விஷால் ராஜா - சிறுகதை தொகுப்பு - எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்


ஒரு இளம் எழுத்தாளனின் முதல் சிறுகதை தொகுதியினை அது இட்டு சென்ற வரிசையிலேயே வாசித்ததும், வாசிப்பனுவத்தை உடனடியாக எழுத தோன்றி எழுதியதும் இதுதான் முதல் முறை.

என் வாசிப்பில், விஷால் ராஜாவின் இந்த தொகுப்பின் சிறந்த கதை ‘குளிர்’. கதைக்களமாக ஒரு ஒரு ரயில் நிலையம். அங்கு காத்திருக்கும் கதைசொல்லிக்கு காலை சூழலின் குளிர்மை உடலையும் மனதையும் ஊடுருவி உறுத்துகிறது. பெண்கள் இருவர், அங்கு வந்தமர்ந்து,   ஒருவருடன் ஒருவர்  நட்புடன்  பேசிக் கொண்டு  சாமந்தி பூக்களை கோர்க்கின்றனர். அதன் பின் ஒரு காவலாளி வந்து  சிமிட்டி இருக்கையில் மிடுக்குடன் அமர்கிறார்.  கவனிப்பினை கோரும் , நடையுடன்,   வலது முன்கை கோணலாக தொடுத்திக் கொண்டு ரப்பர் போன்று ஆடிக்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி ஒருவர் காவலாளிக்கு நாடகத் தன்மையுடன் வணக்கமிட்டு , அவரிடம் பணம் பெற்று எதிர் டீக்கடைக்கு சென்று டீ குடிக்கிறார். கதைசொல்லியிடம் பேச்சு கொடுக்கும் காவலாளி, அவன் முன்னாள் சைக்கிள் திருடன் எனவும், அவன் கைகளை உடைத்து ஊனமாக்கியது தான்தான் எனவும்  சொல்ல கேட்டு மனம் குத்தியது போல உணர்கிறான் கதைசொல்லி.  அந்த முன்னாள் சைக்கிள் திருடன், பெண்களிடம் பாலியல் சைகை  காட்டி சீண்டி சினமேற்றி பின் மறைகிறான். அதை கடிந்து கொள்ளும் பெண்கள், பின் வழக்கமான உரையாடலை தொடர்கின்றனர்.

இந்த கதையின் களத்தை ,  ஒரு  மென்பொருள் அலுவலகத்தின் குளிரூட்டப்பட் வளாகம் என எடுத்துக் கொண்டால், கதை அடுத்த தளத்திற்கு விரிகிறது. காவலாளி- மேலாளராகவும், பூ கோர்க்கும் பெண்கள், மனிதவள துறை  அல்லது சக பணியாள பெண்கள் என  கொள்ளலாம்.  அந்த  சூழலில், பொருளியல் தேவைக்காக மட்டும் பற்றின்றி பணியாற்றும் ஒரு ஆரம்பகால மென்பொருள் பொறியாளராக கதைசொல்லி  என்றால்  அனைத்து பாத்திரங்களும் புதிய சூழலுக்கும் பொருத்தமாக பறந்து அமர்கிறார்கள்.  முன்னாள் சைக்கிள் திருடன்,  சமூக வலைதள  மிமீஸ்களில் சொம்பு தூக்கி என  பெயரிடப்பட்டு அழைக்கப்படும் சக பணியாளராக இருக்கலாம். மேலாளரிடம் பணிந்து , வார்த்தைகளால் குளிரூட்டி, தரையில் தவழ்ந்து,   அந்த சூழலில்  தங்களை இருப்பை தக்க வைத்துக் கொள்கின்றனர். இவர்களின் முதுகெலும்பை உடைத்து ரப்பர் போல மாற்றி தொங்கவிட்டு,  சலாம் போட வைத்ததே இந்த மேலாளர்தான் என அறிய நேரும் தருணம் ,இந்த  கதையின் உச்சம்.  இந்த  சிறுகதை தொகுப்பில் நான்  மீண்டும் மீண்டும் வாசித்த பகுதி இதுவாகத்தான் இருக்கும். தன் சூழலிருந்து விலகி நின்று , புலம்பல், ஓற்றை கோணப் பார்வை, குற்றசாட்டு இல்லாமல் ஆர்வமூட்டும் பாத்திரங்களுடன், சரளமான  நடையில், பதிவு செய்யும் திறன் விஷால் ராஜாவின் எழுத்திற்கு இருக்கிறது என்பதற்கு இந்த கதை சான்று.

