப்பான் போன்ற இரண்டு இணை இடி தடுப்பான்களின் பொட்டு போன்ற வடிவம் முதலில் தெரிய வரும். அதை தொடர்ந்த ரயில் முதல்வரான,  ஓட்டுரின் எந்திரப் பெட்டி முழுமையடையும். பின் மின்சார ஓட்டுப்பெட்டியின் பொத்தான்கள் போன்ற அடுத்தடுத்த சாளரங்கள் கொண்ட மின்சார இரயிலின் பெட்டிகள் ஒவ்வொன்றாக தோன்றி,  இடதிலிருந்து சீரான வேகத்தில் நகர்ந்து வலது புறம் நோக்கிய சற்றே கீழ் கோணத்தில் செல்லும். அந்த முழு இரயிலும் முழுமையாக தோன்றி , கடந்து சென்று, வலது எல்லையில் மறையும். வேறு நேரத்தில், அதற்கு நேர் எதிர் திசையான வலது மூலையில் தோன்றும் நகல் இரயில், அதே வேகத்தில் இடது புறம் நோக்கி சென்று சுரங்க வாயிலினுள் சென்று மறையும்.  அரிதான நேரத்தில் அந்த பாலத்தில் ஓரே சமயத்தில் இரண்டு இரயில்கள் எதிரெதிர் திசையில் மூர்க்கமாக மோதி விடுவது போல வரும். ஆனால் இணை பாதையில் ஓன்றையொன்று விலக்கி எந்த உராய்வும் இல்லாமல் பயணிக்கும்.

தன் பெருங்குழுவிலிருந்து பிரிந்த பறவைக் குறுங்குழு ஒன்று, அந்த மின்சார இரயிலுடன் பந்தயத்தில் பறப்பது போல உடன் பறக்கும். அவைகளின் பாதை சீரற்று இருந்தாலும், இரயிலுடனான போட்டியில் அந்த குறுங்குழுவின் பறவைகள் முதலில் சென்று இலக்கை அடைந்து என்றும் வெல்லும்.  அந்த இரயில்களின் ஓட்டமும், பறவைக் குழுவின் பந்தயமும், ஒவ்வொரு முறையும் கவனத்தை வேறெங்கும் விலக்க விடாமல் முழுக்க கோரும். அந்த பாலத்தில் செல்லும் மின்சார இரயிலுக்கு மேல் ஒரு முறை, மின் கசிந்து தங்க மின்னல் தோன்றியது. அவை பொன்னிறத் துகள்களாக ஒளிர்ந்து கொட்டி மறைந்ததை,  இமையொட்டாமல் கண்ட பின்புதான், மறைந்திருந்த மின்சார கம்பிகள், அவன் பார்வைக்கு தெரிய வந்தது. நெருங்கி மனதால் தொட்டு தொட்டு பார்க்க பார்க்க, அந்த சாளர காட்சிகள் முடிவில்லாதவைகளால் நிரம்பி விரிந்து கொண்டும், கணந்தோறும் மாறிக் கொண்டும் இருக்கும் விந்தையை வியந்து ரசித்தான்.


அந்த முழுக் காட்சிகளை உயிருள்ள உடலின் இயக்கம் என்றால், அதன் குருதியோட்டம், அவனின் ஆரம்ப கால பார்வைக்கு எளிதில் புலப்படாமல், ஆனால்  அங்கு முழுதாக நிறைந்தபடி ஓயாமல் இயங்கியபடி இருக்கும் பறவைகளின் ஓட்டம்தான். முதல் வெட்டு காயம் பட்ட போதுதான், தன்னுள் மறைந்து ஓடிக்கொண்டிருக்கும்  குருதியை, சிவப்பு முத்துத் துளிகளாக மனிதன் முதன் முதலாக அறிவான். துயரத்தால் மனம் வெட்டுண்ட ஒரு நாளில் தான், அவன் அந்த சாளரம் வழியாக பறவைகளின் இயக்கத்தினை கவனிக்க துவங்கினான். சுடரிட்டு எரிந்து, வெந்து அமிழ்ந்து சிதைந்து போன வாழ்வின் உச்சநுனிக் கண நினைவுகளை,  கனவுகளாக்கி முடிவில்லாமல் மீட்டெடுக்கும், குருதியின் வீச்சம், ஒரு முறை ரசித்தபின், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவது போல, அன்றுமுதல் அவனை என்றும் மாறாமல் கிளர்ந்தெழச் செய்யும், பறவைகளின் இயக்கத்தினை மட்டும் தனித்து வேறுபடுத்தி உன்னிப்பாக அவதானிக்கத் துவங்கினான். கண்ணாடி சாளரத்தின் மேல், கீழ், வலது, இடது என எந்த நான்கு விளிம்புகளிலிருந்தும்,  பறவைகள் தோன்றி, கணக்கில்லா கோணங்களில், மிதந்து மறையும். கவனத்தை ஈர்த்த கொம்புள்ள பறவைகளைத் தான் முதன்முதலாக் பார்த்தான். தேவ பறவை என்று நினைத்தீர்களா? இல்லை. தான் வசிக்கும் கூட்டின் வசதியைக் கூட்ட, வளைந்த மரக் குச்சியை வாயில் கவ்விப் பறக்கும் கேளிக்கை காகங்கள்தான் அவைகள்.



