வெய்யிலின் ஒரு கவிதை

ஒரு பூ பூத்துச்சாம்

அப்ப பாலுறிஞ்ச ஏலாத

சீக்காலிப் பிள்ளையா இருந்தேனாம்

அம்ம சொல்லும்.

கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான்

மார்ப்பால பீச்சி விடுமாம்

முகத்துல தெறிச்சி

கையெல்லாம் வழிஞ்சி

தொழுவத்து சாண வாடைய மீறி பால் மணக்குமாம்

வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம்

எதுக்குன்னே தெரியல

அந்த காட்சி கண்ணுல கண்ணுல வருது




மதுரை  ‘பைபாஸ் ரோடு’ மற்றும் அதன் அண்மைப் பகுதிகள்தான்,  என் சிறு, இள வயதுகளில் முழுமையாக நான் வாழந்த நிலம். அந்த  வெளிவட்ட சுற்றுச் சாலை, திருமங்கலம் வழியாக தெற்கிலிருந்து மதுரைக்கு  வரும் உந்துகள், நகர நெருக்கடிக்குள் நுழையாமல், திண்டுக்கலுக்கு, தேனிக்கு இட்டுச் செல்லும்.  இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு, கொடிக்கால் தோப்பு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, என தோப்புகளால் மட்டுமே வியாபித்து செழுமையாக இருந்தது இந்தப் பகுதி,  என ஒருவரிடம் நம்ப வைக்க முயன்றால், அது அதீத கற்பனை வளம் என போற்றப்படலாம் அல்லது மனநிலை காப்பக பரிந்துரைக்கு ஆளாக நேரலாம் . கம்பிபோட்ட தள்ளுவண்டியில் பொருட்கள் வாங்கும் குளிரூட்டப்பட்ட அங்காடிகளும், மின்பொருள் அங்காடிகளும்,   மொறு மொறு வறுத்த கோழிக் கடைகளும், கண்ணாடி மருத்துவமனைகளும், ஆடை உலகங்களும் , அடுக்கக இல்லங்களாலும் நிரம்பி நகரத்தின் முதன்மைப் பகுதிபோல இப்போது உருமாறியிருக்கிறது இந்த வட்டாரம்.


பம்பரம், கோலிக் குண்டு, (சிகரெட் சீட்டினை மண்ணில் அடுக்கி வைத்து  செவ்வக கல்லால் வீழ்த்தும்) சில்லாக்கு, 7 கற்கள், எறி பந்து, எறி சோளக்கட்டை,  கிட்டிப்புள், கபடி, கிரிக்கெட் என பரிணாம வளர்ச்சியுடன் நான் என் தோழர்களுடன் சிறு வயது விளையாட்டுகள் ஆடத் துவங்கியது இந்தச் சாலையின்  இருபுறங்களிலும் இருந்த புழுதிகளிலும், முன்பிருந்த புல்மேடுகளிலும், இளஞ்செம்மண் நிலத்திலும்தான். காலமாற்றத்தின் இரக்கமில்லாத காலடியில் மறைந்த அந்த முந்தையப் காலத்தின் சித்திரம்,  இளச்சிவப்பு புழுதியில் கலந்த வியர்வையின் ருசி போல, என் சிறுவயது நினைவுகளுடன் பிணைந்திருக்கிறது. என் நினைவினில் இன்றுமிருக்கிறார், சுருட்டப்பட்ட பட்டையான கயிறு போல, ஈரமான வாழைமட்டையில் அடுக்கடுக்காக  வெற்றிலையை சுற்றி தலையில் சுமந்து சென்று விற்கும் பழுப்பு  வேட்டிப் பெரியவர்.



சாலையை ஒட்டியப் பகுதிகள்  கருங்கற்கள் முள்வேலி கொண்டு,  பேக்கிங் செய்து பிளாட்டாக, அடுத்தடுத்து  விற்கப்பட்டன. சில மாதங்களில் அங்கு ஆற்றுமணல் கொட்டப்பட்டு,  கட்டிடங்கள் எழத்துவங்க அந்த சூழல் மாறியது. எங்கள் விளையாட்டிடம் சாலையின் அருகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நகர்ந்தது. இறுதியில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் ஓடிய ஒரு குறு ஓடையின் கரைக்கு ஒதுங்கியது. அம்மாவின் கடுஞ்சொற்களுக்குப் பயந்து ஓடையில் குளிக்கும் பழக்கம் இல்லாத நான், நண்பர்கள் ஓடையில் குளிக்க அவர்கள் ஆடை பாதுகாத்து, அருகிலிருந்த இலந்தைச் செடியில் பழம் பறிந்து தின்றிருக்கிறேன். மதுரையை விட்டு திருச்சி , ஹைதராபாத், சென்னை என சுற்றிய வெகுநாட்களுக்குப்பின்,  அது ஓடை அல்ல, வைகையின் துணை நதியாக பல நூறாண்டுகளாக ஒடி அந்த வட்டாரத்தையையே வெற்றிலை , வாழை, நெல் என செழிக்க வைத்த கிருதுமால் நதி என அறிந்தேன்.

