நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்

சுரேஷ் பிரதீப்பின் ‘நாயகிகள்  நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்,  பெரும்பாலான கதைகள்  சிறுவர்களின் கோணங்களில் இயல்பாக அமைந்திருக்கும் தன்மை.   பெரியம்மா வீடுகளிலும், குற்றுளத்திலும்,  பார்கவி சரவணன் உறவின் நடுவிலும்,  பெண்களிடம் தோற்கவே பிறந்த இந்த ஆண்மகன்கள்,   கூடத்தின் நடுவில் வைத்த பிரதிபலிக்கும் ஆடி  போல,  தங்களை விட பெரியதாக நிகழும்  நிகழ்வுகள் முன்னின்று அவதானித்து, அவற்றை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.  முடிவில் அதன் விளைவுகளோ,   முதலெழுத்து கூட எழுதப்படாத சிலேட்டில், முட்கள் கொண்டு கீறி எழுதிய கோரமான வடிவங்கள் போல அழியாமல் அவர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து விடுகின்றன.

இந்த தொகுப்பில்,  நான் மீண்டும்  மீண்டும் வாசித்த சிறந்த  கதை, ,  குறியீடுகளால் நிரம்பி பொருத்தமாக அமைந்திருந்த ‘சில்ற’ . கல்லூரி நண்பன் ரஞ்சித்தால்,  விடுதியில் வ‍ழங்கப்பட்ட்  ஸ்கிப்பிங்  கயிறு, மீது  மோகம் கொண்டு  அதன் மீது விருப்ப விலக்க உறவு  வைத்திருக்கும் கதைசொல்லி,  அதன் பின் காலி டப்பாவில்,  சில்றயையும் , சதுரங்க கட்டத்தின் காய்களை, கரும்பச்சை நிற  டப்பாவிலும் சேர்க்கிறான்.  சில்ற என்பதை காம நினைவுகள் அல்லது சில்லறைத்தனமான நினைவுகள் என எடுத்துக்கொள்ளலாம். சதுரங்க கட்டங்களை, கதைசொல்லியின்  வாழ்வின்  கட்டங்களாகவும், அங்கு வந்து அமர்ந்து, விளையாடி,  பாதியில் தோற்ற, கடைசி வரை வீழாத காய்களாக கதையின் மற்ற பாத்திரங்களாக அடையாளமிடலாம்.   இளவரசர்களாகவும், ராஜாக்களாகவும் வரும் அணணன்,  ரஞ்சித், சந்தன், அச்சுவும்  ,  வலிமை கொண்ட ராணிகளான சிவரஞ்சனி, அம்பிகா போன்ற பெண்களும், அவரவர்கள்  ஆளுமையை செலுத்தி, கதைசொல்லியின்  வாழ்வின்  போக்கை தீர்மானிக்கிறார்கள். 

கைக்குட்டையைக் கொண்டு உமிழாமல் நேரடியாக முகத்தில் உமிழும் சிறுவன் ‘அச்சு’வை கண்டுணர்ந்த பின்,  கதைசொல்லிக்கு ஒரு எண்ணமெழுச்சி நிகழ்ந்து,  சில்ற டப்பாவை தரையில் கொட்டி காலி செய்கிறான். அப்போது அவனுள் நிகழ்வது வெற்றிடம் உணர்தல், நினைவுகள் களைதல்  எனலாம்.  செல்லும் இடங்களை எல்லாம் அழகு படுத்திக் கொண்டே செல்லும் இந்த அச்சு என்னும் பாத்திரம், ஒரு வாசிப்பிற்காக எழுத்தாளர் அசோகமித்ரன்  என எண்ணினால் பொருத்தமாக தோன்றுகிறது.  கதையின் முடிவில், , காலி டப்பாவை கதைசொல்லி சில்றயால் மீண்டும்  நிரப்பும் போது,  தேடல் கொண்ட படைப்பு மனம்,  போலிகளால் ஊதி பெருக்கப்பட்ட இந்த நுகர்வு  சமூக சூழலால்  சுரண்டப்பட்டு பலியிடப்படும் சித்திரத்தை கண்டு வருத்தமுற்றேன். 