அவ்வப்போது வெப்ப மிகுதியால் திரையிட்டு மூடப்படும் அந்த சாளரம்.  எந்த திரையென்றாலும், அது இரும்பினால் ஆனதென்றாலும் கூட, அதை ஊடுருவிப் பார்க்க,  ஒரு துளை அல்லது திறப்பு கண்டிப்பாக இருக்கும். அதன் அருகில் சென்று, அவ்வாறே, அதிலிருந்த  திறப்பு வழியே பார்த்தான். அப்போது அவன் பார்வை மேலும் குவிந்து கூர்மையாகியது. குளக்கரையின் சதுப்பில்,   தீட்டி வைத்த பென்சிலின் முனை போன்ற அலகு கொண்ட, உறைபால் வண்ண கருமூக்கு கொக்கு, ஈர்க்குச்சி நெடுங்கால்களால் தூழாவி தூழாவி எதையோ தேடிக்கொண்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி, சருகிலை நிற  நொள்ளை மடயான் கூட்டம், பிட்டம் மேலாக தண்ணீரில் கவிழ்ந்து, பின் சுழன்றபடி களிப்புடன் விளையாடிக்கொண்டிருந்தது. வெண்மையான உடலும், புள்ளி வைத்த பழுப்பு சிறகும் கொண்ட விராலடிப்பான் பறவை, ஒரு மீனை உயிருடன் கொத்தி பிடித்து சென்ற காட்சியை கண்டு நீண்ட நேரம் விழி அகலாமல் பார்த்திருந்தான்.  வலசையில் வந்த கதிர்குருவி ஒன்று தன் உள்ளத்தின் உள்ளிருந்து கூவிய காட்சியை கண்டான். அந்த ஒலி கேட்கவில்லை எனினும் அதன் திண்மை உணர முடிந்தது.

Tawny eagle.jpg

சாதாரண நாளில்தான், நினைக்காத தருணத்தில்தான் வாழ்வின் போக்கினை பேரலையின் ஆற்றல் கொண்டு, முட்டி மோதி, திசை மாற்றும், மனம் பிறழ்ந்தால் கூட மறக்க முடியாத தரிசனங்கள் நிகழும். ஓரு நாள்  மூடப்பட்ட, அந்த திரையின் மறுபக்க வெம்மையை தாங்கி, திரையை விலக்கிய போது, வழக்கமாக புறாக்கள் குறுமிக்கொண்டு எச்சமிட்டு விளையாடும் இடத்தில், அவன் பாதத்தின், அருகில், இரண்டு அடி எடுத்து வைத்தால் தொட்டு விடும் தூரத்தில், கண்ணாடிக்கு அங்கு, ஒரு  பறவை நின்று கொண்டிருந்ததை கண்டான். அதன் நிறம் என்ன? அது என்ன வகைப் பறவை என அறிந்து கொள்ளும் ஆவலில் நெருங்கியபோது, அந்தப் பறவை விளையாடும் குழந்தையின் துள்ளலுடன் அவன் முன், எழுந்து பறந்து வட்டமிட்டது. அப்போதுதான் பின்புலத்தைக் கவனித்தான். புற்பச்சை கானகம் இல்லை,  திரைச்சுருள் குளங்களின் ஓரத்தில் தேங்கிய மங்கிய பச்சைப் பாசி நீரைத் தவிர மற்ற நீர்கள் வற்றியது, மான்கள் இல்லை, செவ்வண்ணக் கட்டிடத்தில் பொலிவில்லை, மின்சார ரயிலும், பாலமும் கண்ணுக் கெட்டா தொலைவிற்கு இடம் மாறியது. அந்த நிலம் முழுவதும் தாகமிகு வெடித்த நாக்கினைப்போல,  விளைவதற்கு தயாரான உழவுநிலம் போல, பல நாள் பிரிவிற்குப் பின் உடல் உறவிற்கு தயாரான ஆடையவிழந்த இருவரின் மனம்போல அனைத்தையும் களைந்து வெறும் வெறுமையானது. பறவையின் மறைவிலிருந்து வெளிப்பட்ட, ஒரு மஞ்சள் நிற சமன்படுத்தும் கனரக வாகனம், தன் மண்தோண்டி துதிக்கையை இரக்கமின்றி இயக்கி, அங்கு முன்பிருந்தவற்றை எந்த வரையறையுமின்றி அழித்துக் குவித்து கொண்டு முன்நகர்ந்து சென்றது . சில நொடிக்கு முன் சிதைத்த நிலத்தின், சதுப்பின்  புழுக்களுக்காக வெண் நிறப் பறவைகள் சில, வேடனைத் தொடரும் வேட்டை நாய்கள் போல பின்தொடர்ந்தன.


