சிறகிழந்த பறவை

சுனீல் கிருஷ்ணனின் சிறுகதை - பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

என் முந்தைய அம்புப் படுக்கை வாசிப்பனுபவப் பதிவிற்குப் பிறகும், என் சிந்தனை அந்த தொகுப்பிலிருந்து  விலகவில்லை. கூண்டின் கொல்லனும், நாவன்னா லேன்னா செட்டியாரும் ஒரு மெல்லிய நூல் போல விடாமல் இழுக்கிறார்கள். கொல்லன் தன் பேச்சு சாதுர்யத்தால் மொத்த மக்களையும் மயக்கிப் பெற்ற,  எதிர்பார்ப்பை, செல்வாக்கினை, தன் திறனின்மையால் இழந்து விட்டு செய்வதறியாமல் விழிக்கிறான். அவனின் வெளிப்படையான கள்ள மௌனத்தையும் , அவன் சகாக்களின் அரசியல் கோமாளி நடிப்பையும், பேச்சையும் அவதானிக்கும்போது அனைவரையும் கூண்டிலிட்ட கொல்லன் நினைவு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்கிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  கணிணி , மின்தகடு, மிண்ணணு பொருட்கள் சைனா தரத்திலிருந்து, சுமாரான தரம், உச்சபட்ச தரம் என குவிந்து கிடக்கும். ஒரு முறை அங்கு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 45 அல்லது 50 வயது நபர் , தவிட்டு நிற சபாரி சூட்டுடன் கண்ணாடிக் கதவினைத் திறந்து,  முகம் முழுவதையும் மறைத்த ஒளி ஊடுருவும் கறுப்புத் துணிபோல முன் தொங்கிய முடிக்கற்றையுடன் அங்கு நுழைந்தார். முடிக்கற்றை சரிவதும் வலது கையால் சீர் செய்வதும், மூச்சு விடுவது போல தொடர்ந்து அனிச்சையாக செய்து கொண்டிருந்தார். முகம் முழுவதும் முக்கிய பாகங்கள் தவிர எங்கும் எஞ்சாமல், மையிடப்பட்ட கருந்தாடி. அவர் நகலெடுத்து மெலிந்த டி ராஜேந்தர் போலிருந்தார்.

அவர் மீதான பார்வையை தவிர்த்து, பொங்கி வந்த புன்னகையை உடலுக்குள் அடக்கி குலுங்கிக் கொண்டிருந்தேன். அவர் சலனமில்லாமல் வந்து, பேசி தன் பொருளை வாங்கிச் சென்றார். மிகை நடிப்பும், தேய்வழக்கு உரையாடல்களும், கொண்ட, சில கணங்கள் கூட தொடர்ந்து பார்க்க ஒவ்வாத டி ராஜேந்தரின் திரைக்காட்சிகளை என்றுமே தவிர்த்திருக்கிறேன். ஆனால்  கவனத்தை எங்கும் விலக்க விடாமல் கோரிய, ரிச்சி தெரு ஒல்லி டி ராஜேந்தர் தோற்றமும் உடல்மொழியும் என் நினைவினில் அழிக்க முடியாமல் பதிந்து விட்டது

அதன் பிறகுதான்  டி ராஜேந்தர் திரைப்பாடல்களை முன்முடிவுகள் இல்லாமல் முதன்முறையாகக் கேட்டேன். ‘வைகைக் கரை காற்றே நில்லு’ , ‘வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’ , ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’, ‘ஒரு பொன்மானை நான் பாட’ , ‘வசந்தம் பாடி வர’, ‘கதிரவனைப் பார்த்து’  எனக் கேட்டேன். பாலசுப்ரமணியம், யேசுதாஸ், ஜானகி அளித்த பங்கிற்கு பொதுமான மரியாதை கொடுத்த பிறகும், இந்தப் பாடல்களின் படைப்புத்திறனும், உணர்வெழுச்சியும் அந்த ஆளுமையின் மீதான சில முன்முடிவினை மாற்றி அமைத்தன. வேலையின்மையும், வறுமையும், அரசியல் நிலையின்மையும், சூழல் வெறுப்பும் மட்டும் நிறைந்த பின் 70களிலும் முன் 80களிலும் இந்த காதல் பாடல்கள் , ஒல்லி டி ராஜேந்தரின் இளம் மனதினை அழுத்தமாக பாதித்து அவரின் காதல் வெளிப்பாட்டிற்கு ஒரு வடிகாலாக அமைந்திருந்திருக்கிறது.