விலகிச் செல்லும் தூரம்,  ஒரு மலர்மாலையின் வடிவமைதி கொண்டு  நல்ல வாசிப்பனுபத்தை தந்த கதை.  முக்கியமாக அதன் முடிவில்,  ஒரு தொடர்புறுத்தலுக்கு இட்டு செல்கிறது.  தோட்டத்தின் மரக்கிளையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஜேக்கப்பினை ஒரு அமானுட குரல் அழைக்கிறது.  அந்த குரல் வந்த இடத்தில்  கிடக்கும் மரப்பேனா,   தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் இறுதி நினைவுகள், எழுதாத சொற்களாக  நிரம்பிய மாயப்பேனா.   ‘நெருப்பு பற்றிய வெடித் திரி’ போல’  அவனை ஈர்த்து, கையில் எடுக்க வைத்து,   வெள்ளைத் தாளில் எழுத வைக்கிறது.  அந்த கடிதத்தை,300 கிமீ தொலைவிலுள்ள ஊரில், இளமை தீர்ந்து  இருள் படிந்த முகத்துடனிருந்த பெண்  இல்லத்திற்கு அனிச்சையாக அவனை இட்டுச் செல்கிறது. கடிதத்தை வாசித்தபின்,  துயரம் அகன்று முழுமை கூடிய அந்தப் பெண், அவனை முத்தமிட்டு  கண்ணீருடன் விடைகொடுக்கிறாள். அங்கு  தோன்றும்  ஒரு  மாய சிறுமி  அவனுக்கு நீண்ட  காம்பில் பூத்த ரோஜாவை பரிசளித்து புறாவாக மாறி பறந்து செல்கிறாள். அந்த தருணத்திலிருந்து உயிரற்ற  பொருட்களின் கூக்குரல் அவனுக்கு சாபம் போல தொடர்ந்து கேட்கிறது.

வாழ்வின் மீது பற்றின்மையும், பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளும் கொண்டு, சாகச  தருணங்களுக்காக ஏங்கும் ஹர்ஷத்தை அழைத்து ஆட்டோவில் ஏற்றி செல்கிறார், இன்று இளைஞனாக இருக்கும் ஜேக்கப்.   பின்  இருவரும் சேர்ந்து  தற்கொலை செய்து இறக்க முயலும் செல்வத்தினை  தடுத்து மீட்கின்றனர். செல்வத்தினை அவனுக்காகவே அவனால் பிறந்த புதிய உயிரிடம் சேர்ப்பித்து விலகுகிறார்கள். ஹர்ஷதினுள்  உளுத்து  உலுக்கிக் கொண்டிருக்கும் நினைவான, முன்னாள்  காதலியின் தற்போதைய நிலை என்ன என்ற  கேள்விக்கு ஒரு தீர்வினை தருகிறார்.

