நெல்சன் மண்டேலாவும் ஏழு சட்டைகளும்


அரசியல் தலைவர்கள், பெருந்திரளான மக்களை கிளர்ச்சியடையச் செய்து கவர்ந்திழுப்பதில் தேர்ந்த பேரழகிகள் (mass seductress)  என்கிறார்,   ஜான்   கார்லின் (Invictus - John Corlin).  இந்த வரி,  மறைந்த என் தாய்வழி  ஆச்சி குருவத்தாய், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில், கூட்டத்தில் ஒருத்தியாக நின்று,  அவரின் வயதுடைய, எம்.ஜி.ராமசந்திரனின் கடிகாரம் அணிந்த  கைகளை மட்டும் நேரில் பார்த்ததை பிரமிப்புடன் விவரித்த  ஒவ்வொரு சொற்களையும் மீண்டும்  நினைவூட்டியது.  அணியும் உடை வழியாக மக்கள் கூட்டத்திற்கு அழுத்தமான பாதிப்பை செலுத்தாத  அரசியல் தலைவர்கள் மிகக் குறைவு.  வரலாற்றின் பக்கங்களில் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கும்,   இந்த அதிமானுடர்களை முதன் முதலில் கண்டதை விவரிக்கும் நினைவுக் குறிப்புகளில், அவர்களை வியப்பில் ஆழ்த்திய உடை விவரிப்பு  கண்டிப்பாக இருக்கும்.  சார்லி சாப்லின், காந்தியை முதன் முதலில் சந்திக்கும்போது,  கொடும் குளிர் நாட்டின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத, இந்திய பாரம்பரிய கதர் துணியை  ஒழுங்கற்று  சுற்றி அணிந்து, பிரிட்டன் பத்திரிக்கைகளின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் என்கிறார்.

நெல்சன் மண்டேலாவை முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சியை விவரிக்கும், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தோழர்கள்,  அரசியல் எதிர் கருத்தினை உடையவர்கள், பத்திரிக்கையாளர்கள், சாமனியர்கள் என அனைவரும் தவறாமல் அவரின் பிறிதொன்றில்லாத உடைத் தேர்வினைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பள்ளி மாணவனாக, சுரங்க தொழிலாளியாக,  இளம்  வழக்கறிஞராக, பகுதி நேர  குத்து சண்டை வீரராக,  ஆப்பிரிக்க தேசியவாதியாக, ஒரு அரசியல் கட்சியின் தொண்டனாக, பின்னர்  அதே கட்சியின் தலைவனாக,, “தேசத்தின் ஈட்டி’  (Umkonta we Sizwe) என்கிற ஆயுத இயக்கத்தின் தலைவனாக,  சிறைக் கைதியாக, ஒரு குடிமகன் ஒரு ஓட்டு என்று அனைத்து இன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, நெல்சன் மண்டேலா அணிந்த உடைகள் அழுத்தமானவைகள். அவற்றில் முதன்மையானவைகள் எனக் நான்  கருதும் உடைகளையும் அவற்றை அவர் அணிந்த சூழலையும் பற்றி காண்போம்.

மெதடிச  பள்ளியில் மாணவனான மண்டேலா படித்த பள்ளி விழாவிற்கு ஆப்பிரிக்கர்களின் வரலாற்றை பாடலாக பாடும் பாணரும்,  பௌராணிகரும், புலவருமான க்ருனோ மிக்யாயி (Krune Mqhayi ), வருகை தருகிறார்.  சிறுத்தை தோலினாலான ஆடையும்,  அஸ்ஸகை (Assagai)  ஈட்டியை இரு கைகளிலும் ஏந்தியபடி,  வரலாற்று பாடல் பாடி,  சன்னதம் கொண்டு ஆடும் காட்சி,  அதுவரை அவரின் அய்யாவழி மரபான  டோசா  (Xhosa) இனத்தின் ஒற்றைப்படையான வரலாற்றை மட்டும் அறிந்துவைத்திருந்த மண்டேலாவிற்கு, டோசா இனத்துடனான,  மற்ற ஆதிகுடிகளின் தொடர்பையும் , ஆங்கிலேயர்கள், டச்சு வெள்ளையர்களின் வருகையினால்  ஆப்பிரிக்க மண்ணில் பண்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றியுமான அடிப்படை புரிதலை தருகிறது. அந்த நிகழ்வு,  மேற்கிலிருந்து வந்த மின்சாரம், ஆப்பிரிக்க மண்ணின்  அஸ்ஸகை (Assagai) ஆயுதத்தில் தொட்ட கணத்தில் ஒளிர்ந்த மின்னல் தோன்றிய காட்சி போல அவருக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.  பின்னர் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்து ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டபட்டு,  மரண தண்டனை விதிக்கப்படலாம் என்கிற நிலையில் Rivonia Trail வழக்கில் அவர் எதிர்வாதம் செய்யும் போது,  அதே  பாரம்பரிய உடையை தானும் அணிந்திருந்தார்.  தன்னை ஆப்ரிக்க  ஆதிகுடிகளின் பிரதிநிதியாக முன்னிருத்தி  ‘நான் இறப்பதற்கு   தயாராக இருக்கிறேன்’ என்று உணர்வுடன் உரையாற்றினார்.  