என் பார்வையில் நாவன்னா லேன்னா செட்டியாரின் இயல்புகளுடன்,  டி ராஜேந்தரும், டென்னிஸ் வீரர் ஆன்டி ராடிக்கும், பொருந்துகிறார்கள். இவர்களுக்கு பிறப்பிலிருந்தே அருளப்பட்ட திறனும், தங்கள் துறையில் இட்ட உழைப்பும், இவர்களின் துறைகளில் சம காலத்தில் நுழைந்து பின் சாதனையாளர்களான இளையராஜா, ரோஜர் பெடரர்வுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் குறைந்தல்ல. பிறகு ஏன் இவர்களிடம் நீடித்த திறன் வெளிப்பாடு நிகழவில்லை என்ற கேள்வி எழுகிறது.

லௌகீக சூழல் நெருக்கடி,  தொழில்நுட்ப யுகத்தின் தடை, தன்முனைப்பு, ஆணவம் என்ற ஏதோ ஒன்றின் பாதிப்பால் இவர்களின் படைப்புத்திறன் நீர்த்து தீர்ந்து போகிறது. சுனீலின் கதையிலிலும், புதிதாக வந்த கணிணி இளைஞனுக்கு கீழே வேலை புரிய நாவன்னா லேன்னாவின் மனம் உடன்படவில்லை.  இவர்களால் தான் அடைந்த முந்தைய உச்சத்தை அடைய முடியவில்லை. இவர்களுடன் இளையராஜா, ரோஜர் பெடரர், ஜெயமோகன் அவரவர்கள் துறையில், கலையில் நீடித்த குன்றாத திறன் வெளிப்பாடும், அதனால் அவர்களடைந்த உயரத்திற்கும் காரணம் என நான் கருதுவது

  • முதன் முதலாக சொற்களை அறிந்து அதனை அவற்றிற்கான பொருளுடன் கோர்க்கும் குழந்தை போல , அறிவதனைத்திலிருந்தும் அகத்தூண்டலுக்காக காத்திருப்பது.

  • அந்த கலையின் துறையின் வரலாற்றில் தங்கள் பங்கின்  எல்லை அறிந்த அடக்கமும், ,

  • எக்கணமும் தன்னை விட கலையை  முன்னிறுத்தி அணுகிய முறை

  • முன்னோடிகள் வகுத்த கோட்பாடுகளை அறிந்து பின் கட்டக்க முயலும் அக உந்துதல்

  • சூழல் நெக்கித் தள்ளும் ஒவ்வொரு  முறையும் புதிது புதிதாக வார்ப்புரு கொண்டு மீளும் நெகிழ்வுத்திறன்

  • எனத் தோன்றுகிறது. ஆன்டி ராடிக்கின், டி ராஜேந்தரின் தன்னிலை மறந்த மிகைநடிப்பையும், கவனத்தை கோரும் வலிந்து புரியும் குழந்தை சேட்டைகளும்,  கொல்லன் போன்ற அரசியல் சாதுர்ய கோமாளிகளுடனும்,, உள்ளீடற்ற வெற்று கவன ஈர்ப்பு மண்ணார் சாதிக், கல்பனா அக்காக்களுடனும் ஒத்து இருந்தாலும். இவர்கள் வேறு எனத் தோன்றுகிறது.  தாங்கள் எடையிழந்து பறந்து அடைந்த முந்தைய படைப்பு உயரத்தை மீண்டும் அடைய முயலும் சிறகிழந்து மரத்தில் சிக்கிய ஒரு பறவையின் படபடப்புடன் பொருத்தி பார்த்து புரிந்து கொள்கிறேன்.

    <நிறைவு>

    கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

    பறக்கை நிழற்தாங்கல் 2017

    சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்