கிருதுமால்’ ஆறு முதலில் காட்டாறாக தோன்றியிருக்கிறது.   நாகமலையின் செம்பாறைகளை ஆயிரமாண்டுகளாக அரித்து அள்ளி வளமான வண்டலாக்கி அது பாய்ந்த பகுதிகளிலெல்லாம்  பரப்பியிருந்திருக்கிறது. நான் வசித்தப் பகுதி, பொன் போல விளைந்த நெல்மணியைக் குறிக்கும் ‘பொன்மணி’ என்னும் முதற்பெயரிலிருந்து ‘பொன்மேனி’ யாக  வழக்கில் மாற்றப்பட்டிருந்திருக்கலாம். காவிரிக்கு கொள்ளிடம் ஆற்றினைப் போல, வைகை ஆற்றின் வெள்ள நீர் , துவரிமான் கண்மாயை நிரப்பிய பின், மிகை நீர்  கிருதுமால் நதியாக மதுரையின் எல்லைக்கு வெளியே நூறாண்டுகளாக ஓடியிருக்கிறது. கி.பி. 690-ம் ஆண்டு பாண்டிய மன்னன் அரிகேசரியால் வைகை ஆற்றில், சோழவந்தான் அருகே கால்வாய் வெட்டபட்டு, நாகமலையில் உற்பத்தியாகி ஓடும் காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார் என விக்கி கூறுகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே ஓடிய கிருதுமாலின் தண்ணீரில்தான் கூடலழகருக்கு நாள்தோறும் அபிசேகம் செய்யப்பட்டது என கூடற்புராணம், கிருதுமாலை கூடலழகர் அணிந்த மாலை என்று போற்றுகிறது.

இன்று அந்த நதி இல்லை.  பொன்மேனி, விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் எழுந்த கட்டிடங்களுக்குள் மனிதர்கள் தினமும் கழிக்கும் மலம், பல்துலக்கும் நீர், குளிக்கும் நீர் என எந்த வரையறையுமின்று, இந்த ஆற்றில் விடப்பட்டு இரு பத்தாண்டுகளுக்குள் துண்டு துண்டான சாக்கடையாக மாற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. நூறாண்டுகள்  முன்பு அங்கு வாழ்ந்த நம் மூதாதையனில் ஒருவன், ஆழ்துயிலில் இருந்து இன்று எழுந்து வந்து அந்தப் பகுதியை காண நேர்ந்தால், அவன் வழித்தோன்றல்கள், எந்த குற்றவுணர்வுமின்றி, அவன் தாயின் உடைமாற்றும் நேரத்தில் அவள் அறைக்குள் நுழைந்து, அவளின் உடுமாற்றுத் துணியையும் உருவி கூட்டு வன்புணர்வு செய்து கொண்டிருக்கும் காட்சியை காண்பவன் போல கடுஞ்சினம் கொள்வான்.


இன்றைய சூழலில் அர்பணிப்பும், சூழலுணர்வும்,  நேர்மறை எண்ணமும், கொண்ட மக்கள்குழுத் திரளின் நெடுங்கால அசராத உழைப்பு மட்டுமே இந்த ஆற்றை மீட்டெடுக்க முடியும்.  வெய்யிலின் இந்தக் கவிதை, கிருதுமால் நதியாக உருமாறி, சில வாரங்களாகவே என்னை அலைகழித்தது. கொள்ளையில் நின்ற கருவேலத்தூர் போல, நான்  முங்கிக் குளிக்காவிட்டாலும் அந்த அன்னையின் முலைப்பால் வாசனை , மனிதர்கள் அதன் நதிக்கரையில் கழித்து மக்கிய மலவாசனையை மீறி என்னுள் மணத்து, என்னை நிறைக்கிறது.




<நிறைவு>


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்