தென் ஆப்ரிக்க  டச்சு  வெள்ளை ஆப்ரிக்கேர் (Afrikaner) சிறுபான்மை அரசில்,  ஒரு ஆப்பிரிக்கர் (African),   உள்நாட்டில் பயணம் செய்ய,  அவர் ஆதிகுடி கடவு சீட்டினை(Native Passes)  வைத்திருக்க வேண்டும். காவலாளி கோரினால்,  காட்ட வேண்டும். இல்லையென்றார்,  உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த சூழலில் மண்டேலாவிற்கு, திருமண ஏற்பாடு நடக்கிறது,  உடன்பாடில்லை, பேசி நிறுத்தப் பார்க்கிறார்,  பலனில்லை என்பதால்,  கடவுச் சீட்டு இல்லாமல் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்ற ஆபத்துடன் பயணம் செய்து, ஜோகான்ஸ்பெர்க் வருகிறார்.  தூரத்து உறவான அலுவலரிடம் மன்றாடி போலி சீட்டு பெறுகிறார்.  ‘ஆப்ரிக்கர்கள் அதிகம் உள்ள பகுதி, கவனமாக செல்லவும்’ போன்ற அறிவிப்பு பலகைகள் கண்டு வருத்தமடைகிறார்.  போரிட்டு ஓய்த இடத்தை நினைவுபடுத்தும் வறண்ட சுரங்கத்தில் வேலை தேடுகிறார். நாட்டுபுறத்தான்கள்தான்  கேள்வி கேட்காமல் வேலை செய்வார்கள் என்பதால், விசாரணை அதிகம் இன்றி, இரவுநேர கண்காணிப்பாளராக வேலைக்கு சேர்கிறார். ஆப்ரிக்க  வேலையாட்களிடம் அதீத வறுமையும், கீழான வாழ்நிலையும், ஆப்ரிக்க அலுவலர்களிடம் எந்த குற்ற உணர்வு இல்லாமல் நிரம்பி வழியும் ஊழலையும்  கசப்புடன் காண்கிறார்.ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகளின் வறிய உடையை தானும் அணிந்திருந்த இந்நாட்களில்தான் தன் வாழ்நாளை ஆப்ரிக்க தேசிய விடுதலைப்  போராட்டத்திற்கு அர்பணிக்க முடிவு செய்கிறார்.  பின்னர் விடுதலைப் போராட்டத்தின்போது,அடிமைப்படுத்துதலின் அடையாளமான இந்த ஆதிகுடி கடவுச் சீட்டினை, இணை ஊடகங்களை திரட்டி முதல் ஆப்பிரிக்கராக தானே எரிக்கிறார்.