பேனா, காகிதம், காதலுடன்  வாங்கி ஆனால் என்றுமே கொடுக்கப்படாத   பரிசுகள் போன்ற  உயிரற்ற  பொருட்களுக்குள்  நினைவுகள்   மட்டுமே நிரம்பி  இருக்கும், எதிர்காலமோ,  கடந்த  காலமோ தெரியாது.  உயிருள்ள ரோஜா மலரோ கடந்த காலத்தை செரித்தபடி  வருங்காலத்திற்காக தங்களை  தயார் செய்து கொள்கின்றன. உயிர்களை அறிவதே காலத்தை  அறிவது’ என எழுத்தாளனின் குரல் ஜேக்கப் வழியாக தீர்க்கமாக ஒலிக்கிறது. எழுதாத பேனா போல, கனம் கொண்ட காதல் நினைவுகளை அதுநாள் வரை  சுமந்து கொண்டு  அலைந்த புறவடிவமான ஜானாகும் ஹர்ஷத், உயிரற்ற பொருள்  எனவும், அவனை மீட்டு உயிருள்ள ரோஜா மலராக ஜேக்கப் மாற்ற எத்தனிக்கிறார் எனவும் அறிய நேரும் போது,  வண்ணமற்ற, மணமற்ற, கனமற்ற, உயிரற்ற , ஒளிபுகா பிளாஸ்டிக் பைதானே அதில்  என்ன இருக்க போகிறது என எண்ணி,  அதிலிருந்து வெளியே எடுத்தபின்,  நூலிழைகளில் கவனமாக கோர்த்த மலர்மாலை என உணரும் தருணம் போல இருந்தது.  மீள வாசிப்பு செய்கையில், அதன் உயிர்துடிப்பை, கனத்தை, நிறத்தை,  நறுமணத்தை நாசியை நிறைக்க நுகர்ந்த அனுபவத்தையும் தந்தது.

கதாபாத்திரங்களின பிரதேசம், குருதாஸ் என்னும் பாத்திரம்,  கதைசொல்லியை கதாபாத்திரங்களின் பிரதேசம் என்னும் மாய உலகின் வழியாக பிரிந்து செல்லும் வற்றாத ஆற்றிலிருந்து, மீட்டு  காயங்களுக்கு மூலிகை மருந்தளித்து,  ஆற்றுப்படுத்தி கதை முழுக்க வழிகாட்டுகிறார்.  இருவரும் கதாபாத்திரங்களும் மரணமும் நுழைய முடியாத இடை நிலமான யட்சன் மண்டபத்தில் தங்குகிறார்கள். கதைக்குள் ,  யட்சனுக்கும் செல்லம்மாளுக்கும் இடையேயான குருதி தெளித்த உறவு, மரணத்தின் துறத்தல் என நிகழ்கிறது. புனைகதை வெளியில் நுழைந்த வாசகனுக்குள் நிகழும் சிந்தனைகளும், குழப்பங்களும், தொடர் வாசிப்பினால் நிகழும் நினைவுகள், பீடங்கள் அழிதலையும் துணுக்குறல்களையும் இந்த கதை வழியாக பதிவு செய்ததாக தோன்றுகிறது.  ஆனால் முதன் முதலாக மரணம் கொன்று செல்வது ஒரு சிறுவன் என அறிந்த கணத்தில், ஒரு வாசகனாக வருத்தமுற்றேன். புனைவுலக வாசிப்பு என்பது  ஒரு கோணத்தில் வாசகனுக்குள் மறைந்திருக்கும் குழந்தைமையை உறங்காமல் விழிக்க வைக்கும் என்பது என் எண்ணம்.