குற்றுளம்  ‘ஏன் இவ்வளவு வன்மம்’ என  எனக்குள் கேள்வி எழுப்பியபடி,  நான் வாசிக்காமல் விலகி நிற்க  எத்தனித்தாலும்,  எழுத்து திறனால், கதைக்குள்  உள்ளிழுத்தது. தீய நாக்கே  உடலான,  மீன் விற்கும்   அன்னைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுதான் கதையின் மையம்.  அந்த உறவில் சொல்லப்படாமல் விட்ட தருணங்களை  மனைவி  அகல்யாவிடம் பகிரும் போது , அகல்யா உணரும் இடைவெளி, முடிவாக அன்னை இறந்த  பிறகே  மறைகிறது.  இந்த கதையில் எங்கு  தேடியும் துளி ஒளி தென்படவில்லை.  கவனிக்க வைத்த மற்றொரு கதை ஆலரசு குளம்  இரண்டு தலைமுறையின் வரலாற்றை குளத்தின்  பிண்ணணியில் சுருக்கமாக பேசுகிறது.  காலத்தோடு ஒட்டி ஓடாமல்,  தன் வழக்கத்தை மாற்றாமல் விடாப்பிடியாக   பேண  நினைக்கும் அன்னையை பற்றியது. மூன்று தலைமுறை பெண்கள்   முதன்மை பாத்திரங்களாக கொண்டு,  பக்கெட் குளியல், ஷவர் குளியல்களை குறியீட்டு ரீதியாக கதை ‘சொட்டு’கதையில் கூற  முயன்றிருக்கிறார். 




நாயகிகள்  நாயகர்கள்’ ஒரு துடுக்கான கதை.  நான் இலக்கியன் என்பதால்  தக்களூரின் மணியனுக்கும்  ஏதோ ஒரு வடக்கத்தி பெண்ணுக்கும் பிறந்த  கட்டையம்மாள் என கருதியபின், அவள் எவரென அறிய நேரும் தருணத்தை புன்னகையுடன் நின்று ரசித்து கடந்தேன்.  தலைமுறை  வரலாற்றை  ஒரு வரைபடம்  போல காட்டும் இந்த கதை, ஒவ்வொரு  தலைமுறையிலும், பிந்தைய தலைமுறையிருந்து பெற்றுக் கொள்வதற்கும்,   உதிர்ப்பதற்கும் ஏதோ ஒன்று உள்ளது என காட்டுகிறது. மறு வாசிப்பில் மகேஸ்வரி குடும்பத்திற்கும்,  கட்டையம்மாளின் குடும்பத்திற்குமான இயல்புகளின் இடைவெளி மயங்குவது போல எனக்கு தோன்றியது. பார்கவி  கதை, மற்றுமொரு பொருந்தாத காதல் கதையா என அயர்ச்சியுடன் வாசிக்க துவங்கினேன்.  ஆனால், உறவுகளின்  மோதலும், ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வுகள்  அவிழ்வதும் செறிவான மொழியில் எழுதப்பட்ட  கதை. முடிவில் பார்கவி தேவியுடன் , அத்தனை நிகழ்வுகளுக்கும் சாட்சியாக நின்ற,  விஜய தேவர்  தொன்மமாவது  கவனிக்க வைக்கிறது.

அயர்ச்சியை தந்த மற்றொரு  கதை, கண்ணாடி சில்லுகளும்,  கருங்குழல் நோட்டுகளும்.  எல்லையில்லால் கொட்டி கிடக்கும் எத்தனையோ கருக்கள்(Themes) இருக்கையில்,  விடலைப் பருவ  ஆண் பெண் உறவினை மையமாக வைத்து இப்படி சுற்றி சுற்றி கதை கூற வேண்டுமா என தோன்றியது. கதை சொல்லலில்  பிரகாஷ்  என்கிற முதன்மை பாத்திரத்தின் தீய எதிர் பாத்திரம் கதைக்குள்ளேயே வந்து, மாயத்தன்மையுடன் முடியும் விதம் ஆர்வமூட்டியது.  கீர்த்தி  என்கிற பாத்திரத்திற்கும், பிரகாஷ் பாத்திரத்திற்குமான அணுக்கமான உரையாடல்கள் ரசிக்க வைத்தது. 

சுரேஷ் பிரதீப்பின் பெரும்பாலான சிறுகதைகள் என் தோல்பரப்பை முட்களால் குத்தி நாளங்களை தொடுகின்றன. மிகச் சில கதைகள் கண்ணாடிக் கூர்மையுடன் உள்ளுறுப்புகளுக்குள் சென்று கீறி , குருதியிழக்க செய்கின்றன. ஆனால் ஒரு நல்ல சிறுகதை என்பது, முதல் வாசிப்பில், குறிவைத்து தாக்கிய துப்பாக்கி குண்டு போல,  என்னை துளைத்து என்னுள் ஊடுறுவி ஒரு உறுப்பிழப்பு, பாகமிழப்பை ஏற்படுத்த வேண்டும். மீள்வாசிப்பில், நான் அடைந்த வெற்றிடத்தை  அந்த கணம் வரை அறிந்திடாத அற உணர்வுகள்,  புதிய சிந்தனைக் கோணம்,  எண்ணமெழுச்சிகளை அதே கதை,  இட்டு நிரப்ப வெண்டும். அத்தகைய கதைகள் எழுதும்  வல்லமை சுரேஷ் பிரதீப்பின் எழுத்துக்கு இருக்கிறது என  நம்புகிறேன். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிக்கு  என் வாழ்த்துக்கள். 


<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்