பயிலும்  இளநிலை வழக்கறிஞராக, ஜோகன்ஸ்பெர்கில், வசதிபடைத்த ஆப்ரிக்கர்களின் சொத்து தொடர்பான சட்ட சிக்கல்களை மேலாண்மை செய்யும் அறிவுத்திறன்மிக்க, நடைமுறை ஞானமுள்ள,  வால்டர் சிசிலு (Walter Sisulu) அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். பின்னாட்களில் மண்டேலாவின் அரசியல் போராட்டத்தில் உற்ற தோழரானவர்  வால்டர் சிசிலு.   நிறப்பாகுபாடு துளியளவும் காட்டாமல், அவருடன் இயல்பாக பழகும் ஆப்ரிக்கேர் நாட் பிரெக்மேன் (Nat Bregmen) மூலம்  தென்னாப்ரிக்கா பொதுவுடமை கட்சியின் SACP ( South African Communist Party) தொடர்பு ஏற்படுகிறது. தொடர்ந்து ஆப்ரிக்கர் தேசியவாதம்(African Nationalism), பொதுவுடமை பற்றி அறிந்து கொள்ள நூல்களை கற்கிறார்,  வர்க்க வேறுபாடு களைதல்தான், பொதுவுடமையின் நோக்கம், அது தொழிற்புரட்சியில் முன்னேறிய ஐரோப்பாவிற்கு பொருத்தமாக இருக்கலாம், ஆனால் நிற ஏற்றதாழ்வே தென்னாப்ரிக்காவில் முதலில் ஒழிக்க வேண்டிய நோய்  என்ற உறுதியான எண்ணம் அவருக்கு வருகிறது. எதிர் கருத்துடைய டச்சு வெள்ளை ஆப்ரிக்கேர்களுடன் தன் கருத்துக்களோடு  உரையாடி, சக தோழனாக, ஒத்த கருத்துடையவர்களாக்க முயல்கிறார்.  அதற்கு, ஆப்ரிக்கேர்களின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆழமான புரிதல் தனக்கு வேண்டும் என்கிற எண்ணத்துடன் டச்சு ஆப்பிரிக்கேர் மொழியிலும் பண்பாட்டிலும், உடைகளிலும் ஆர்வம் எழுகிறது. தன் வாழ்நாளில் பெரும்பகுதி போராட்டம், சிறைவாசம், விடுவிப்பு, என்று சென்றாலும், ஆப்பிரிக்கேர்  மொழியை  விடாமல் தொடர்ந்து கற்கிறார். சந்திக்க நேரும்,  சிறைப் பாதுகாவலர், மனித உரிமை தன்னார்வ குழுவினர், அரசியல் எதிர் கருத்துடைய ஆப்ரிக்கேர்களிடம்,  நாசூக்கான ஆப்ரிக்கேர் மொழியில் உரையாடி  கவரும் வாய்ப்பினை எந்த நிலையிலும் தவிர்க்கவேயில்லை அவர்.  போயர் போர்களில், வெள்ளையர்களுக்கு எதிராக,  சிறப்பாக பங்களித்த டச்சு ஆப்பிர்க்கேர் தளபதிகளின் பெயர்களை ஒருவர் விடமால் கூறி வியக்க வைத்திருக்கிறார்.   இந்நாட்களில் வைர வணிக  ஆப்பிரிக்கேர்களுக்காக ஆடை வடிவமைக்கும் சிறந்த தையல்காரர்களிடம், தனக்கென வடிவமைக்கப்பட்ட,  கனவான் உடைகளை தானும் அணிந்து கொள்கிறார். தென்ஆப்ரிக்க மக்கள் அதிபரான பிறகு, சுற்று பயணங்களிலும் , பிறிதொன்றில்லாமல் வடிவமைக்கப்பட்ட,  பட்டு ‘மடிபா சட்டை’ களை அணிகிறார்.


1940களில்  உலகெங்கும்  தேசியம்(Nationalism)  என்கிற கருத்து கற்ற இளைஞர்களிடம் பரவலாக அறிமுகமாகி பாதிப்பை செலுத்திய சூழலில் ஆப்ரிக்க தேசியத்தை  உணர்வுடன் ஏற்றுகொண்ட இளைஞர்களின் புகலிடமாக இருந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில்(ANC - African National Congress)  மண்டேலா,  வால்டர் சிசிலுவுடன் தன்னை இணைத்து கொள்கிறார். உணர்வூட்டும் பேச்சாளரும், தேனீ போல செயல்படும், ஆண்டன் லாம்பேடே (Anton Lambede) வின் ஆளுமையினால் ஈர்க்கப்படுகிறார்.  ஆங்கிலேயர் ஆட்சியை தொடர்ந்த ஆப்ரிக்கேர் ஆட்சியில் போடப்பட்ட ஆப்ரிக்கர் விரோத சட்டங்கள்,  நுண் வேலைகளிலிருந்தும் (Skilled Labour), வணிகத்திலிருந்தும் ஆப்ரிக்கர்களை விலக்கியது. இதன் விளைவாக  நகர ஆப்ரிக்கர்கள் வாழ்வு சேரிகளுக்குள் முடங்கி ,  சேரிகள் சுரங்கங்களுக்கு  மலிவான கூலி உழைப்பாளிகளைத்  தரும் இடமாக மாற்றியது. இதை எதிர்த்த   தீவிரமான ஆப்ரிக்க இளைஞர்கள்  தீவிர தேசிய கருத்து உடைய பான் ஆப்ரிக்கன் தேசிய கட்சியில் (PAN) இணைந்தார்கள்.  இந்தியர்கள், இடதுசாரிகள், கலவை இனத்தவரிடம் இணக்க போக்கு கொண்ட,, நிறவெறி சட்டங்களை வன்முறையற்ற முறையில் எதிர்க்கும் ஒத்துழையாமை போராட்டத்தில் நம்பிக்கையுடைய ANC ,  விடுதலை உணர்வுடன் தாராள(Liberal) சிந்தனை கொண்ட ஆப்ரிக்கர்களை ,ஒருங்கிணைப்பதில், ஒரே முகமாக  இருந்திருக்கிறது.  1946ல் நடந்த ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள் வேலை நிறுத்த  உள்ளிருப்பு போராட்டம், தென் ஆப்ரிக்காவின் ஏற்றுமதி வணிகத்தையே நிலைகுலைத்தது.  இதனால் ஆத்திமடைந்த  அரசியந்திரம்  ஆப்ரிக்க அரசியல் கட்சிகள் அனைத்தையும் தடை செய்து, அதன்  தலைவர்களை கருணையின்றி   வேட்டையாடியது. வழக்கு, சிறையடைப்பு, பின்தொடர்தல், துப்பாக்கி சூடு என அடக்கி ஒழிக்க துவங்கியது.