மகிழ்ச்சிக்கான இரத்த புரட்சி, இந்த கதை கட்டற்ற நுகர்வு, உடமைப்பெருகத்திற்கு எதிரான   வன்முறை நிரம்பிய வதை எழுத்து அல்லது பிறழ்வு எழுத்து (Transgressive writing) வகையை சேர்ந்தது எனலாம்.  வதை எழுத்துகளை வாசிப்பது என்பது பட்டறையில் கிடக்கும் இரும்பு பொருக்கினை எடுத்து இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து அழுத்தி தன்னை தானே வதைப்பது போல தோன்றும். இந்த வகை வதை எழுத்தான chuck palahniuk  சக் பலாஹ்னிக்  பைட் கிளப் (Fight club) நாவல் வாசிக்கையில், அந்த கதையின் இரண்டு சித்திரங்கள் என் நினைவிலிருந்து வழுவ மறுத்து, காலமில்லாமல்பதிந்தது போல இருந்தது. கதை சொல்லியும்,  அவனின் பிறழ்வு ஆளுமையான Tyle durdenம், மருத்துவமனை கழிவிலிருழ்ந்து   உடல் பருமனானவர்களின், எடை குறைப்பு  சிகிச்சையின் போது உறிஞ்சப்பட்ட சங்கரா மீனின் தோலின் நிறத்தை ஒத்த  திரவ கொழுப்பினை திருடுகிறார்கள்.  அதிலிருந்து செய்யப்படும் சோப்பினை வேதிப்போருட்கள் சேர்த்து அவன் கண்டடைந்த வெடிகுண்டை வைத்தே அவன் பணிபுரியும் கார்ப்பரேட் அடுக்குமாடி கண்ணாடி கட்டிடத்தை கதை முடிவில் தகர்க்கிறான். மற்றொரு அத்தியாயத்தில்,  இருவரும்  நட்சத்திர ஆடம்பர விடுதியில், சர்வர் வேலை பார்க்கும் போது, அவன் சென்ற கண்ணாடி மின்தூக்கி , இரண்டு மாடிகளுக்கு நடுவே, பார்வை கோணம், சரியாக தரைதளத்தில்  இருக்கும் நிலையில் பழுதாகி நிற்கிறது. அப்போது அவன் பார்க்கும் கோணத்தில் பலவித  குறுங் கார்கள் தெரிகின்றன. வெள்ளை, நீல நிறம், பள பளக்கும் கருப்பு,  பின் டயர்கள் உயர்ந்து இருக்கும் குருதி சிவப்பு கார்கள்.  என்னை உள்ளிழுத்து, என் பார்வையை விரிக்கும், புதிய கோணங்களைத் தரும் உணர்வை ‘மகிழ்ச்சிக்கான இரத்த புரட்சி’ கதை தரவில்லை.   தமிழ் திரைப்படங்களில், பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து, அதில் பாத்திரங்களை உலவ விட்டு , பாடல் காட்சிகளமைத்து,  இறுதி சண்டைக்காட்சிகளில், அந்த அரங்கம் ஒவ்வொரு அலகாக  வெடி வைத்து தகர்க்கப்படுவதை காட்சியாக கண்டது போன்ற அனுபவத்தை மட்டுமே தந்தது.


பொருந்தா பாலியல் உறவுகளின் பின்புலம் கொண்ட கசப்பேறிய கோப்பைகள் மற்றும் நீர்கோடுகள் கதைகள் று வாசிப்பினை கோரும் அளவிற்கு வலுவாக இல்லை. நான்கு வருடம் கல்லூரி விடுதியிலும், ஏழு வருடங்கள் வேலைபார்க்கும் இளைஞர்களுடன் திருமணமுன் வாழ்க்கையும் வாழ்ந்த எனக்கு, இந்த பொருந்தாத உறவு பாத்திரங்கள் எந்தவித துணுக்குறலையும் ஏற்படுத்தவில்லை. பல நல்ல வாசகர்களும் இந்த வகை கதைகளை தவிர்த்து, புதிய கோணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இட்டு செல்லும் கதைகளை வாசிக்கவே விழைவார்கள்.

படைப்புலகிற்குள் நுழைந்து பல்வேறு கதைகளங்ளில் கதை கூற முயன்று கணிசமாக வெற்றியும் பெற்றிருக்கும் புதிய படைப்பாளிக்கு, அவரின் வருங்கால படைப்புகளை வாசிக்க எதிர்நோக்கியிருக்கும் ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள். 

Image result for எனும்போது உனக்கு நன்றி

<நிறைவு>


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்