மீண்டும் அருகே அமர்ந்த பறவையை , அடுத்த கரணத்தில் இறப்பு என்றறிந்தவன் காணும் காட்சி போல மனதைக் குவித்துக்  கண்டான். அது ஆளிப்பருந்து. வெற்றிக்கு பரிசாக வழங்கப்படும், கோப்பையை நினைவுபடுத்தும் வடிவம் கொண்டிருந்தது. மண்டியிட்டு அதன் கண்களை நேராக பார்த்தான். அளந்த தொலைவின் வீச்சு தெரிந்தது.  அந்த அழுத்தம் தாளமுடியவில்லை. கண்களை தவிர்த்தான். நீரூற்றி கழுவிய நிலக்கடலை ஓட்டின் நிறத்தில், தன் கால்களே பீடமாக நின்றிருந்தது. ஓட்டை திறந்து எடுத்த, இளம் பருப்பின் மெல்லிய தோலின் நிறத்தில் இறகுகள்.  அவை போர்வை போன்று போர்த்தியபடி, காற்றில் இறகின் பிசிறுகள், தானியங்கும் விசை இசை பலகையின் பொத்தான்கள் போல இறகிறகாக ஆடியபடி இருந்தது. தோலினை உரித்த பின்னான பருப்பின் நிறத்தில் வளைந்த அலகினை கொண்டிருந்தது.  முகத்தை ஒட்டிய ஓளிர்மஞ்சள் அலகு , மேல் துளையும், அதன் நுனி, பென்சில் கிராபைட் வளவளப்பில் வளைந்து கூரியதாகவும் இருந்தது. அலைபேசி கோபுர வரிசையின் நடுவில்  அந்தக் கணம் வரை வாமனனாக இருளில் ஒளிந்திருந்த கோயிலின் இரட்டை கோபுரத்தில் பின்னது  ஆளிப்பருந்தின் தலையின் மீது வெள்ளொளி மகுடம் போல உயர்ந்தெழுந்ததை முதன் முதலாக அவன் கண்டான்.


ஊரெங்கும் அலைந்து,  தேடிக் காண்பவைகளை உள்வாங்கி ஆழத்தில் சேமித்து,  இல்லம் திரும்பி, அவனுக்கான இருக்கையில் அமர்ந்து எழுதும், விண்ணளவு ஆற்றல் கொண்ட, எழுத்தாளனின்    தீர்க்கம் கொண்டிருந்தது. அரையடி எடுத்து நெருங்கினான். ஜீவனைத் திரட்டி, யுகங்களை நகர்த்தியது போல இருந்தது.  அந்தப் பறவையும் ஒரடி எடுத்து நெருங்கியது. இழையளவு இடைவெளிதான். அதன் , கால்களின் ரேகையின் அடர்த்தியும், இதயத்து ஓசையும்,  மனதின் திணைமையும் உணர்ந்தான். காலமில்லாமல் அங்கு நின்றிருப்பது போல அவனுக்குத் தோன்றியது. அந்த உறைந்த கணத்தை உடைப்பது போல,  உடலை உலுக்கி, சாளரக் கதவுகளை திறப்பது போல சிறகுகளை விரித்து ஆன்மாவிருந்து கூவியது ஆளிப்பருந்து. அந்த ஒலி கண்ணாடியை உடைத்து, அவன் காதுகளை கிழித்தது.  அவன் இதுவரை உணர்ந்து அறியாத மென்நரம்புகளை உராய்ந்து கீறியது. ஆழத்தின் இருப்புகளை இடம் மாற்றியது. இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கேட்டான். ஆளிப்பருந்து அவனை நோக்கி, கண்களால் புன்னகித்தது.  அடுத்த வினாடி, முகத்தை திருப்பி, வளைந்து, எம்பித் தாவிப், பறந்தத. எப்போது எவ்வாறு உணரும்முன், கண்கள் எட்டிப் பிடிக்காத, தொலைவில், பறந்து சென்று மறைந்தது. ஆளிப்பருந்து அருளிய ஆறாத காயத்தை, மனதால் தொட்டு பார்த்தபடி, அதன் ஆளுமை அவனுள் விட்டுச் சென்ற தடயத்தை எண்ணியபடி நாளை மறுபடியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் அவன் விடைபெற்று திரும்பினான்.







<<நிறைவு>>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்