இந்த சூழலில், மறைவாக நடந்த ANC கூட்டத்தில், ‘காட்டு மிருகங்கள் தாக்க வரும்போது வெறும் கைகள் கொண்டு தற்காக்க முடியாது’ என்கிற ஆப்பிரிக்க பழமொழியை சுருக்கமாக மொழிந்து, ‘தேசத்தின் ஈட்டி’  (Umkonta we Sizwe) ஆயுத இயக்கத்தினை ANCயின் துணை இயக்கமாக ஆரம்பிக்கிறார்.   ஒளிப்போர் (guerrilla warfare) நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட  இந்த ஆயுத இயக்கத்தின் தலைமறைவுத் தலைவராக காட்டு செடியின் பச்சை நிறத்தில் போராளி உடை அணிந்திருக்கிறார். 1990களில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, பெரும்பான்மை ஆப்பிரிக்கர்களிடம்  ஆட்சி அதிகாரம் வருகிறது.  முந்தைய ஆறாக் காயங்களுக்கு பதிலாக பழிவாங்கல் நிகழலாம் என சிறுபான்மை ஆப்ரிக்கேர் எண்ணிய குழப்பமான சூழலில்,  மேலும் அழுத்தமான பச்சை நிற உடையை  அணிந்தார். 1995 ரக்பி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் Springboks தென்னாப்ரிக்க டச்சு  வெள்ளையின அணிக்கு ஆதவராக, அந்த அணியின் புகழ்மிக்க விளையாட்டு ஆடையை தானும் அணிந்து கொண்டு போட்டியை கண்டார். வரலாற்றுப் பகையால் டச்சு ஆப்ரிக்க அணியின் மீது வெறுப்புகொண்டு, அந்த நாள் வரை வெளிநாட்டு எதிர் அணியினருக்கு ஆதரவை அளித்த  கருப்பு ஆப்ரிக்கர் மக்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக springboks அணிக்கு திருப்பி, டச்சு ஆப்ரிக்கேர்களின் மனதினை  வெல்கிறார்.  வெற்றிக் கோப்பையை அணித்தலைவர் François Pienaar,  க்கு அளிக்கும் போது,  இனி வரும்காலங்களில் நமது பயணம் நல்லிணக்கத்துடன் இணைந்தே  தொடரும் என பச்சை ஆடைக் குறியீடு மூலம் அழுத்தமாக உணர்த்துகிறார்.




தென்னாப்ரிக்க அரசியல் கைதிகளுக்கு  சிறையில்  கூட நிறவெறியிலிருந்து விலக்கில்லை.  ஆப்ரிக்க கைதிகளுக்கு அரைக்கால் சட்டை. ஆப்ரிக்கேர், இந்தியர், கலவை இன மக்களுக்கு முழுகால் சட்டை.  உணவிலும் பாகுபாடு.   ஆப்ரிக்கர்களுக்கு  ஊட்டமில்லா உணவினை வழங்கிவிட்டு,  உடலில்  எஞ்சியிருக்கும் கடைசித் துளி வியர்வையையும் உறிஞ்சி எடுக்கும்,  சுண்ணாம்புக் கல் உடைத்தல், ஜப்பானுக்கு உரமாக  ஏற்றுமதி  செய்யப்படும் கடலில் ஒதுங்கும் களைகளை சேகரிக்கும் வேலை என கடுமையாக வதைக்கப்பட்டார்.   எதிர்த்து போராடும் போது ,பரிவுணர்ச்சி எள்ளளவும் இல்லாத சிறைக் காவலர்களால், தனிமை சிறையிலடைக்கப்படுகிறார். பத்தாண்டுகளுக்கு  மேலாக தொடர்ந்து போராடி,  உலக  மனித உரிமை அமைப்புகள்,செஞ்சிலுவை சங்கங்களுடனான தொடர்பு மற்றும் நீடித்த உரையாடலினால்,  நிலை முன்னேறியது. செய்தித்தாள்கள் புத்தகங்கள் வழங்கப்பட்டன, ஆப்ரிக்கேர் மொழி கற்க  அனுமதி பெற்றார். தோட்டங்கள் பராமரிப்பது, பகுதி நேரத்தில் டென்னிஸ் ஆடுவது, கூட்டு உரையாடல் நிகழ்த்துவது என அடுத்தடுத்து சலுகைகள் பெற்றார். அரசினால்  நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்ட,  ANC தோழர்களின், கவன ஈர்ப்பு தொடர் போராட்டத்தினால், மண்டேலா தரம் உயர்ந்த சிறைகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக  மாற்றப்படுகிறார்.   

1980களில் உலக  நாடுகளின் பொருளாதார தடை,  விளையாட்டுப்  போட்டிகளில் பங்குபெறத் தடை என அடுத்தடுத்து அழுத்தங்கள் ஒருபுறம். கருப்பு ஆப்ரிக்க மக்கள் கிளர்ச்சியால், உள்நாட்டு போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்  என்கிற சூழலில். அடக்குமுறையின் தோல்வியினை உணர்ந்த,   தேசிய கட்சியின்(National  Party) பிரதமரான  முதலை போத்தா (B W  Botha ), நீதித்துறை , சிறைத்துறையின் தலைமை அமைச்சரான  கோபி கோட்சீவை (kobie coetsee) நெல்சன் மண்டேலாவுடனான முதல் கட்ட பேச்சு வார்த்தைக்காக அனுப்புகிறார்.  ஆப்ரிக்கர்ளுடனான அதிகார பகிர்விற்கு அரசியல் சீர்திருத்தத்திற்கு,   ANCயின்  பிரதிநிதியான நெல்சன் மண்டேலாவை நோக்கிய,    முதல் ஆக்கபூர்வமான செய்கை.  அன்று புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்து,  மருத்துவமனையில் வெள்ளை அங்கியில் இருந்தார் நெல்சன் மண்டேலா. Nelson என்கிற ஆங்கில சொல்லிற்கு, மல்யுத்தத்தில், தன் இரு கைகளைக் கொண்டு,  எதிராளியின் பின்னங்கழுத்தினை, கக்கங்கள் வழியாக ,  நகரவிடாமல் பிடிப்பது என்று பொருள். உடல் சோர்ந்த  நிலையில் இருந்த, நெல்சன் மண்டேலா தான் இதுநாள் வரை  போராடி  கற்ற சமரசத்திறன்,  ஆப்பிர்கேர் மொழித்திறன், சமத்கார அணுகுமுறையினை மொத்தமாக வெளிப்படுத்தி, அந்தப் புள்ளியிலிருந்து, எதிர் கருத்துடைய  டச்சு ஆப்ரிக்கேர்  அரசினை அழுத்தமாக வழுவாமல் பற்றி,  அரசியல் சாசன மாற்றத்திற்கு படிப்படியாக பணிய வைக்கிறார். ஆம். இரத்தம்தோய்ந்த கைகளுடன் தன்னை நோக்கி வந்த முதல் சமாதான சமிக்ஞைக்கு, கருப்பு தேவனாக உங்கள் தவறுகளை நான் மன்னிக்கிறேன், இனி, நாம் நண்பர்கள் என அவர் கைகுலுக்கியபோது, அணைத்தபோது, அவர் அணிந்திருந்த அந்த வெள்ளை அங்கிதான் , அவர் தன் வாழ்நாளில் அணிந்த மாமேன்மையான உடை.


<முற்றும்>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்